வாணவரெட்டி அரசுப் பள்ளியை ஸ்மார்ட் பள்ளியாக மாற்றிய  ராணுவ வீரர்! | Vanavaretti Government school upgraded to digital smartboard class room 

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (26/06/2017)

கடைசி தொடர்பு:14:15 (27/06/2017)

வாணவரெட்டி அரசுப் பள்ளியை ஸ்மார்ட் பள்ளியாக மாற்றிய  ராணுவ வீரர்!

தமிழகத்தில் வாணவரெட்டி என்னும் சிறு கிராமத்திலுள்ள ஓர் அரசுப் பள்ளிக்குச் சர்வதேசத்தரத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் அதே ஊரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர். 

smart school
 

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தில் வாணவரெட்டி என்னும் சிறிய கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மணி, காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றுகிறார். மணிக்கு நீண்ட நாள்களாகவே, 'தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை சர்வதேச அளவுக்குத் தரம் உயர்த்தி ஒரு புதிய வரலாற்றைப் படைக்க வேண்டும்' என்பது கனவு. ஆனால், 'தனிஒருவராக இதை நிகழ்த்துவது சாத்தியமில்லை' என்று தனக்குள்ளேயே சமாதானம் சொல்லிக்கொள்வாராம்.  இம்முறை விடுமுறைக்குச் சொந்த ஊர் வந்த மணி, தான் படித்த அரசுப் பள்ளியை ஊர் மக்கள் உதவியுடன் ஸ்மார்ட் பள்ளியாக மாற்றி அசத்தியிருக்கிறார். 

ராணுவ வீரர் மணியிடம் பேசினோம். "வாணவரெட்டி அரசுப் பள்ளியில் நான் ஐந்தாம் வகுப்புவரை படித்தேன். நான் படித்தபோது எந்த அடிப்படை வசதிகளும் அங்கு கிடையாது. என்னுடைய கிராமத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஒரு சில குடும்பங்கள் மட்டுமே பணம் செலவழித்து பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் கொண்டு போய் சேர்ப்பார்கள். 'தனியார் பள்ளிகளின் தரத்தைவிட வாணவரெட்டி அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும்' என்று எண்ணினேன். ஊர் பொதுமக்களிடம் உதவி கோரினேன். என்னுடைய முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்தனர். 

mani

முதலில், பள்ளியில் 600 சதுர அடி பரப்பளவில் புதிய அறை ஒன்றை உருவாக்கினோம். அதற்கான கட்டுமானப் பணிகளிலும் கிராம மக்களே ஈடுபட்டனர். ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் இயன்ற அளவு உதவி கிடைத்தது. என்னுடைய முயற்சியை ஃபேஸ்புக் வாயிலாகத் தெரிந்துகொண்ட வெளிநாட்டுவாழ் இந்தியப் பெண் ஹேமா 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 'ஸ்மார்ட் போர்டு' ஒன்றை வாங்கிக் கொடுத்தார். மாணவர்களின் படைப்பாற்றலை அதிகரித்து ஆக்கபூர்வமாக சிந்திக்க வைக்க ஏதுவாக, அந்த அறை முழுவதும் வண்ணம் தீட்டினோம். வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொள்ள ஏதுவாக ஸ்மார்ட் போர்ட், கணினி, இணைய சேவை உள்ளிட்டவற்றைப் பொருத்தி, ஸ்மார்ட் அறையாக (Digital Smart Board Class Room) உருவாக்கினோம். 

mani

மணி
 

சுற்றுவட்டாரத்தில் தனியார் பள்ளிகளுக்குச் சென்றுகொண்டிருந்த மாணவர்களில் பலர், வாணவரெட்டி அரசுப் பள்ளியைத் தேடி வரத் தொடங்கியுள்ளனர். தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் இவ்வாறு தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. வசதி படைத்தவர்கள், இதற்கென உதவ முன்வர வேண்டும். தமிழக அரசும் கிராமப்புறங்களில் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் உள்பட அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் செய்து தர வேண்டும். எங்களின் ஸ்மார்ட் வகுப்பறை அனைத்துப் பள்ளிகளுக்கும் எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் என விரும்புகிறேன்’ என்றார் பெருமிதத்துடன். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close