வெளியிடப்பட்ட நேரம்: 15:34 (24/06/2017)

கடைசி தொடர்பு:15:34 (24/06/2017)

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக் காலம் நீட்டிப்பு... மசோதா நிறைவேற்றம்!

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை  நீட்டிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

TN Assembly


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதனால், அந்தப் பதவிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பதவிக்காலம்  கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்தது. இதையடுத்து, அவர்களின் பதவிக் காலம் மேலும், ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.


இதனிடையே, அந்த ஆறு மாதக் காலகட்டம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் பதவி காலத்தை நீட்டிக்கும் மசோதாவை அமைச்சர் எஸ்.பி வேலுமணி சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து, அந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா மூலம், உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக்காலம், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். இதனால், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மேலும் சில மாதங்களுக்கு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.