வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (23/06/2017)

கடைசி தொடர்பு:20:31 (23/06/2017)

'பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுவிப்பு குறித்து ஆலோசித்து முடிவு' - நிர்மலா சீதாராமன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர் பேரறிவாளன். இந்நிலையில், பேரறிவாளனை பரோலில் விடுவிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால், அவரது பரோல் மனுவை வேலூர் சிறை கண்காணிப்பாளர் நிராகரித்துவிட்டார். இதையடுத்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.


இந்நிலையில், இந்த விவகாரத்தை அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கையில் எடுத்துள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிப்பது குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை அவர்கள் இன்று சந்தித்தனர். மேலும், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் இந்தச் சந்திப்பின்போது உடனிருந்தார்.

இதனிடையே, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம், "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து முடிவெடுக்கும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை, மத்திய சுகாதாரத்துறை விரைவில் அறிவிக்கும்" என்று கூறினார்.