வெளியிடப்பட்ட நேரம்: 20:41 (22/06/2017)

கடைசி தொடர்பு:20:41 (22/06/2017)

விஜய் பிறந்தநாளில் வித்தியாசமான கொண்டாட்டம்!


நடிகர் விஜய் பிறந்த நாளான இன்று நெல்லையைச் சேர்ந்த ரசிகர்கள் வித்தியாசமான முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர். 43 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டியும் 400 மீட்டர் நீளத்துக்கு போஸ்டர்களை ஒட்டியும் உற்சாகமாக கொண்டாடினர்.

Vijay Birthday

 

நடிகர் விஜய்யின் 43-வது பிறந்த தினத்தை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடி மகிழ்ந்தனர். இதுவரை இளைய தளபதி என்ற அடைமொழியுடன் இருந்த நிலையில், அவரது ’மெர்சல்” திரைப்படத்தில் தளபதி என்கிற அடைமொழி குறிப்பிடப்பட்டு இருந்ததால் அதனையே சுவரொட்டிகளில் ரசிகர்களும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டியும் ஃபிளக்ஸ் பேனர்கள் வைத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பாக 43 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தின்போது ரசிகர்கள் மட்டும் அல்லாமல் பொதுமக்களும் பங்கேற்றனர். அனைவருக்கும் கேக் பரிமாறப்பட்டது. சாலையின் ஓரங்களில் விஜய்யை வாழ்த்தி பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஆங்காங்கே ரசிகர்கள் திரண்டு பிறந்த நாளைக் கொண்டாடி தங்களுக்குள்ளாகவே வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். 

இந்த நிலையில், நெல்லை தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலத்தில் 400 மீட்டர் நீளத்துக்கு விஜய்யின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சாலையின் இரு பக்கமும் உள்ள சுவர்களை ரசிகர்கள் போஸ்டர்களால் அலங்கரித்துள்ளனர். விஜய்யின் பல வண்ணப் புகைப்படங்கள் மட்டும் அல்லாமல் சிறந்த கருத்துகளைக் கொண்டதாகவும் போஸ்டர்கள் அமைந்துள்ளன. வழக்கமான பாணியில், ’தமிழ்நாட்டின் எதிர்காலமே’, ’மண்ணின் மைந்தரே’, ’‘தளபதியே’, ’எங்களின் உயிரே’ போன்ற வாசகங்கள் மட்டும் அல்லாமல் சிந்தையைக் கவரும் வாசகங்களையும் ரசிகர்கள் போஸ்டர்களாக ஒட்டியுள்ளனர்.

Vijay Birthday

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கும் இந்த பிறந்தநாள் போஸ்டர்களில் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். ’உழவு என்பது தொழில் மட்டும் அல்ல, உயிரின் ஆதாரமும் கூட!’ என ஒரு போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், ’விவசாயியைப் பாதுகாப்போம், விவசாயத்துக்கு தோள் கொடுப்போம்’ என சூளுறைத்த போஸ்டரும் இடம் பெற்றிருந்தது. அனைத்துக்கும் மேலாக, ‘கடைசி மரமும் வெட்டுண்டு.. கடைசி நதியும் விஷமேறி.. கடைசி மீனும் பிடிபட.. அப்போதுதான் உறைக்கும் மனிதன் பணத்தைச் சாப்பிட முடியாதென்று..” என்பது போன்ற சமூக அக்கறை கொண்ட வாசகங்கள் இடம்பெற்று இருந்தன.

விஜய்யைப் புகழ்ந்தும் பாராட்டியும் வாழ்த்துத் தெரிவித்தும் இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் வாகன ஓட்டிகளையும் வாகனங்களில் செல்லும் பயணிகளையும் வெகுவாகக் கவர்ந்தன.