' கட்சியும் நான்தான்; ஆட்சியும் நான்தான்!' - தினகரனைப் பதற வைத்த எடப்பாடி பழனிசாமி | Edapadi Palanisamy dares TTV Dhinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (22/06/2017)

கடைசி தொடர்பு:15:07 (22/06/2017)

' கட்சியும் நான்தான்; ஆட்சியும் நான்தான்!' - தினகரனைப் பதற வைத்த எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை அதிர்ச்சியோடு கவனித்து வருகிறார் டி.டி.வி.தினகரன். 'இஃப்தார் விருந்து, பா.ஜ.கவின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு' என அனைத்து இடங்களிலும் தன்னையே முன்னிலைப்படுத்துகிறார் முதல்வர். ' ஆட்சிக்கு எதிராக தினகரன் தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொண்டால், சசிகலா குடும்பத்தை ஜெயலலிதா எப்படி நடத்தினாரோ, அதே பாணியை நோக்கி எடப்பாடி பழனிசாமி நகர்வார்' என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர். 

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக வளாகத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு விழாவை நேற்று நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ' இந்த விழாவுக்குத் தினகரனை தலைமையேற்க வைக்க வேண்டும்' என்ற அதிருப்தி எம்எல்ஏ-க்களின் குரல்களை, முதல்வர் அலுவலகம் கண்டுகொள்ளவில்லை. நேற்று அடையாறு வீட்டில் தினகரனைச் சந்தித்துப் பேசியுள்ளனர் கட்சி நிர்வாகிகள் சிலர். ஆட்சி செல்லும் பாதை குறித்தும் அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்தும், அவரிடம் விவாதித்துள்ளனர். இதற்கெல்லாம், எந்தப் பதிலும் கொடுக்காமல் வீட்டுக்கு வந்தவர்களை உபசரித்து அனுப்பினார் தினகரன். இஃப்தார் விழா முடிந்த பிறகு, கட்சி அலுவலகத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசித்துவிட்டு வெளியே வந்த முதல்வர், ' பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பது என்று ஒருமனதாக தீர்மானித்துள்ளோம்" என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவில்லை. 

தினகரன்" ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரையில் தினகரனோடு இணைந்து பணியாற்றிய அமைச்சர்கள் எல்லாம், அவர் சிறைக்குச் சென்றவுடன் அடியோடு மாறிவிட்டனர். 'டெல்லியின் சொல்படி ஆடுகிறார்கள்' என்றாலும், 'பொதுச் செயலாளரால் கொண்டு வரப்பட்ட நிர்வாகி' என்ற அடிப்படையில்கூட, தினகரனோடு பேசுவதற்கு இவர்கள் தயாராக இல்லை. ' பன்னீர்செல்வம் வழியிலேயே எடப்பாடி பழனிசாமியும் துரோகம் செய்கிறார்' எனக் கட்சி நிர்வாகிகள் சிலர் கொதிக்கின்றனர். சசிகலா குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலைத் தனக்குச் சாதகமாகப் பார்க்கிறார் முதல்வர் பழனிசாமி. 'அவர்களுக்குள் அடித்துக் கொள்ளட்டும்' என அமைதியாக இருக்கிறார். ஒரு சில எம்எல்ஏ-க்களைத் தவிர, அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கமே நிற்கின்றனர். ' இந்த ஆட்டத்தைக் கலைக்காதவரையில், தனக்கு மரியாதை கிடைக்கப் போவதில்லை' என்பதை உணர்ந்து வைத்திருக்கிறார் தினகரன். ' கட்சி அலுவலகத்துக்குள் நேரிடையாக வந்து அமர்ந்தால், எடப்பாடியால் என்ன செய்துவிட முடியும்?' எனவும் ஆதரவாளர்களிடம் கொதிப்பை வெளிக்காட்டினார். அடுத்துச் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசி வருகிறார் தினகரன். எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கும் சில தகவல்களைக் கொண்டு செல்ல இருக்கிறார்" என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். 

கொங்கு மண்டல அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " சசிகலா குடும்பத்தை எந்த இடத்திலும் முன்னிலைப்படுத்த, எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. இதுதான் எதார்த்த நிலவரம். கட்சியிலும் ஆட்சியிலும் தினகரனை மைனஸாகத்தான் பார்க்கிறார். தன்னிடம் சமாதானம் பேச வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் முதல்வர் இல்லை. 'முதல்வராக பன்னீர்செல்வம் செயல்பட்டதைவிட, தான் திறமையானவன்' என்பதை நிரூபிக்க முயல்கிறார். அவரிடம் பேசும் கொங்கு மண்டல நிர்வாகிகள், ' சசிகலா குடும்பத்தைச் சார்ந்துதான் பன்னீர்செல்வம் இருந்தார். ஆனால், நீங்கள் அப்படி அல்ல. தலைமையேற்று நடத்தக் கூடிய தலைமைப் பண்பு உங்களுக்கு இருக்கிறது. இன்று பன்னீர்செல்வத்துக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதற்குக் காரணம், சசிகலா குடும்பத்தை அவர் எதிர்ப்பதுதான். உங்களுக்குக் கொங்கு மண்டலம் தவிர, மற்ற இடங்களில் செல்வாக்கு இல்லாததற்குக் காரணம், சசிகலா குடும்பத்திலுள்ள சிலர், உங்களோடு ஒட்டிக் கொண்டிருப்பதுதான். இவர்களை ஒரேநாளில் விலக்க முடியாது. காலப்போக்கில் அவர்களாக விலகிவிடுவார்கள். அவர்கள் குடும்பத்தை அருகில் வைத்திருப்பதே மைனஸ் என உளவுத்துறையின் அறிக்கைகளும் சுட்டிக் காட்டுகின்றன. அவர்களை மையமாக வைத்து அரசியல் நடத்தினால், உங்கள் செல்வாக்கும் பாதிக்கப்படும்' எனக் கூறியுள்ளனர். இந்தத் தகவலை எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக் கொண்டார். 

நேற்று நடந்த இரண்டு நிகழ்ச்சியிலும், ' கட்சியும் நான்தான்; ஆட்சியும் நான்தான்' எனக் குறிப்பால் உணர்த்திவிட்டார். தினகரன் தரப்பினரிடமிருந்து இடையூறு வருவதைப் பார்த்து, அவர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ' எந்தவித சிக்கலும் இல்லாமல் ஆட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர். அவருக்குச் சசிகலா குடும்பத்திடமிருந்து எந்தவித இடையூறும் வரக் கூடாது. அப்படி வந்தால், ஜெயலலிதா உங்களை எப்படிக் கையாண்டாரோ, அதே பாணியைக் கையாள வேண்டிய நிலை ஏற்படும். இது மோடியின் உத்தரவு' எனக் கூறியுள்ளனர். இதனையடுத்து, எந்த நடவடிக்கைகளையும் வேகப்படுத்தாமல் அமைதி காக்கிறார் தினகரன். அதேபோல், 'கட்சி இணைப்பு' என்ற பெயரில் தினகரனோடு பன்னீர்செல்வம் அமைதியாகப் போனாலும், அவர் பக்கம் இருக்கும் கே.பி.முனுசாமி உள்ளிட்ட சீனியர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் வந்துவிடுவார்கள் என்பதால், கூடுதல் நம்பிக்கையில் வலம் வருகிறார் முதல்வர்" என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர்.


டிரெண்டிங் @ விகடன்