வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (22/06/2017)

கடைசி தொடர்பு:12:13 (22/06/2017)

பி.இ தேர்வை ரத்துசெய்யும் மத்திய அரசு, நீட் தேர்வைக் கைவிடுவதில் தயக்கம் ஏன்? ராமதாஸ் கேள்வி

''பொறியியல் படிப்பைப் போலவே, மருத்துவப் படிப்புக்கும் மாநிலங்களிடையே கருத்தொற்றுமை ஏற்படும் வரை, சிபிஎஸ்இ-க்கு இணையாக மாநிலப் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும் வரையிலும் நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு தற்காலிகமாக ரத்துசெய்ய வேண்டும்'' என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு போன்று பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காகத் தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு தற்காலிகமாகக் கைவிட்டிருக்கிறது. ஊரக, ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கதாகும். பொறியியல் படிப்புக்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டதற்காக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்த காரணம் குறிப்பிடத்தக்கது. "பொறியியல் படிப்புக்குப் பொது நுழைவுத்தேர்வு நடத்த தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு, மத்திய இடைநிலைக் கல்வி வாரிய  (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின்படிதான் நடத்தப்படவிருந்தது. ஆனால், தங்கள் மாநிலப் பாடத்திட்டம்,  மத்தியப் பாடத்திட்டத்தின் அளவுக்கு மேம்பட்டதாக இல்லை என்பதால், தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் எந்த அளவுக்குத் தேர்ச்சி பெறுவார்கள் என்று அந்த மாநிலங்கள் அச்சம் தெரிவித்தன. மேலும், அனைத்து மாநிலங்களிடமும் கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட்ட பிறகுதான், பொறியியல் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதனால்தான், அது ரத்துசெய்யப்பட்டுவிட்டது’’ என்று அனில் சகஸ்ரபுத்தே கூறினார்.

பொறியியல் பொது நுழைவுத்தேர்வை ரத்துசெய்வதற்காக தொழில்நுட்பக் கல்விக்குழு தெரிவித்துள்ள காரணங்கள் அனைத்தும் மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிக்கும் மற்றும் நுழைவுத்தேர்வுக்கும் (நீட்) பொருந்தும். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் பாடத் திட்டங்கள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்துக்கு இணையாகயில்லை என்றும், இதனால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள் என்பதால்தான், மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று சமூக நீதியில் அக்கறையுள்ள அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன. இதே காரணங்களின் அடிப்படையில், பொறியியல் பொது நுழைவுத் தேர்வை ரத்துசெய்துள்ள மத்திய அரசு, மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை மட்டும் ரத்துசெய்ய மறுப்பது ஏன் என்பது தெரியவில்லை. பொறியியல் படிப்பைவிட, மருத்துவப் படிப்புதான் ஊரக மாணவர்களுக்கு அவசியமாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வசிக்கும் நிலையில், 33 சதவிகித மருத்துவர்கள் மட்டுமே கிராமங்களில் சேவைசெய்கின்றனர் என்று 2014-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய சுகாதாரத் தொகுப்பு ஆய்வு முடிவுகளில் தெரியவந்திருக்கிறது. மருத்துவத்துறையின் புனித இதழ் என்று போற்றப்படும் லான்செட் இதழ் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில், இந்தியாவிலுள்ள 25,300 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8 சதவிகித மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை என்றும்,  மருத்துவர்கள் உள்ள மருத்துவமனைகளிலும் பெரும்பாலான நாள்களில் மருத்துவர்கள் வருவதில்லை என்பதால், கிராமப்புற மக்களுக்கு மருத்துவச் சேவை என்பது தொடர்ந்து தொடுவானமாகவே தோன்றுகிறது.

இத்தகைய சூழலில், கிராமப்புற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் மருத்துவம் படித்தால், தாங்கள் பிறந்து வளர்ந்த பகுதிகளில் சேவை செய்ய முன்வருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில்தான் கிராமப்புற மாணவர்களும் மருத்துவம் பயில வேண்டும் என்ற நோக்கத்துடன், நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று பா.ம.க தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. ஆனால், பொறியியல் படிப்புக்குக் காட்டும் சலுகையை மருத்துவப் படிப்புக்குக் காட்ட மத்திய அரசு மறுப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, நடப்பாண்டிற்கான நீட் தேர்வில் ஏராளமான குழப்பங்கள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் கடினமான வினாத்தாள் வழங்கப்பட்டு, மற்ற மாநிலங்களில் எளிமையான வினாத்தாள் வழங்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்திவருகிறது. நீட் தேர்வை நடத்திய சிபிஎஸ்இ அமைப்பு, இந்தாண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தியதில் குழப்பங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் நீட் தேர்வு விடைத்தாள்களைத் திருத்தி, அதன் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கு மாணவர்களைச் சேர்ப்பது எந்த அளவுக்குச் சரியாக இருக்கும் எனத் தெரியவில்லை. பொறியியல் படிப்பைப் போலவே, மருத்துவப் படிப்புக்கும் மாநிலங்களிடையே கருத்தொற்றுமை ஏற்படும்  வரையிலும், சிபிஎஸ்இ-க்கு இணையாக மாநிலப் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும் வரையிலும் நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு தற்காலிகமாக ரத்துசெய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.