வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (28/06/2017)

கடைசி தொடர்பு:14:25 (28/06/2017)

''கழுகுப் பார்வையில் கத்தாரும்... ராஜஸ்தானும்! துல்லியமாய் உளவு பார்க்கிறதா கார்டோசாட் செயற்கைகோள்?

 கத்தார்

'பி.எஸ்.எல்.வி-சி 38' ராக்கெட் மூலம் 31 செயற்கைக்கோள்கள் ஜூன் 23-ம் தேதி அன்று விண்ணில் செலுத்தப்பட்டன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' வடிவமைத்து அனுப்பிய 'கார்ட்டோசாட்-2இ' செயற்கைக்கோளின் கேமரா பூமியின் பல இடங்களை படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது. திட்டமிட்டபடி செயற்கைக்கோள்கள் மிகத்துல்லியமாகச் செயல்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது இஸ்ரோ. ஜூன் 23-ம் தேதி காலை 9.29 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி 38 ராக்கெட் மூலம், 'கார்ட்டோசாட்- 2இ' செயற்கைக்கோளுடன் 30 சிறிய  செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. 'கார்ட்டோசாட் -2' வகை செயற்கைக்கோள்களில் இது ஆறாவது செயற்கைக்கோளாகும். இந்தவகை செயற்கைக்கோள்கள், புவியைக் கண்காணிக்கவும், வரைபடம் எடுக்கவும் உதவும் ஆற்றல் பெற்றது. இந்தச் செயற்கைக்கோளின் எடை 712 கிலோவாகும். சிறிய செயற்கைக்கோள்களுடன் சேர்த்து மொத்தம் 955 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி-சி 38 ராக்கெட் சுமந்து சென்று விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோ செயற்கைக்கோளுடன் ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லித்வியா, லித்துவேனியா, ஸ்லோவாக்கியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 14 நாடுகளின் 29 செயற்கைகோள்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நூருல் இஸ்லாம் நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த நானோ செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டன.

ராக்கெட் செலுத்தப்பட்ட 16-வது நிமிடத்தில் 505 கிலோ மீட்டர் உயரத்தில் முதல் செயற்கைக்கோளான, 'கார்ட்டோசாட்- 2இ' ராக்கெட்டில் இருந்து பிரிந்து, விண்வட்டப்பாதையில் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அடுத்தடுத்து, சிறிய இடைவெளிகளில் மற்ற செயற்கைக்கோள்கள் ராக்கெட்டிலிருந்து ஒவ்வொன்றாகப் பிரிந்து விண்வட்டப் பாதைகளில் இணைந்தன. செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதற்கு, விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பாராட்டு தெரிவித்தார். மேலும், ''விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் இடஞ்சுட்டி செயற்கைக் கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும். ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கைக்கோள் வரிசையில் ஏழு செயற்கைக்கோள்களும், இரண்டு மாற்று செயற்கைக்கோள்களும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோளின் கடிகாரம் வேலைசெய்வதை நிறுத்தி விட்டதால் அதற்கு மாற்றாக செயற்கைக்கோள் விரைவில் அனுப்பப்படும். 5,425 கிலோ எடை கொண்ட ஜி.சாட்-17 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள், இந்திய நேரப்படி ஜூன் 29-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும்'' என்றார் அவர்.  

ராஜஸ்தான்

''பூமியைக் கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ள கார்ட்டோசாட்- 2இ  செயற்கைகோள் அனுப்பும் படங்கள் மிகவும் துல்லியமானவையாக இருக்கும். பேரிடர் மேலாண்மை, விவசாயம், நில அமைப்பு, ரகசிய நடமாட்டங்களை அடையாளம் காணும் வகையில் தொலையுணர்வு கருவிகள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. 0.6 மீட்டர் நீளமுள்ள 0.6 மீட்டர் சதுரத்துக்குள் அடங்கும் அளவிலான சிறிய பொருள்களைக்கூட துல்லியமாகக் கண்டறியும் தொலைதூர செயற்கைக்கோள் இது'' என்று விஞ்ஞானிகள் அதன் பெருமையைத் தெரிவித்தனர். 


 

இந்நிலையில், கார்ட்டோசாட்-2இ செயற்கைகோள் ஜூன் 26-ம் தேதி எடுத்து அனுப்பிய புகைப்படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. அதில், எகிப்து நாட்டின் அலெக்ஸான்டிரியா நகரம், கத்தார் நாட்டின் தோஹா, இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தின் கிஷன்கர் பகுதியில் அமையவுள்ள புதிய ரயில்நிலையம் ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. கார்ட்டோசாட்டில் உள்ள கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களை உணரும் கேமரா மற்றும் பிற நிறங்களை உணரும் கேமராக்கள் இந்தப் படங்களை எடுத்து அனுப்பி இருக்கிறது. இஸ்ரோவின் வெற்றிப்பயணத்தில் 'கார்ட்டோசாட் 2இ' செயற்கைக்கோள் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி மூலம் ஏவப்பட்ட, வணிகரீதியிலான செயற்கைகோள்களின் எண்ணிக்கை 209-ஐ எட்டியுள்ளது. 'இது, வேறு எந்த நாடும் எட்டியிராத சாதனை' என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்