வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (27/06/2017)

கடைசி தொடர்பு:12:09 (27/06/2017)

‘பேசுகிறவர்கள், பேசிக் கொண்டே இருக்கட்டும்!’ - எடப்பாடி பழனிசாமி மௌனத்தின் பின்னணி

எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிர்வாகிகளும் டி.டி.வி.தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களும் நேரடியான மோதல் போக்கைத் தொடங்கியுள்ளனர். ‘சசிகலா குடும்பத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் வேகப்படுத்த முதல்வர் விரும்பவில்லை. 'அந்தக் குடும்பத்துடன் இணக்கம் காட்டினால், நமக்குத்தான் இழப்பு’ என்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி' என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர்.

‘அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் எப்போது இணையும்?' என எதிர்பார்த்திருந்த தொண்டர்களுக்கு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் தனி ஆவர்த்தனத்தால், அந்த நம்பிக்கையும் பொய்த்துப் போய்விட்டது. கடந்த சில நாள்களாக, தினகரனைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியுள்ளனர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள். நேற்று பேசிய எம்.பி கோ.அரி, ‘சசிகலா ஆதரவுடன் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்தோம் என தம்பிதுரை கூறுவதை ஏற்க முடியாது. அது அவருடைய சொந்தக் கருத்து. தமிழகத்தில் கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி பழனிசாமிதான் வழிநடத்தி வருகிறார்' என அதிர வைத்தார். இந்தக் கருத்தால் கொதித்துப் போன எம்.எல்.ஏ வெற்றிவேல், 'இன்னும் எத்தனை காலம், எடப்பாடி பழனிசாமி மௌனமாக இருக்கப் போகிறார் எனத் தெரியவில்லை. நரசிம்மராவ் அமைதியாக இருந்ததால்தான், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் இந்திரா காந்தி குடும்பம் வந்துதான், கட்சியைக் காப்பாற்றியது. அதைப்போன்ற நிலை அ.தி.மு.கவுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால், தான்தோன்றித்தனமாக பேசுகின்றவர்களை முதல்வர் தடுக்க வேண்டும். இப்போதும் சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் கட்சி உள்ளது' என்றார். இந்த இரு அணிகளும் இவ்வாறு மோதிக் கொண்டிருக்க, நடப்பவற்றை அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம். தன் பங்குக்கு அவரும், 'அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதற்காக அமைக்கப்பட்ட குழுவும் கலைக்கப்பட்டுவிட்டது' என்றார். 

தினகரன்“இரட்டை இலைச் சின்னம் தொடர்பான பிரச்னை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் இரண்டுவிதமான முடிவுகளை எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. 'சசிகலா நியமனம் செல்லாது' எனவும் 'முறைப்படி கட்சி விதிகளின்படி தேர்தலை நடத்துங்கள்' என அறிவுறுத்தினால், போட்டி அதிகரிக்கும். தலைமைக் கழகத்தில் தேவையற்ற சண்டைகளும் வலுக்கும். ஏற்கெனவே, பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட விண்ணப்ப படிவம் வாங்கச் சென்ற, சசிகலா புஷ்பா எம்.பியின் கணவர் லிங்கேஸ்வர திலகன் கடுமையாகத் தாக்கப்பட்டார். அதுபோன்ற ஒரு கலவர சூழல் கட்டாயம் ஏற்படும்.

பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில், ‘கட்சி உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்துதான் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய வேண்டும். அப்படிப் பார்த்தால், 90 சதவீத அ.தி.மு.க தொண்டர்கள் எங்களைத்தான் ஆதரிக்கின்றனர். கட்சியின் முழுக் கட்டுப்பாடும் எங்கள் கைகளுக்குள் வந்துவிடும்' என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இதை அறிந்துதான், மூன்று தரப்பினரையும் சமாதானப்படுத்தும் வேலைகளில் தம்பிதுரை ஈடுபட்டு வருகிறார். 'சசிகலா ஆதரவுடன்தான் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்தோம்' என அவர் வெளிப்படையாகக் கூறினாலும், 'கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து பா.ஜ.க வேட்பாளரை ஆதரிக்கிறோம்' என அதிர வைத்தார் எடப்பாடி பழனிசாமி. இப்படியொரு கருத்தை தினகரன் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கவில்லை. 'இனி பன்னீர்செல்வத்தைவிட, எடப்பாடி பழனிசாமியைக் கூடுதலாக எதிர்க்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்" என்கிறார் அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகி ஒருவர். 

ஆனால், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் மௌனத்துக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர். இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், “பன்னீர்செல்வம் பதவியில் இருந்தபோது, மக்கள் மத்தியில் உள்ள சசிகலா எதிர்ப்பைக் கையாள்வது குறித்து பா.ஜ.க ஆதரவு பிரமுகர் ஒருவர் சிறப்பு வகுப்புகளை எடுத்தார். அதன் எதிரொலியாகத்தான், ஜெயலலிதா சமாதியில் தியானம்; சசிகலா குடும்பத்துக்கு எதிரான அறைகூவல் என அதகளப்படுத்தினார். இப்போது, எடப்பாடி பழனிசாமிக்கும் அதே ஆலோசனைகள் சொல்லப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் உள்ள சசிகலா எதிர்ப்பு மனநிலையும் பன்னீர்செல்வத்தின் செல்வாக்கையும் கண்டு, சில படிப்பினைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார் முதல்வர். அதனால்தான், அதிரடியாக எந்தக் கருத்துக்களையும் கூறாமல் மௌனம் சாதிக்கிறார்" என்றவர்,

“நேற்று எம்.எல்.ஏ வெற்றிவேல் பேசும்போது, நரசிம்ம ராவோடு எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். இந்த ஒப்பீடு அர்த்தமற்றது. காங்கிரஸ் கட்சியை, இந்திரா காந்தி குடும்பம் மீட்டெடுத்தது என்றால், அந்தக் குடும்பம் பிரதமர் பதவியில் நீண்ட காலம் இருந்துள்ளது. மக்கள் மத்தியில் இந்திரா குடும்பத்துக்கு பெரும் செல்வாக்கு உள்ளது. சசிகலா குடும்பத்துக்கும் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? மக்கள் இவர்களை ஏற்றுக் கொள்ளவே இல்லை. வெற்றிவேல் போன்றவர்கள் பேசிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். தனக்கு எதிராகக் கருத்து கூறுபவர்களை எடப்பாடி பழனிசாமி பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. எங்களிடம் முதல்வர் பேசும்போது, ‘நமக்கு எதிராகப் பேசுகின்றவர்கள், பேசிக் கொண்டே இருக்கட்டும். தினகரன் தரப்புக்கு தினையளவு ஆதரவு கொடுத்தாலும், மலையளவு நமக்கு நெருக்குதல் வரும். இவர்களுடைய பேராசைகளுக்கு ஓர் அளவே இல்லை. மக்கள் மத்தியில் இவர்களுக்கு எதிர்மறை செல்வாக்குதான் உள்ளது. அரசின் நிலைப்புத்தன்மை குறித்து கேள்வியும் எழவில்லை. என்னுடைய அரசுக்கு எதிராக, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை யார் கொண்டு வந்தாலும், அதை முறியடிக்க முடியும்' என நம்பிக்கையோடு பேசினார். கட்சியிலும் ஆட்சியிலும் தனக்கான பிடிமானத்தை அதிகப்படுத்த, மௌனத்தையே பதிலாகக் கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி" என்கின்றனர் உறுதியாக.


டிரெண்டிங் @ விகடன்