வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (22/06/2017)

கடைசி தொடர்பு:17:24 (22/06/2017)

ஆந்திர எல்லையில் தமிழக மீனவர்கள் 300 பேர் சிறைபிடிப்பு!

சென்னை, காசிமேடு பகுதியிலிருந்து ஆந்திர எல்லைக்கு மீன்பிடிக்கச் சென்ற 300 தமிழக மீனவர்களை, அம்மாநில மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர். 

காசிமேடு மற்றும் அதன் பக்கத்தில் இருக்கும் பகுதிகளிலிருந்து ஆழ் கடலில் மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் ஆந்திர எல்லை வரை போய் வருவது வழக்கம். இப்படி மாநில எல்லைதாண்டி பல ஆண்டுகளாகத் தமிழக மீனவர்கள், மீன் பிடிக்கச் செல்வது சாதாரணம்தான். ஆனால், தமிழக அரசு விதித்த தடைக்காலம் முடிந்து இந்த முறை காசிமேட்டிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை, ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர். இன்று 30 படகுகளில் கிட்டத்தட்ட 300 தமிழக மீனவர்கள் ஆந்திர ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.  தமிழக மீனவர்களையும் அவர்கள் படகுகளையும் சிறைபிடித்துள்ளனர், ஆந்திர எல்லைப்பகுதியில் இருந்த அம்மாநில மீனவர்கள். பின்னர் அவர்களிடம் படகு ஒன்றுக்கு தலா 2 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. 

இந்தத் தகவல் அறிந்த காசிமேடு பகுதி மீனவர்கள், அங்கு சிக்கியிருக்கும் மீனவர்களைப் பேச்சுவார்த்தை மூலம் விடுவித்து அழைத்து வர ஆந்திராவுக்குக் கிளம்பியுள்ளனர். அப்படி ஆந்திர மீனவர்கள் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஒத்துவரவில்லை என்றால், காசிமேட்டில் இன்று மாலையிலிருந்தே வேலைநிறுத்தத்தில் ஈடுபட தமிழக மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர். பக்கத்து மாநில மீனவர்களே இப்படி சிறைபிடிப்பு வேலையைச் செய்தது காசிமேடு பகுதி மீனவர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது.