மூன்றாண்டுகளாக போலீஸ் கண்ணாமூச்சு! ஆட்டம் காட்டும் கொலையாளி... | Police yet to arrest the murderer who killed Aruna, three years ago

வெளியிடப்பட்ட நேரம்: 22:10 (27/06/2017)

கடைசி தொடர்பு:08:51 (28/06/2017)

மூன்றாண்டுகளாக போலீஸ் கண்ணாமூச்சு! ஆட்டம் காட்டும் கொலையாளி...

கொலை

மிகக் கொடூரமாக இளம்பெண் அருணாவைக் கொலை செய்துவிட்டு மூன்று ஆண்டுகளாகப் போலீஸுக்குத் தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார் இளைஞர் தினேஷ். இத்தனைக்கும் தினேஷ், பெரிய ரவுடியோ, கிரிமினல் வழக்குகளில் சிக்கியவரோ அல்ல. மிகவும் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பி.காம்வரை படித்துவிட்டு அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை. சென்னைத் தலைமைச் செயலகக் காலனியில் உள்ள ஓர் அபார்ட்மென்ட்டில், இரண்டாம் தளத்தில்தான் தினேஷின் குடும்பம் வசித்தது. நோயாளியான அப்பா கண்ணப்பன், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்; அம்மா ஜமுனா; இரண்டு சகோதரிகள்; இதுதான் தினேஷின் குடும்பம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தை, உடனிருந்து பார்த்துக்கொண்ட தாய், வேலைக்குப் போய்விட்ட சகோதரிகள், தனியாக இருந்த அடுக்குமாடி வீடு என்று தினேஷுக்குச் சூழ்நிலை முழுமையாகக் கைகொடுத்த ஒரு முன்னிரவுப் பொழுதில்தான் காதலி அருணாவைக் கொன்றுவிட்டு ஓட்டம்பிடித்தார். தாய் குமுதாவிடம் மாலை ஆறரை மணிவரையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த அருணா, அதன்பின் மொத்தமாகவே பேச்சை நிறுத்திக்கொண்டு விட்டார். செல்போன் இணைப்பும் துண்டிக்கப்படவே, அருணாவின் தந்தை உடனடியாக வேப்பேரி போலீஸில் 'கேர்ள் -மிஸ்ஸிங்' என்று புகார் கொடுத்தார். அன்றிரவே உடலெல்லாம் நகக் கீறல்கள், ரத்தக் காயங்கள் என அரசு கீழ்ப்பாக்கம் பிணவறையில்  அருணாவின் உடல் வைக்கப்பட்டுவிட்டது. அருணாவின் உடலை அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து போர்வையில் சுற்றி லிஃப்ட்டில் கீழே இறக்கிய தினேஷ், உடலை அங்கிருந்த காரில் ஏற்றமுடியாமல் ஆள்களை உதவிக்குக் கூப்பிட்டதும், உதவிக்கு வந்தவர்கள் போர்வையில் இருந்தது கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உடல் என்று அறிந்து தினேஷைப் பிடிக்க முயன்றதும் இந்த வழக்கில் மிக முக்கியமான ஒரு காட்சி.கொலையாளியால்     சூட்கேசில் அடைக்கப்பட்ட பெண் அருணா

அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பித்த தினேஷ் இன்றுவரையில் சென்னை சிட்டி போலீஸாருக்கு ஒரு மாயமனிதனாகவே காட்சியளிக்கிறார். சம்பவ நாளான 2015, மார்ச், 10-ம் தேதி மாலையில் தொடங்கி ஜூன், 27, 2017 (இன்றுவரை) அருணாவின் காதலன் தினேஷ் தேடப்படும் குற்றவாளி... போலீஸாரும் தினேஷை விடாமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய உணவுக் காப்பீட்டுக் கழகத்தின் (F.C.I))  மூன்றாண்டுப் பயிற்சியை முடித்துவிட்டு மத்திய அரசுப் பணி அதிகாரியாக, பணியில் இணையக் காத்திருந்தவர் அருணா. இவர்களின் காதல் இருவீட்டாருக்கும் தெரிந்த ஒன்று. சம்பவத்தன்று காதலர்களுக்குள் நீண்ட வாக்குவாதம் போயுள்ளது... அவர்கள் சத்தமாகப் பேசிக்கொண்டதை அனைவருமே கவனித்திருக்கிறார்கள். விசாரணை போலீஸார், "தினேஷ் பற்றி இதுவரை எந்தத் தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. தினேஷின் பெற்றோரை எங்கள் பார்வையில்தான் வைத்திருக்கிறோம்; தினமும் அவர்களைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம்; எந்த முன்னேற்றமும் இல்லை; தினேஷிடம் செல்போன் எதுவும் இல்லை; பெற்றோரிடம் இதுவரையில் போனில்கூடப் பேசவில்லை; சொல்லப்போனால், தினேஷ் எங்கிருக்கிறார் என்ற தகவலைக்கூடப் பெறமுடியவில்லை"  இதைத்தான், அவர்கள் தொடர்ந்து மாற்றாமல் சொல்லிக்கொண்டிருக்கும் ஸ்டேட்மென்ட்.

'சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அரசியல் பின்புலம், ஆள்பலம் என்று எதுவுமில்லாமலே நம்மை இத்தனை ஆண்டுகளாகத் தினேஷ் சுற்றலில் விட்டிருக்கிறாரே' என்ற வருத்தம் சென்னை சிட்டி போலீஸுக்கு இருக்கிறது. அருணா கொலை செய்யப்பட்டபோது சூளைமேடு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ராமசாமி. வழக்கில் முன்னேற்றம் எதுவும் இல்லை என்ற காரணத்தால், 'துப்புத்துலக்க' அங்கே ஶ்ரீகாந்த் என்ற இன்ஸ்பெக்டரை போஸ்டிங் போட்டனர். ஶ்ரீகாந்த் துலக்கிய துப்பில் இதற்கு முன்னர் அங்கு நிலுவையில் இருந்த பல வழக்குகள் முடிவுக்கு வந்தாலும், தினேஷ் எங்கிருக்கிறார் என்பது மட்டும் தெரியவில்லை.'படத்தில் காணப்படும் இவர்தான் தினேஷ். இவரைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் தக்க சன்மானம் அளிக்கப்படும்' என்று மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சூளைமேடு போலீஸார், சுற்றுப் பகுதிகளில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இப்படியே மூன்றாண்டுகளாக சென்னை போலீசார், கொலையாளி என்று அறிவிக்கப் பட்ட தினேஷுடன் கண்ணா மூச்சு ஆடிவருகின்றனர்...    சென்னையின் 18 ஆயிரம் போலீஸாரைச் சாதாரணமாக நினைத்துவிட்டுத் தப்பித்துக்கொண்டே இருக்கிறார்,  தினேஷ்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close