இந்தக் கண்காணிப்பு வழியாக எதை நிறுவியிருக்கிறார்கள்..? ரிபப்ளிக் சேனலை சாடும் ஜெயமோகன்!

'சுப.உதயகுமார் மீது ரிபப்ளிக் சேனல் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பொய்யானது' என்று எழுத்தாளர் ஜெயமோகன் கருத்து தெரிவித்துள்ளார். 

Jeyamohan
 

அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் சேனல் சார்பாக நடத்தப்பட்ட ஸ்டிங் ஆபரேஷனில், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் பணத்துக்காக நடந்தது எனத் தெரியவந்துள்ளதாக, அந்த சேனல் பரபரப்பைக் கிளப்பியது.

ரிபப்ளிக் சேனலின் செய்தியாளர், உதயகுமாரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அங்கு நடந்த உரையாடல், ரகசியமாக கேமராவில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. செய்தியாளர் பேசுகையில், ‘இங்கிலாந்திலுள்ள என் பேராசிரியர் ஒருவர் அணுசக்திக்கு எதிரான உங்களது போராட்டத்துக்கு நிதியுதவி செய்ய முன்வந்திருக்கிறார். அவர் எந்த முறையில் உங்களுக்கு நிதியளிக்க முடியும்?’ என்று கேட்கிறார். 

அதற்குப் பதிலளித்த சுப.உதயகுமார், 'போராட்டக் குழுவுக்கு என்று வங்கிக் கணக்கு கிடையாது. அதனால், எங்களுக்கு உதவிசெய்ய விரும்பினால், ரொக்கமாகக் கொடுக்கலாம். அல்லது கட்சிக்கு உள்ள வங்கிக் கணக்கில் செலுத்தலாம். ஆனால், வெளிநாட்டிலிருந்து நேரடியாகப் பணத்தை அனுப்ப இயலாது. உள்ளூரிலுள்ள உங்களின் கணக்குக்கு அனுப்பி, பின்னர் எங்களது கட்சியின் கணக்கில் செலுத்தலாம்’ என்று பதிலளித்துள்ளார். இந்த வீடியோவை வெளியிட்ட ரிபப்ளிக் சேனல், அணு உலைக்கு எதிரான போராட்டம் பணத்துக்காக நடத்தப்படுவதாகக் குற்றம்சாட்டி பரபரப்பைக் கிளப்பியது. இது தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பதிவில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

அதற்குப் பதிலளித்துள்ள ஜெயமோகன்,  “உதயகுமாரைப் பற்றி நான் இன்றும் உறுதியாகச் சொல்லத்தக்க செய்தி, அவர் எளிய, நடுத்தரவர்க்க வாழ்க்கை வாழ்பவர் என்பதுதான். பணத்தின் மேல் இன்றும் அமராதவர். அவருடைய தனிப்பட்ட நேர்மைக்கு எனக்கு எந்த தொலைக்காட்சியின் சான்றும் தேவையில்லை.

அந்தப் போராட்டத்துக்கு, உதயகுமார் நன்கொடை பெற்றிருக்கலாம். அது, எவ்வகை நன்கொடை என்பதே முக்கியம். உலகமெங்கும் சூழலியல் போர்களுக்கு நிதியுதவிசெய்யும் தனியாரும் அறக்கட்டளைகளும் ஏராளமாக உள்ளன. அவற்றிடமிருந்து உதயகுமார் நன்கொடை பெற்றிருக்கலாம். அன்னிய அரசு அல்லது தனியார் தொழில்துறை சார்ந்த உதவிகளைப் பெற்று அந்தப் போராட்டத்தை நடத்தினார் என நிறுவப்பட்டிருந்தால், அது வேறு.

ரிபப்ளிக் டிவி-யின் அந்த உரையாடலிலும் முன்பு வெஸ்டர்ன் யூனியன் வழியாகச் சட்டபூர்வமாக நன்கொடை பெற்றதாகவே சொல்கிறார். கண்காணிப்புகளும் வழக்குகளும் இருப்பதால், கட்சி வழியாக அளிக்கும்படிச் சொல்கிறார். அதில் என்ன பிழை? அவர் நன்கொடைகள் பெற்றதில்லை என்று சொல்லியிருக்கிறாரா? நானே அவருக்கு நன்கொடையை நேரில் கொண்டுபோய் கையில் கொடுத்தேன்.

இந்தக் கண்காணிப்பு வழியாக எதை நிறுவியிருக்கிறார்கள் என உண்மையிலேயே புரியவில்லை. உதயகுமார், கூடங்குளம் போராட்டத்துக்கு ஒரு பேராசிரியர் சூழலியல் செயல்பாடுகளில் ஈடுபாடு காரணமாக நன்கொடை அளிக்கச் சித்தமாக இருக்கிறார் என்றால், அதைக் கட்சி வழியாகச் சட்டபூர்வமாகப் பெறத் தயாராக இருக்கிறார் என்றுதானே? “ என்று கேள்வியெழுப்பியுள்ளார் ஜெயமோகன்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!