பேரறிவாளன் பரோல் விவகாரம் : முதல்வர் வீட்டில் காத்துக்கொண்டிருக்கும் அற்புதம்மாள்!

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து பேரறிவாளனின் பரோல் தொடர்பாகப் பேசுவதற்காக, சென்னையில் உள்ள முதல்வர் வீட்டில் இன்று காலை முதல் காத்துக்கொண்டிருக்கிறார்.

arputhammal

Representational Image
 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு, பரோல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

பேரறிவாளனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு மறுத்துவிட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோரை கவனித்துக்கொள்வதற்காக
30 நாள்கள் பரோல் வழங்கும்படி பேரறிவாளன் விடுத்த கோரிக்கையைச் சிறைத்துறை நிராகரித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அனுப்பிய மேல்முறையீட்டு மனு, கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

பேரறிவாளன் பரோல் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்  சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். மேலும், ‘பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு மஹாராஷ்ட்ரா மாநில அரசுதான் பரோல் வழங்கியது. அதேபோல பேரறிவாளனுக்கும் தமிழக அரசு பரோல் வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். 

இந்நிலையில், பேரறிவாளன் பரோல் தொடர்பாக முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைக்க, இன்று காலையே அற்புதம்மாள் முதல்வரின் வீட்டுக்குச் சென்றார். இன்று, துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறவிருப்பதால், முதல்வரை சந்திக்க இயலாது என்று அதிகாரிகள் அற்புதம்மாளிடம் கூறிவிட்டனர்.ஆனாலும், முதல்வரை இன்று சந்தித்து, பரோல் தொடர்பான கோரிக்கையை வைக்க அற்புதம்மாள் காத்துக்கொண்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!