கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் திருநங்கைகள் எட்டு பேர் பணி ராஜினாமா!

கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தை, சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். நாட்டிலேயே அதிகபட்சமாக கொச்சி மெட்ரோ நிறுவனத்தில்தான் 21 திருநங்கைகளுக்கு பணி வழங்கப்பட்டது. ஆனால், கொச்சி மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கிய ஒரு வாரத்துக்குள், எட்டு திருநங்கைகள் பணியை ராஜினாமா செய்துவிட்டனர். கொச்சி நகரில் தங்குவதற்கு வாடகைக்கு வீடு தர மறுப்பதால், அவர்கள் பணியை ராஜினாமாசெய்துவிட்டு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். 

மாவட்ட ஆட்சியர், கொச்சி மேயர் ஆகியோரிடம் திருநங்கைகள்  முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எடப்பள்ளி ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் முதுநிலை பட்டதாரியான ரகா ரன்ஜினி கூறுகையில், ''தற்போது
15 ஆயிரம் சம்பளம் வாங்குகிறேன். வீடு கிடைக்காத நிலையில், லாட்ஜ் ஒன்றில் தங்கியுள்ளேன். லாட்ஜ் வாடகை நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் ஆகிறது. இந்தச் சூழலில் என்னால் எப்படி வேலைபார்க்க முடியும்'' என்று கேள்வி எழுப்புகிறார். 

இந்த விவகாரம்குறித்து, கொச்சி மெட்ரோ நிறுவனம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. கொச்சி மெட்ரோ ரயில் விரிவாக்கத்தின்போது, மேலும் 20 திருநங்கைகளைப் பணிக்கு அமர்த்தும் முடிவும் இருக்கிறது. திருநங்கைகளைப் பணிக்கு அமர்த்துவது பெரிதல்ல, அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தரவேண்டிய கடமையும் அரசுக்கு உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!