அ.தி.மு.க எம்எல்ஏ-க்கள் பேர விவகாரம்: மு.க.ஸ்டாலின் வழக்கில் முதல்வர் பதில் மனுத்தாக்கல்!

அ.தி.மு.க எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்டதாக வெளியான வீடியோவை அடுத்து, அந்த விவகாரத்தில் சி.பி.ஐ தலையிட்டு விசாரணை நடத்திட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இதுகுறித்து முதல்வர், நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவிவருகிறது. குறிப்பாக, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், டி.டி.வி என்று மூன்று அணிகளாகத் தற்போது அ.தி.மு.க இயங்கிவருகிறது. முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, கூவத்தூரிலிருந்த அ.தி.மு.க எம்எல்ஏ-க்களுக்கு ஓ.பி.எஸ், சசிகலா அணியினர் கோடிகளில் பேரம் பேசியதாக ஒரு வீடியோவை, 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி சமீபத்தில் வெளியிட்டது.

இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பதில் மனுவில், 'தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு விஷயத்தில் சி.பி.ஐ, வருவாய் புலனாய்வுத்துறை தலையிட முடியாது. எம்எல்ஏ-க்கள் பேர விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!