தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் உயிரிழந்த யானை!


 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனப்பகுதியில் வயது முதிர்வால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பெண் யானை,  தண்ணீர் குடிக்க முடியாமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தது.

கடந்த 20-ம் தேதி, சிறுமுகை வனப்பகுதியில் சுமார் 50 வயதுக்கும் மேலுள்ள ஒரு பெண் யானை உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்தது. உடனடியாக வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழு அந்த யானையை மீட்டு சிகிச்சையளித்தது. சிகிச்சைக்குப் பின் அந்த யானை எழுந்து நடந்தது. காட்டுக்குள் விடப்பட்ட யானை இன்று பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து சிறுமுகை வன அலுவலர் மனோகரனிடம் பேசினோம். "அந்த யானைக்கு 50 வயதுக்கும் மேல் இருக்கும். உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டது. பற்கள் எல்லாம் கொட்டிவிட்டன. 20-ம் தேதி மீட்டு அதற்குத் தேவையான சிகிச்சையளித்தோம், சிகிச்சையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. உடனடியான ஒரு கிரேன் வரவழைத்து யானையைத் தூக்கி நிறுத்தினோம். எழுந்து நின்ற யானை மெல்ல நடந்தது. பிழைத்துக்கொள்ளும் என்று காட்டுக்குள்விட்டோம். இன்று காலை 8 மணிக்கு தண்ணீர் குடிப்பதற்காக பவானி சாகர் நீர்பிடிப்புப் பகுதிக்கு வந்திருக்கிறது. அப்போது, தண்ணீர் குடிக்க முடியாமல் மயங்கி விழுந்து இறந்துவிட்டது. இந்த உயிரிழப்பு வருத்தம்தான். ஆனால், வயது முதிர்வால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க முடியாது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!