வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (26/06/2017)

கடைசி தொடர்பு:18:58 (26/06/2017)

''சசிகலா குடும்பத்தால், எனக்கு எந்த ஆதாயமும் இல்லை!'' - தங்க தமிழ்ச்செல்வன் வருத்தம்

தங்க தமிழ்ச்செல்வன்

ளுங்கட்சி, எதிர்க்கட்சி வித்தியாசம் தெரியாத அளவுக்குத் தமிழக அரசியல் சூழல் இடியாப்பச் சிக்கலாய் சிக்கிக் கிடக்கிறது. 'சட்டசபையில் பேச வாய்ப்பளிக்கவில்லை' எனக்கூறி எதிர்க்கட்சியினரோடு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வனும் வெளிநடப்பு செய்கிறார். 'அ.தி.மு.க-வை மத்திய அரசு மிரட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது' என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் விடுக்கிறார். 

'அ.தி.மு.க-வில் என்னதான் நடக்கிறது?' தங்க தமிழ்ச்செல்வனிடமே பேசினோம்...

 

''ஆமா சார்.... ஜெயலலிதா இறந்த இரண்டாவது நாளிலேயே தலைமைச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடக்கிறது... முதல் அமைச்சர் இருக்கும்போதே கோட்டையில் போய் ரெய்டு பண்ணவேண்டிய அவசியம் என்ன வந்தது... சரி... ரெய்டு போனதில் என்ன கண்டுபிடித்தீர்கள்... நடவடிக்கை என்ன... இப்போது அதே தலைமைச் செயலாளர் மறுபடியும் வேலைக்கு வந்துவிட்டாரே... அப்படியென்றால், தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது... அப்பட்டமான மிரட்டல்தானே... இதில்தானே மந்திரிகள் எல்லோரும் மிரண்டு போனார்கள்?''

''மத்திய பி.ஜே.பி அரசின் இந்த மிரட்டலுக்குப் பயந்துதான் அ.தி.மு.க அணிகள், ஜனாதிபதி தேர்தலில், பி.ஜே.பி ஆதரவாளரான ராம்நாத் கோவிந்த்-துக்கு ஆதரவு அளிக்கிறார்களா?''

''ஆமாம்... அதுதானே யதார்த்தமான உண்மை!''
 

''டி.டி.வி தினகரனும் பி.ஜே.பி மிரட்டலுக்குப் பயந்துதான் ஆதரவு அளித்துள்ளாரா?''

''இல்லை.. இல்லை ... அது டி.டி.வி தினகரன் ஆதரவு அல்ல... கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் உத்தரவின் பேரில், பி.ஜே.பி-க்கு கொடுத்துள்ள ஆதரவு. ஏனெனில், அ.தி.மு.க-வின் ஒரே பொதுச்செயலாளர் சசிகலாதான்!


மக்களவை துணை சபாநாயகரான தம்பித்துரை சிறையில் இருக்கும் சசிகலாவைப் பார்த்துவிட்டு வந்தபிறகுதான், பி.ஜே.பி வேட்பாளரை ஆதரிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார். அப்படி அறிவிக்கும்போது, 'பொதுச்செயலாளரது உத்தரவின் பேரிலேயே நாங்கள் இதனை அறிவிக்கிறோம்' என்று ஒருவார்த்தையைச் சொல்லியிருப்பாரேயானால், இவ்வளவு பிரச்னைகளும் வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தன்னிச்சையாக அவர் அறிவித்ததுதான் தப்பு. அதனால்தான் இப்போது பொதுச்செயலாளரே, 'நான் சொல்கிறேன்... பி.ஜே.பி வேட்பாளரை அ.தி.மு.க ஆதரிக்கும்' எனச் சொல்லியதால், அதன்பேரில் இப்போது அறிக்கையும் வெளிவந்திருக்கிறது''
 

சசிகலா, தினகரன்

''அப்படியென்றால், மத்திய அரசின் மிரட்டலுக்கு சசிகலா பயந்துவிட்டாரா?''

''இன்னும் என்ன மிரட்டல் வேண்டியிருக்கு... அதான் ஜெயிலுக்குள்ளே வச்சிட்டீங்களே... இனிமே என்ன மிரட்டல் விட வேண்டிக்கிடக்கு.... எங்கள் பொதுச்செயலாளருக்கோ, துணைப் பொதுச்செயலாளருக்கோ இனி மிரட்ட வேண்டியது ஒன்றும் இல்லை... ரைட்டா... அமைச்சர்கள்தான் பயந்துக்கிட்டு இருக்காங்க...'' 
 

''சசிகலா எதன் அடிப்படையில் பி.ஜே.பி ஆதரவு நிலையை எடுத்துள்ளார்?"

''இன்றைய காலகட்ட நிலையில் ஆதரவு தெரிவிக்கிறோம் என்கிறார். இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, பொதுச்செயலாளர் ஆகிய மூவரின் தனித்தனிப் பேட்டிகளைப் பார்த்தால்தான் நமக்கு மேற்கொண்டு என்னவென்று தெரியவரும். மற்றபடி இப்போது பி.ஜே.பி ஆதரவு நிலை என்று வந்திருப்பதே இது பொதுச்செயலாளர் சொன்னதா... முதல்வர் முடிவா... அல்லது தம்பித்துரை சொன்னதா என்பதெல்லாம் கேள்விக்குறிதான். என்னுடைய கருத்து என்னவென்றால், பொதுச்செயலாளரின் ஒப்புதலின் பெயரில்தான் இந்த அறிவிப்பு வந்திருக்கும் என்ற என் யூகம்தான்!''
 

''அ.தி.மு.க-வின் இந்தக் குழப்ப நிலைக்கு எப்போதுதான் தீர்வு கிடைக்கும்?''

''இப்போது எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், மந்திரிகள் என்று ஒவ்வொருவரும் தனித்தனியே பேட்டி கொடுத்துவரும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், தலைமைக் கழக நிர்வாகி, மாவட்டச் செயலாளர், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடத்தி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.''
 

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

''சசிகலா குடும்பத்தை ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பதற்கான காரணம் என்ன?''

''பதவி ஆசைதான்.... முதல்வர் பதவியிலிருந்து அவரை எடுத்ததுமே எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்.... அவ்வளவுதான். அந்தக் குடும்பத்தால்தான் மீண்டும் மீண்டும் அவருக்குப் பதவிகள் எல்லாம் வந்துகொண்டே இருந்தன. அதனால், சின்னம்மா குடும்பம்தான் நல்லகுடும்பம் என்று சொல்லிவந்தார்.
சசிகலா குடும்பத்தால் எந்த ஆதாயமும் பெறாத ஒரே நபர் நான்தான். ஆனால், இன்று சசிகலா குடும்பத்துக்காக சப்போர்ட் செய்யும் ஆளுமையும் நான்தான்!''
 

''உங்களுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் என்னதான் தகராறு?''

''எங்க குடும்பமே பாரம்பர்யமாக அ.தி.மு.க விசுவாசம் கொண்டது. என் அப்பா 15 வருடங்களாக ஒன்றியச் செயலாளர். நான் 10 வருடங்களாக மாவட்டச் செயலாளர், எம்.பி பதவி வகித்தவன். இதுதவிர 3 முறை எம்.எல்.ஏ சீட் கொடுத்ததும் அம்மாதான். ஆனா, கடந்த முறை அ.தி.மு.க ஆளும்கட்சியா இருந்தபோதே மாவட்டச்செயலாளர் பதவியிலிருந்து என்னை எடுக்கவைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். என்னை எடுத்துவிட்டு அந்தப் பதவியில், கட்சிக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத ஒருவரை நியமிக்கிறார். கூடவே முழுநேரக் கட்சிப் பணிக்காக அவரது மகனை களத்தில் இறக்கி, கட்சியில் முழு ஆதிக்கத்தையும் செலுத்த வைக்கிறார். இதற்கெல்லாம் நான் ஒப்புக்கொள்ளமாட்டேன் என்பதால்தான், முன்கூட்டியேத் திட்டமிட்டு என்னை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்தே எடுத்திருந்தார்.

இந்த சூழ்ச்சியையெல்லாம் அம்மா கடைசி நேரத்தில் புரிந்துகொண்டுதான், ஓ.பன்னீர்செல்வம் மகன் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோரது பதவிகளைப் பறித்துவிட்டு, மறுபடியும் எனக்கே மாவட்டச் செயலாளர் பொறுப்பைக் கொடுக்கிறார். இதுதான் நடந்த உண்மை! ஆக எந்தச் சூழ்நிலையிலும் நான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பாகவில்லை. அவர்தான் என்னை எதிர்த்துக்கொண்டார்'' - என்று பட்டாசாக வெடித்து முடிக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்!


- த.கதிரவன்


டிரெண்டிங் @ விகடன்