Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காக்கி டு கரைவேட்டி: ஒரு காவல்துறை அதிகாரியின் அரசியல் என்ட்ரி

ஒரு காவல்துறை அதிகாரியின் பணிநிறைவுப் பாராட்டு விழா, அரசியலுக்கு அடித்தளம் போட்டிருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு மிகப் பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார் என்பதுதான், தஞ்சை மாவட்ட அரசியல் பிரமுகர்களையும் அதிரவைத்திருக்கிறது. 


 

1987-ல் காவல்துறையில் எஸ்ஐ பணியில் சேர்ந்தவர் சிவபாஸ்கரன். தருமபுரி, வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், கரூர் எனப் பல மாவட்டங்களில் பணியாற்றியவர்.  ரவுடிகள், தாதாக்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை  இவருடைய பெயரை உச்சரித்தார்கள். இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி எனப் பதவி உயர்வுபெற்று கும்பகோணத்தில் பணியாற்றியவர். பின்னர், சென்னை தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம் ஏசியாகப் பணியாற்றினார்.  கடந்த 31-ம் தேதி பணிஓய்வுபெற்ற இவரின் பாராட்டுவிழாதான் அனைவரையும் பேசவைத்திருக்கிறது. இவருடைய சொந்த ஊர், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள கீழநம்மங்குறிச்சி.

பட்டுக்கோட்டைக்கு அரசியல் தலைவர்கள் வந்தால் எப்படி பிரமாண்ட பிளக்ஸ்கள் வைக்கப்படுமோ, அந்த அளவுக்கு தெருவெங்கும் பிளக்ஸ்கள் முளைத்திருந்தன. கும்பகோணம் மகாமகத்தில் பணியாற்றியதால், 'மகாமக நாயகனே', 'நேர்மைக்குப் பாராட்டுவிழா' என்றெல்லாம் பிளக்ஸ் வைத்து அசத்தியிருந்தார்கள் சிவபாஸ்கரின் ஆதரவாளர்கள். 10,000 அழைப்பிதழ்கள், விதவிதமான அசைவ உணவுகள், சைவ உணவுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் லோக்கல் அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் ஆஜராகியிருந்தார்கள். 8,000 பேருக்கு மேல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்தியிருக்கிறார்கள்.

 
சசிகலாவின் தம்பி திவாகரன், முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். திவாகரன் வரவில்லையாம். சசிகலா வீட்டு நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் உடனே ஆஜராகிவிடுவார் சிவபாஸ்கர். ஜெயலலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரம் முதல் சசிகலா பொதுச் செயலாளர் ஆனது வரை கூடவே இருந்து பாதுகாப்புக் கொடுத்தவர் சிவபாஸ்கர். இந்தப் பரிச்சயம்தான் சிவபாஸ்கரை அரசியலுக்கு என்ட்ரி கொடுக்கும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது என்கிறார்கள்.

எல்லா தரப்பு அரசியல் பிரமுகர்களையும் தன்னுடைய கையில் வைத்திருக்கக்கூடியவர். பணிக்காலத்தில் தன்னை நாடி வருபவர்களுக்கு முடிந்தவரை உதவிசெய்து அனுப்பும் மனோபாவம்கொண்டவர். யாராக இருந்தாலும் தன்னை காவல்துறை அதிகாரியாக காட்டிக்கொள்ள மாட்டார். புகார் கொடுக்க எந்த அரசியல்வாதி வந்தாலும், 'அண்ணன்' போட்டுதான் பேச்சை ஆரம்பிப்பார். இதையெல்லாம் முன்வைத்து 'நீங்கள் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்குமே' என்று அரசியல் பிரமுகர் ஒருவர் சொன்னாராம். அதையெல்லாம் ரிட்டயர்மென்ட் ஆகட்டும், பார்த்துக்கலாம் என்று சொல்லி வழியனுப்பினாராம் சிவபாஸ்கர். அதை நிறைவேற்றும் விதமாகத்தான் பிரமாண்ட பணிஓய்வுப் பாராட்டு விழாவை பட்டுக்கோட்டையில் நடத்தியிருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இன்னும் சிலரோ, மற்ற கட்சிகளைவிட அ.தி.மு.க-வினரிடம் ரொம்ப நெருக்கமாக இருப்பார். ஒருமுறை திவாகரன், 'யார் அந்த சிவபாஸ்கர்' என்று கேட்டு ஹிஸ்ட்ரியை வாங்கினாராம். அதன்பிறகு, திவாகரனுக்கும் சிவபாஸ்கருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் தி.மு.க.காரராக இருந்தாலும், முடிவில் அ.தி.மு.க.காரராக மாறிப்போய்விட்டார் என்கிறார்கள். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement