வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (27/06/2017)

கடைசி தொடர்பு:19:10 (27/06/2017)

முற்றிலும் வற்றிய சென்னை... யாகத்தை நம்பும் "மழை" மந்திரிகள்...!


                              முற்றிலும் வற்றிய சென்னை  குடிநீர் பாதை 

ருவமழை பொய்த்துப் போனதால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கியமான புழல் ஏரி கடந்த 22-ம் தேதிவரை 57 மில்லியன் கனஅடி நீரை மட்டுமே கையிருப்பாக வைத்துள்ளது. அதாவது 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் இப்போது இருப்பது, வெறும் 57 மில்லியன் கன அடி நீர்மட்டுமே. அதே வேளையில் கையிருப்பை விட அதிகளவான 850 மில்லியன் லிட்டர் குடிநீர், சென்னை மக்களுக்குத் தினமும் தேவைப்படுகிறது. ஜே.சி.பி. எந்திரம் மூலம் கால்வாய் அமைத்தும் ராட்சத மோட்டார்கள் மூலமும் பல இடங்களில் இருந்து புழல் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் குடிநீரை அதிகாரிகள் அனுப்பி இந்தத் தேவையைச் சரிசெய்து வருகிறார்கள். 880 மில்லியன் கன அடி கொள்ளளவைக் கொண்ட சோழவரம் ஏரியும், செம்பரம்பாக்கம் ஏரியும் அடுத்தடுத்து முற்றிலும் வறண்டு போயுள்ள நிலையில் புழல் ஏரியும் நீராதார நம்பிக்கையில் இருந்து விலகியுள்ளது.  இன்னும் இரண்டு நாள்கள் வரையில் புழல் ஏரியில் குட்டையளவு நீரும் இருக்குமா என்பதே பெரும் கேள்விதான்... கடந்த 14 ஆண்டுகளில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் இப்படி ஒரே சமயத்தில் வறண்டு விட்டது இதுவே முதல் தடவையாகும். தற்போது இந்த 4 ஏரிகளிலும் 1 சதவீதம் அளவுக்கே தண்ணீர் உள்ளது. கடந்தாண்டு இதே நேரத்தில் 4 ஏரிகளிலும் 41 சதவீதம் அளவுக்குக் குடிநீர் இருந்தது. பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 057 மில்லியன் கனஅடி தண்ணீரைச் சேமிக்க முடியும். கடந்தாண்டு இதே நாளில் 4607 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. தற்போது 125 மில்லியன் கனஅடி தண்ணீரே இருக்கிறது. சென்னை புறநகர் பகுதிகளான மாகரல், தாமரைப்பாக்கம், வெள்ளியூர், கீழானூர் ஆகிய பகுதிகளில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து அங்கிருந்தும் தண்ணீர் உறிஞ்சப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொதுக்கிணறாக உள்ள ஆழ்துளைக் கிணறுகளின் மூலம் கிடைக்கப்பெறும் நீர் சுத்தீகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தாலும் தனியார் பாதுகாப்பில் இருக்கும் கிணற்றுநீர் பொதுமக்களுக்குப் பயன்படுவதில்லை.


 சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் இருந்தும் ராட்சத எந்திரங்கள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு  சுத்திகரிப்புக்குப் பின் குடிநீராக அவை விநியோகம் செய்யப்படுகின்றன. வீராணம் திட்டம், கிருஷ்ணா கால்வாய் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் என்று எல்லாமே 'கானல் நீர்' போல்தான் காட்சியளிக்கின்றன. பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் போன்ற நீர்நிலைகளை மட்டுமே நம்பி வாழக்கூடிய நிலை சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சி மாவட்ட மக்களுக்கு இருந்து வருகிறது. கரைகளைப் பலப்படுத்தாமலும், முறையான பராமரிப்பு இன்றியும் ஏரிகளை விட்டு வைத்ததால் இன்று நீருக்கான தேவை பெரிதாகி நிற்கிறது. சென்னை நெம்மேலியில் உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து தினமும் 100 மில்லியன் குடிநீராக்கப்பட்ட கடல்நீர் சோழிங்க நல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் சுற்றுப்புற மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மீஞ்சூரிலுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.சென்னையின் குடிநீர்த் தேவையைச் சமாளிக்க நிரந்தரத் தீர்வாகக் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து குடிநீர் பெற நெம்மேலி, மீஞ்சூர் பகுதிகளிலுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் மூலம் 200 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குப் பெறப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல் நெம்மேலி அருகே ரூ. 1,350 கோடி மதிப்பில், 150 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறுகிற அளவில் கூடுதலாக ஒரு கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 
 

சென்னையை அடுத்த போரூரில் 400 மில்லியன் லிட்டர் நீர்பெறும் வகையில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் ஆரம்பக் கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது மொத்த ஏரியும் காய்ந்து, மக்களும் நீரின்றித் தரையில் சாய்கிற இந்த இக்கட்டான தருணத்தில்தான் ஆரம்பக்கட்டப் பணிகளுக்கு அஸ்திவாரம் போடப்பட்டு இருக்கிறது.  "கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து 750 மில்லியன் லிட்டர் குடிநீர் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது, இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் (?) ஏரிகளை நம்பி இருக்க வேண்டியதில்லை"என்கிறார்கள் அதிகாரிகள்...வீராணம் திட்டம், கிருஷ்ணா கால்வாய் திட்டம் போல் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்த பிற மாநில அரசுகளிடம் கையேந்த வேண்டிய அவலநிலை தமிழகத்துக்கு இல்லை... கடந்த சில மாதங்களாக ஏழாயிரம் லாரிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவந்த குடிநீர் இப்போது சுருங்கி, இரண்டாயிரம் லாரிகளாகி இருக்கிறது. அந்த இரண்டாயிரமும் இருநூறு லாரிகளாக சுருங்கும் நிலை வந்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கையிருப்பில் நீர் இருக்கும்போதே தொடங்கியிருக்க வேண்டிய அரசு, பூமியே காய்ந்த பின்னர்தான் பூமிபூஜை போடுமோ தெரியவில்லை.... உடல் நோகாமால், கரைகளைப் பலப்படுத்தாமல், கடல்நீரைக் குடிநீராக்காமல், வீராணம் - கிருஷ்ணா என்று அலையாமல், நீர்த்தேவையைத் தீர்க்க வழிதேடுவது அறியாமை... அதனினும் அறியாமை, மழை வேண்டி, மந்திரிகளே ஊர் ஊராய்ப் போய் யாகம் வளர்த்துக் கொண்டிருப்பதும்... ஒரேயொரு ஆறுதல், நீர்நிலைகளைத் தூர் வாருகிறோம் என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டிருப்பதுதான்... ஆனால், ஆட்சியில் உள்ள போது அவரவர் பொறுப்பையுணர்ந்து 'நீராதாரம்' பெருக நிரந்தரத் திட்டத்தை ஏற்படுத்தத் தவறி விட்டனர் என்பதே உண்மை...


 


 


டிரெண்டிங் @ விகடன்