வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (26/06/2017)

கடைசி தொடர்பு:09:03 (27/06/2017)

'இரு அணிகள் இணைவதற்கு வாய்ப்பே இல்லை': ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. மூன்று அணிகளாகச் சிதறியுள்ளது. இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு இரு அணிகள் இணைவதுகுறித்து பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்காக, பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

Panneerselvam


"சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்" என்று இரண்டு நிபந்தனைகளைப் பன்னீர்செல்வம் அணியினர் வைத்தனர். இதையடுத்து, சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ஆட்சியை நடத்துவோம் என்று எடப்பாடி அணி சார்பில் அமைச்சர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தைக் குழுவைக் கலைப்பதாகப் பன்னீர்செல்வம் கூறினார்.

இந்த நிலையில், உசிலம்பட்டியில் பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையத்தின் உரிய பதிலுக்காகக் காத்திருக்கிறோம். தேர்தல் ஆணையத்திலிருந்து பதில் வந்தவுடன், கலந்தாலோசித்து முடிவுசெய்வோம். இணைப்புக் குழுவை கலைத்த பின் எவ்வாறு இணைய முடியும்? இரு அணிகள் இணைவதற்கு வாய்ப்பே இல்லை" என்று கூறினார்.