வெளியிடப்பட்ட நேரம்: 14:23 (26/06/2017)

கடைசி தொடர்பு:14:52 (26/06/2017)

அம்மாவின் ஆன்மா  இதைச் சொல்லவில்லையா? - பிரின்ஸ் கஜேந்திர பாபு  ஆவேசம்

 NEET Exam


கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்துசெய்யப்படும். தேவைப்பட்டால், அதற்காகத் தனிச் சட்டம் இயற்றுவேன்' என ஜெயலலிதா கூறியிருந்தார். எதைஎதையோ சொல்லும் அம்மாவின் ஆன்மா, இதை ஓ.பன்னீர்செல்வத்திடமும் முதல்வர் பழனிசாமியிடமும் சொல்லவில்லையா எனப் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரின்ஸ் கஜேந்திரபாபு, “மாநில அரசு நீட் தேர்வு தொடர்பாகச் சட்டமன்றத்தில் விவாதத்தை நடத்தி, மத்திய அரசுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும். ஆனால், நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு எவ்வித அழுத்தமும் தரவில்லை.  நீட் தேர்வு நடத்தியது ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி. மாநிலங்களில் நிலவக்கூடிய அசாத்திய சூழல் பற்றி மாநில அரசுக்குதான் தெரியும். அதனால், மத்திய கல்வி நிறுவனங்களைத் தவிர மற்ற கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை மாநில அரசே சேர்க்கலாம் என்று ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள்கொண்ட அமர்வு, தீர்ப்பு கொடுத்துள்ளது. ஆனால், தமிழக அரசு நீட் தேர்வு நடத்தாமலிருக்க என்ன நடவடிக்கை எடுத்தது. இந்த நீட் தேர்வு, மிகவும் குழப்பமான கல்விச் சூழலை உருவாக்கி இருக்கிறது. தமிழக அரசு, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் காவு கொடுக்கக் கூடாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் வாக்குறுதியின்போது அறிவித்தபடி, நீட் தேர்வுக்கு எதிராக அ.தி.மு.க அரசு முழுமூச்சுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, மத்திய அரசின் மசோதாவை நிராகரித்து, மாநில அரசு நீதிமன்றத்தை நாடாவிட்டால், நிச்சயமாகப் பொதுப் பள்ளிக்கான  மாநில மேடை சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். 

தமிழக அரசு, சட்டசபை நடந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலிலாவது நீட் தேர்வு தொடர்பான விவாதத்தை சட்டமன்றத்தில்  நடத்தி, மத்திய அரசுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக ஒரு தெளிவான முடிவு வரும்வரை வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழிற்கல்விகளின் கவுன்சலிங்கையும் ஒத்திவைக்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர், நீட் தொடர்பாக அளிக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டு, மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவிகிதம் எனவும், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 15 சதவிகிதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ இடங்கள் ஒதுக்குவது, தம் தவறுகளை மறைக்க நடத்தப்படும் நாடகம். இது, தமிழக மாணவர்களுக்கு எந்த விதத்திலும் பலன் அளிக்காது. தொடக்கத்திலிருந்து நீட் தேர்வுக்கு நிரந்தரமாகத் தீர்வு காண வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தினார். நீட் தேர்வு வேண்டாம் என்பதற்கு நியாயமான காரணங்கள் இருந்தும், தமிழக அரசும் தமிழக எம்பி-க்களும் இதுகுறித்து பேச மறுக்கின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்துசெய்யப்படும். தேவைப்பட்டால், அதற்காகத் தனிச் சட்டம் இயற்றுவேன்' என ஜெயலலிதா கூறியிருந்தார். எதைஎதையோ சொல்லும் அம்மாவின் ஆன்மா, இதை ஓ.பன்னீர்செல்வத்திடமும் முதல்வர் பழனிசாமியிடமும் சொல்லவில்லையா'' என்று கூறினார்.