வீடு கட்ட மணல் வேண்டுமா? வெப்சைட், ஆப்-பை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு! | Edappadi K. Palaniswami introduced an app for sand marketing

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (28/06/2017)

கடைசி தொடர்பு:12:21 (28/06/2017)

வீடு கட்ட மணல் வேண்டுமா? வெப்சைட், ஆப்-பை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு!

தமிழகத்தில், கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல், உபயோகிப்பாளர்களுக்கு எளிதில் கிடைத்திட ஏதுவாக, 'தமிழ்நாடு மணல் இணைய சேவை' (www.tnsand.in) இணையதளத்தையும் (tnsand) செல்லிடைபேசி செயலியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்.

உபயோகிப்பாளர்களுக்கு மணல் தங்குதடையின்றி குறைந்த விலையில் கிடைத்திட, பொதுப்பணித்துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அவற்றில் ஒன்றாக, தற்போது இணையதளம் மற்றும் செல்லிடைபேசி செயலி ஆகியவற்றின் வாயிலாக, பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள், தங்களுக்குத் தேவையான மணலை முன்பதிவுசெய்து பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், மணல் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குவாரிகளுக்கும் மணல் விற்பனை நிலையங்களுக்கும் வந்து நேரடியாக மணலைப் பெற்றுக்கொள்ளலாம். மணல் பெற்றுக்கொள்வதற்கு, கணினி மென்பொருள் மற்றும் செல்லிடப்பேசி செயலியைப் பயன்படுத்துவதுகுறித்து, பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள், அரசு மணல் குவாரிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, பொதுப்பணித்துறையின் வாயிலாக 28.6.2017 முதல் 30.6.2017 வரை பயிற்சியளிக்கப்படும். இதற்கென தனியாக ஓர் உபயோகிப்பாளர் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பெற்றுக்கொண்டார்.

இன்று தொடங்கிவைக்கப்பட்ட 'தமிழ்நாடு மணல் இணைய சேவை' 1.7.2017 முதல் உபயோகிப்பாளர்களின் பயன்பாட்டுக்கு வருகிறது. மேலும், 1.7.2017 முதல் பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் தங்களுடைய மணல் தேவையை இணைய சேவைமூலம் மட்டுமே முன்பதிவுசெய்து பெற்றுக்கொள்ளலாம். இதனால், உபயோகிப்பாளர்களின் மணல் தேவை பூர்த்திசெய்யப்படுவதுடன், மணல் தங்குதடையின்றியும் குறைவான விலையில் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close