தினகரன் திடீர் பல்டி...இணைந்த இரு அணிகள்!

 

தினகரன்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் மற்றொரு அணியாகவும் அ.தி.மு.க. பிளவுபட்டு செயல்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றதும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்வரை கட்சியில் முழுவீச்சில் செயல்பட்டார், துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். ஆனால், இரட்டை இலைச்சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர், தினகரன் செயல்பாட்டில் சற்றே பின்னடைவு ஏற்பட்ட போதிலும், ஜாமீனில் வெளியே வந்ததும், அவருக்கு 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

கட்சியின் எந்த முடிவானாலும் அதை தலைமைக்கழகம்தான் எடுக்கும் என்றும், அமைச்சர்கள் கட்சியின் செயல்பாட்டில் தலையிட முடியாது என்றும் தெரிவித்ததோடு, அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் துணைப்பொதுச்செயலாளரான தனக்கு உண்டு என்று அரசியல் சூட்டைக் கிளப்பினார் தினகரன்.

ராம்நாத் கோவிந்த்இந்தநிலையில்தான், பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டு, அவருக்கு அனைத்துக்கட்சிகளின் ஆதரவை பி.ஜே.பி கோரியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி பேசி ஆதரவு கேட்டதைத்தொடர்ந்து, அ.தி.மு.க அம்மா அணியின் ஆதரவை அறிவித்தார் எடப்பாடி. ஆனால், அதனை மறுக்கும் வகையில், துணைப்பொதுச்செயலாளரான தினகரனும், கட்சியின் பேச்சாளரான நாஞ்சில் சம்பத்தும் கருத்து தெரிவித்திருந்தனர். தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் அவசரமாகக் கூடி விவாதித்தனர்.

இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, "சசிகலாவின் ஒப்புதலுடன்தான் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க-வின் ஆதரவைத் தெரிவித்தார். தலைமைக்கழகம் என்பது சசிகலாவை உள்ளடக்கியதுதான்" என்று தெரிவித்து பரபரப்பை மேலும் அதிகரிக்கச்செய்தார். என்றாலும், துணைப்பொதுச்செயலாளர் என்ற முறையில் தினகரன், வேறுவழியில்லாமல் அ.தி.மு.க தலைமைக்கழகம் சார்பில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு என்று தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சசிகலா ஒப்புதலோடு அந்த அறிக்கை வெளியிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தினகரனை ஆதரிக்கும் எம்எல்ஏ-க்களும் பி.ஜே.பி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதைத்தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மேலும், இரட்டை இலைச் சின்னத்தை தனது அணிக்குப் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டின்பேரில், தினகரன் கைதாகி, ஒரு மாதத்துக்கும் மேலாக சிறையில் இருந்தார். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள போதிலும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள ஃபெரா வழக்கு உள்பட வேறுசில வழக்குகளும் தினகரனுக்கு எதிராக விசாரணையில் உள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஜே.பி-க்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க அ.தி.மு.க.-வின் இரு அணிகளுமே எடப்பாடி - ஓ.பி.எஸ்தயாராக இல்லை என்பதால், ஆதரவு தெரிவித்து விட்டன. சசிகலா குடும்பத்தின் தலையீடு கட்சியில் இருப்பதாகக் கூறி தனி அணியாகச் செயல்பட்டு வரும் ஓ.பி.எஸ்ஸூம் பி.ஜே.பி-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யும் நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டனர்.

பிரிந்து செயல்படும் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி இதுவரை முடியா விட்டாலும், குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்புமனுத்தாக்கலின்போது முன்னாள் முதல்வரும், தற்போதைய முதல்வரும் ஒன்றாகக் கலந்து கொண்டது, இணைப்புக்கான முன்னோட்டமாக இருக்குமா என்று கட்சித் தொண்டர்கள் எதிர்நோக்கி உள்ளனர். 'சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் கட்சியை விட்டு நீக்கினால்தான் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம்' என்று தெரிவித்த ஓ.பி.எஸ், குடியரசுத்தலைவர் தேர்தலில் எப்படி இரு அணியினரும் ஒருமித்த கருத்தை எடுத்தனர் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

கட்சியின் இரு அணிகளும் இணைகிறதோ, இல்லையோ முன்னாள் முதல்வரையும், இந்நாள் முதல்வரையும் ஒரே நிகழ்ச்சியில் (வேட்புமனுத்தாக்கலின்போது) பங்கேற்கச் செய்த பெருமை பி.ஜே.பி-யையும், பிரதமர் மோடியையுமே சேரும். வாழ்க மோடி ஜனநாயகம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!