வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (26/06/2017)

கடைசி தொடர்பு:12:51 (26/06/2017)

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில், இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

அக்னி நட்சத்திரம் முடிவுக்குப் பின்னர், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. தென்மேற்குப் பருவமழையும் வலுவடைந்து வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்பச்சலனத்தின் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதைத் தொடர்ந்து, தென்மேற்குப் பருவ மழையும் வலுவடைந்துவருவதால், மேற்குத்தொடர்ச்சி மழைப் பகுதி அருகிலுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று, தமிழகத்தில் அதிகபட்சமாக, தேனி மாவட்டத்தில் 7 செ.மீ. மழையும் குறைந்தபட்சமாக செஞ்சி பகுதிகளில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை கடந்த மூன்று நாள்களாகவே பகலில் வானம் மேகமூட்டத்துடனே காணப்படுகிறது. இரவில் பரவலாக மழை பெய்துவருகிறது. இன்று மாலை அல்லது இரவு நேரங்களில், சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் தமிழகப் பகுதியான கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் பலத்த காற்று வீசிவருவதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.