கீழடி - சுப.வீரபாண்டியனை வாழ்த்திய கமல்ஹாசன் | Actor kamal hassan Praises Prof.Subavee

வெளியிடப்பட்ட நேரம்: 00:51 (23/06/2017)

கடைசி தொடர்பு:09:34 (23/06/2017)

கீழடி - சுப.வீரபாண்டியனை வாழ்த்திய கமல்ஹாசன்

கீழடி

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் 'கீழடி-ஆய்வுக் கருத்தரங்கம்' சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமை வகித்தார். தொல்லியல் ஆய்வாளர் மதுரை சொ.சாந்தலிங்கம் மற்றும் எழுத்தாளரும், த.மு.எ.க.ச செயலாளர் சு.வெங்கடேசன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம் பேசுகையில் 'கீழடி தொல்லியல் ஆய்வு முதன்மையானதுதான் என்ற போதிலும் புலிமான் கோம்பை, கொடுமணல், ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் செய்யப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த அரிய தொல் கண்டுபிடிப்புகளைப் போன்றதுதான். தற்போதைய சமூக ஊடக விழிப்புஉணர்வின் காரணமாகவே இதற்கு அதிக வெளிச்சம் கிடைக்கிறது. அதேபோல் தமிழக தொல்லியல் துறைக்குப் பெரியளவில் அரசின் ஒத்துழைப்பு இல்லை. தங்கம் தென்னரசுக்குப் பிறகு அந்தத் துறையில் பொறுப்புக்கு வந்த எந்த அமைச்சருக்கும் ஈடுபாடே இல்லை', என்றார்.

கீழடி

எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசுகையில், 'சிந்து சமவெளி நாகரிகத்துக்கு ஈடான ஒன்றாக வைகை நதி நாகரிகம் இருக்கிறது. வைகை நதியின் தோற்றுவாயிலிருந்து அது முடியும் அழகன்குளம் வரையில் செய்யப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த வரலாற்றுப்பொருட்களே இதற்குச் சான்று. இல்லாத சரஸ்வதி நதியைத் தேடுவதற்கு பலநூறு கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ள மத்திய அரசு தமிழர்களின் நதிக்கரை நாகரிகத்தின் சாட்சியாக விளங்கும் கீழடி ஆய்வுக்குச் சில லட்சங்களைக் கூட ஒதுக்க மறுக்கிறது. இங்கு ஆய்வு செய்த அதிகாரியை வேண்டுமென்றே அசாமில் ஒரு அருங்காட்சியகத்தில் கண்காணிப்பாளராக அமர வைத்திருக்கிறார்கள். இதுவரை வெறும் அரை சதவிகிதமே அந்த இடத்தில் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. இன்னும் பலமடங்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், மத்திய அரசு ஏதோ உள்நோக்கத்துடன் கீழடி அகழாய்வில் செயல்படுவதாகத்தான் கருதவேண்டியுள்ளது. ஆனால் உண்மை பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து அகழாய்வு வெளிவந்ததைப்போல் வெளிவரும் தடுக்க முடியாது', என்றார். 

 நடிகர் கமல்ஹாசன் இந்த ஆய்வுக் கருத்தரங்கையும், சுப.வீரபாண்டியனையும் டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார். அதில், 'தோழர் சுப.வீரபாண்டியன் நடத்தும் இம்மாலை நிகழ்ச்சி வெற்றியின் முதற்படி. தமிழனின் பெருமை கீழடியில் கிடப்பதை அனுமதியாத இவ்வறப்போர் தொடரும்', எனக் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க