'வைகைச்செல்வன் அழுகிப்போன தக்காளி': கடுகடுக்கும் ராஜேந்திர பாலாஜி! | Minister Rajendra Balaji slams Vaigai Selvan

வெளியிடப்பட்ட நேரம்: 19:27 (27/06/2017)

கடைசி தொடர்பு:19:31 (27/06/2017)

'வைகைச்செல்வன் அழுகிப்போன தக்காளி': கடுகடுக்கும் ராஜேந்திர பாலாஜி!

தனியார் நிறுவனங்கள் விற்பனைசெய்யும் பாலில் கலப்படம் உள்ளது, கெட்டுப் போகாமலிருக்க மருந்து சேர்க்கப்படுகிறது. அது, உடலுக்குத் தீங்கானது. ஆவின் பால் மட்டும்தான் கலப்படமில்லாதது, அதுதான் மக்களுக்கு உகந்தது" என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து சொல்லிவருகிறார்.

Rajendra Balaji


இந்த நிலையில், பொய்யான தகவலைப் பரப்பும் அமைச்சர், பதவி விலக வேண்டுமென்று பால் முகவர் சங்கத் தலைவர் பொன்னுச்சாமியும் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் பேசிவருகிறார்கள். குறிப்பாக, ராஜேந்திர பாலாஜி சினிமா போஸ்டர் அடித்தவர் என்று வைகைச்செல்வன் கூறியிருந்தார்.


இதற்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, 'தனியார் தொலைக்காட்சியில் தோன்றி, என்னை தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகச் சொல்லும் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், என்மேல் உள்ள அரசியல் காழ்ப்புஉணர்ச்சியில் அவ்வாறு பேசுகிறார். 500 ரூபாய் பணத்துக்குப் பேசும் கூலிப் பேச்சாளர் வைகைச்செல்வன்' என்று கூறியிருந்தார்.

Rajendra Balaji


இந்நிலையில், இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'வைகைச்செல்வன் தனியார் பால் முகவர்போல் பேசி வருகிறார். அவர் அ.தி.மு.க தொண்டரா, முகவரா? வைகைச்செல்வன் சீக்கு வந்த பிராய்லர் கோழி. அழுகிப்போன தக்காளி. குழம்புக்கு ஆகாது. நான் சினிமா போஸ்டர் அடிக்கவில்லை. கட்சி போஸ்டர்தான் ஒட்டினேன். நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். அவர் மிட்டா மிராசுதாரராக இருக்கலாம். அவருக்குப் பதவி எப்படிப் போனது என்று அனைவருக்கும் தெரியும். அவரது பிரச்னைக்காக, திராவிட இயக்கங்களை இழுக்கிறார்' என்று கூறியுள்ளார்.


இதையடுத்து, என் மீது அவதூறு பரப்பினால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று வைகைச்செல்வன் கூறியுள்ளார்.