விஜயபாஸ்கர் விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க தி.மு.க வலியுறுத்தல்!

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் கிடைத்த தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் காவல்துறைக்கு அனுப்ப தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். 


விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனைகள் குறித்து தி.மு.க சார்பில் அக்கட்சியின் எம்.பி கனிமொழி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, 'தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த கடிதத்தைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அளித்தேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் முதல்வர் உள்பட முக்கிய அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய விவரம் வருமான வரித்துறையினருக்குக் கிடைத்தது.

ஆனால், அந்த விவரங்கள் காவல்துறைக்கு வழங்கப்படவில்லை. அதனால் காவல்துறையினர் அவர்களின், முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தெரியாத நபர் என்று குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று செய்தியாளர்களை முதல்வர் இல்லத்துக்கு அனுமதிக்காத செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பெண் நிருபர்களை இரவில் காக்க வைத்த செயல் அவமானகரமானது' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!