வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (26/06/2017)

கடைசி தொடர்பு:18:30 (26/06/2017)

பேரறிவாளன் வெளியில் வருகிறாரா?

பேரறிவாளன்

சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு எப்போது விடியும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்ற இவர்கள், கடந்த 26 ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர். இவர்களைச் சிறையிலிருந்து வெளிக்கொண்டுவருவதற்கான சட்டப்போராட்டம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ராஜீவ் கொலைக்குற்றவாளிகளை விடுதலைசெய்ய சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். ஆனால், அந்த தீர்மானத்தை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, தமிழக அரசின் தீர்மானத்திற்கு தடைபெற்றதால், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ விசாரித்தது என்பதால், மத்திய அரசின் அதிகாரவரம்புக்கு உட்பட்டது என்றுகூறி அவர்கள் ஏழுபேரையும் விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், விடுதலையாகி விடுவோம் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தவர்களுக்கு மத்திய அரசின் நடவடிக்கை, மிகப்பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இந்த நிலையில், அவர்களை விடுதலைசெய்வதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது; ஏழு பேரில் ஒருவரான தன் மகன் பேரறிவாளனை பரோலிலாவது விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அவர் இக்கடிதத்தை, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி அனுப்பி வைத்தார். அற்புதம்மாள் தனது கடிதத்தில், "கடந்த 25 ஆண்டுகளுக்கும்மேல் எனது மகன் சிறைவாசம் அனுபவித்து வருகிறான். பரோல்கேட்டு என் மகன் இதுவரை விண்ணபித்தது கிடையாது. பேரறிவாளனின் தந்தை ஞானசேகரன் உடல்நலம் குன்றியுள்ளார். தந்தைக்கு மகன் ஆற்றும் கடமைக்காகவாவது, இந்தப் பரோல் கோரிக்கையை ஏற்று, பரோலில் விடுவிக்க வேண்டும். மேலும், அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளனைப் பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று கோரியிருந்தார்.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அற்புதம்மாளின் கடிதம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறிவிட்டன. பேரறிவாளன் பரோல் தொடர்பாக யாரை அணுகுவது என்று தெரியாமல் அற்புதம்மாள் தவித்து வந்த நிலையில், ஜூன் 23-ஆம் தேதி அன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, தலைமைச்செயலகத்திற்கு வந்து, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கே.என் .நேரு, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பரோல் கோரிக்கையை முன்வைத்தார். இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியையும் அற்புதம்மாள் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து ஜூன் 24-ஆம் தேதி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேரறிவாளன் பரோல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசினார். "ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்று சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலைசெய்ய, ஏற்கெனவே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பேரறிவாளனுக்குப் பரோல் வழங்கத் தயங்குவது ஏன்? பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு மகாராஷ்டிரா மாநில அரசுதான் பரோல் வழங்கியது. அதனைப் பின்பற்றி பேரறிவாளனுக்குத் தமிழக அரசு பரோல் வழங்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். 

இந்தநிலையில், திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், "ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்கும் விவகாரம் மனித உரிமை மீறல், சட்ட நுணுக்கத்துடன் தொடர்புடையது என்பதால், மத்திய - மாநில அரசுகள் கலந்துபேசியே முடிவு எடுக்கவேண்டும்" என்று கூறியுள்ளார். இதனால் பேரறிவாளன் பரோலில் வெளியே வருவதற்கான சூழல் உருவாகியுள்ளதாகக் கூறுகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். மேலும் அதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்துப் பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவக்குமாரிடம் பேசினோம். "பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்கக்கோரி 28.1.2016-இல் தமிழக அரசுக்கு மனு கொடுத்திருந்தோம். அந்த மனுவை சிறைக் கண்காணிப்பாளர், பேரறிவாளன் வசித்த பகுதியிலுள்ள காவல் ஆய்வாளருக்கும் நன்னடத்தை அலுவலருக்கும் அனுப்பி வைத்தார். அப்போது அதனை ஆய்வு செய்துவிட்டு காவல் ஆய்வாளர் 'பேரறிவாளனைப் பரோலில் விடுவதால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் வராது' என அறிக்கை கொடுத்தார். ஆனால், நன்னடத்தை அலுவலரோ 'அவருடைய அப்பாவின் உடல்நிலை சரியில்லைதான்; ஆனால் அவர் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு தண்டனை பெற்றுவருகிறார். அதன் காரணமாகப் பேரறிவாளன் சாதாரண விடுவிப்புக்குத் தகுதியற்றவர்' என்றுகூறி அந்த மனுவை நிராகரித்து விட்டார். பேரறிவாளனின் பரோலுக்கும் நன்னடத்தை அலுவலருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும் அவருடைய பரோல் நிராகரிக்கப்பட்டது மிகுந்த கவலைக்குரியது..

கடந்த காலங்களில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 'மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய சட்டத்தின்கீழ் இவர்கள் ஏழுபேரும் தண்டனைகளை முழுவதுமாக அனுபவித்து விட்டார்கள்' என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வைத்த வாதம். நீதிபதி கலிபுல்லா தீர்ப்பில் இடம்பெற்றுள்ளது. இந்த வாதங்களை எல்லாம் உள்துறை செயலருக்கும் விரிவாக முன்வைத்துள்ளோம். அதுமட்டுமன்றி சட்ட அமைச்சர் சி.வி சண்முகத்தையும் சந்தித்துப் பேரறிவாளனின் பரோல் தொடர்பாக கோரிக்கை வைத்தோம். அப்போது, 'இது மத்திய அரசு தொடர்பான விஷயம்' என்று அவர் கூறினார். பரோல் என்பது மாநில உரிமை சம்பந்தப்பட்டது என விரிவாக எடுத்துக் கூறினோம். அனைத்தையும் கேட்டுக்கொண்ட அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். நளினி, ரவிச்சந்திரன் போன்றோர் பரோலில் சென்று வந்துள்ளனர். அந்தவகையில் பேரறிவாளனும் பரோலில் வருவதற்கு உரிமை உள்ளது. அதையும்மீறி அவருடைய பரோல் நிராகரிக்கப்பட்டுள்ளதால், அதை அரசியல் உள்நோக்கத்துடன் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். 'பஞ்சாப் மாநிலத்தில் 'தடா' கைதிக்குப் பரோல் வழங்கியுள்ளனர்' எனக்குறிப்பிட்டு, அந்த வழக்குகளை முன் உதாரணமாக தமிழக அரசிடம் எடுத்துரைத்துள்ளோம். எனவே, பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் அதற்கான உத்தரவு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்