வெளியிடப்பட்ட நேரம்: 10:42 (22/06/2017)

கடைசி தொடர்பு:12:04 (22/06/2017)

மீன்கள் அபகரிப்பு... கற்கள், பாட்டில்களைக் கொண்டு தாக்குதல்..! தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கைக் கடற்படை

ராமேஸ்வரத்திலிருந்து சேகர் என்பவரது படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் மீது, இலங்கைக் கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். கப்பலைக் கொண்டு மோதியதில், மீனவர்களின் படகு சேதமடைந்ததோடு, மீனவர்கள் பிடித்துவைத்திருந்த மீன்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர், இலங்கைக் கடற்படையினர். "இனிமேலும் எல்லைதாண்டினால் கொன்றுவிடுவோம்" என்று தமிழக மீனவர்களை எச்சரித்துச் சென்றுள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன் சட்டமன்றத்தில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "இலங்கைச் சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும் அவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறியிருந்தார். ஆனால், அவர் பேசிய மறுநாளே மண்டபத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர். இதனால் மீனவர்கள் தயக்கத்துடனேயே மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து சேகர் என்பவரது படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் டல்வின், ஜெகதீஷ், பழனிகுமார், எமனேஸ்வரன் உள்ளிட்ட 5 பேரை நள்ளிரவு பிடித்துச்சென்ற இலங்கைக் கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், கப்பலைக் கொண்டு மோதி படகையும் சேதப்படுத்தியுள்ளனர். இதன் பின் மீனவர்களை தங்கள் முகாமுக்கு இழுத்துச் சென்ற இலங்கை கடற்படையினர், ரப்பர் மற்றும் இரும்பு ராடுகளால் தாக்கியதுடன் அவர்கள் பிடித்துவைத்திருந்த மீன்களை அபகரித்துக்கொண்டனர். பின்னர், "இனிமேலும் எல்லைதாண்டி வந்தால் கொன்று போடுவோம்" என்று எச்சரிக்கை செய்து படகையும் மீனவர்களையும் விடுவித்துள்ளனர். அவர்களிடமிருந்து மீண்ட மீனவர்கள் இன்று காலை ராமேஸ்வரம் வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து தண்டபாணி என்பவரது படகில் மீன்பிடிக்கச் சென்ற சந்திரகுமார், வெற்றி, நாகராஜன், முகேஷ் ஆகிய நான்கு பேரையும் படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். இதன் மூலம் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. மேலும் படகுகளின் எண்ணிக்கை 150-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது.

இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து வரும் இந்த பிரச்னைகள் குறித்து தீர்வுகாண வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் போதெல்லாம் அவர்களை சமாதானப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஆனால், அந்த உத்தரவாதமெல்லாம் கடல் நீரில் எழுதிய எழுத்துகளாகவே இருந்துவருகிறது. மீன்பிடி தடைக்காலமான 61 நாள்கள் முடிந்து பல்வேறு கடன் சுமைகளுக்கிடையே மீன்பிடிக்கச் சென்றவர்களை அடுத்தடுத்து சிறைப்பிடித்துச் செல்லும் சம்பவங்கள் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன.