ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, எல்லாம் மாறிப்போச்சு! அற்புதம்மாள் கவலை

அற்புதம்மாள்

'பேரறிவாளனுக்குப் பரோல் தராதது அதிர்ச்சியளிக்கிறது' என்று கூறிய அற்புதம்மாள், 'ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு எல்லாம் மாறியிருப்பது கவலையளிக்கிறது' என்று வேதனை தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு, பரோல் வழங்க தமிழக அரசு மறுத்துவிட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோரைக் கவனித்துக்கொள்வதற்காக 30 நாள்கள் பரோல் வழங்கும்படி பேரறிவாளன் விடுத்த கோரிக்கையைச் சிறைத்துறை நிராகரித்தது.

"பேரறிவாளன் மத்திய சட்டங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருப்பதால், தமிழ்நாடு தண்டனை நிறுத்தச் சட்டத்தின்படி அவருக்குச் சாதாரண விடுப்பு வழங்க முடியாது" என்று வேலூர் மண்டல சிறைத்துறைத் துணைத் தலைவர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அனுப்பிய மேல்முறையீட்டு மனு, கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

இதனிடையே, பேரறிவாளனை உடனடியாக பரோலில் விடுதலைசெய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. ஆளும் கட்சியின் ஆதரவு எம்எல்ஏ-க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் இன்று சபாநாயகர் தனபாலை சந்தித்துப் பேரறிவாளனை பரோலில் விடுவது தொடர்பாக, சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இந்த நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், இன்று சென்னையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், ''பேரறிவாளனுக்குப் பரோல் தராதது அதிர்ச்சியளிக்கிறது.''
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, எல்லாம் மாறியிருப்பது கவலையளிக்கிறது. மத்திய சட்டத்தின்கீழ் கைது எனக் கூறி பரோல் மறுத்திருப்பது சரியல்ல" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!