வெளியிடப்பட்ட நேரம்: 18:51 (24/06/2017)

கடைசி தொடர்பு:21:30 (24/06/2017)

'பா.ஜ.க-வை ஆதரித்தது இதற்காகத்தான்' : டி.டி.வி. தினகரன் விளக்கம்!

இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி தினகரன், கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாமீனில் வெளியேவந்தார். சிறை செல்வதற்கு முன், கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று சொல்லியவர், சிறையிலிருந்து வெளிவந்தவுடன், கட்சிப் பணிகளைக் கவனிப்பேன் என்றார். இதனால், அ.தி.மு.க.வில் குழப்பம் அதிகரித்தது. 

TTV Dinakaran


ஏற்கெனவே ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என்று அ.தி.மு.க இரண்டு அணிகளாகத் தனித்து செயல்பட்டு வரும் நேரத்தில், டி.டி.வி அணி உருவானது. 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தினகரனைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக, சிறையில் வெளிவந்ததில் இருந்து, தற்போது வரை மூன்று முறை அவர் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவைச் சந்தித்தார். மேலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், டி.டி.வி தினகரன் இன்று பெங்களூரு சிறைக்குச் சென்றார். இதன்பிறகு தினகரன் செய்தியாளர்களிடம், "இன்று நான் சசிகலாவைச் சந்திக்கவில்லை. இளவரசியைச் சந்தித்தேன். சசிகலா கூறியதால்தான், குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவித்தேன். நான் கட்சியில் இருந்து ஒதுங்கியிருக்க நினைக்கவில்லை. கட்சி இணைப்பு நடவடிக்கைகளில் இருந்து மட்டுமே ஒதுங்கியிருக்க முடிவு செய்திருந்தேன்" என்று கூறியுள்ளார்.