சோழசிராமணி மேம்பாலத்தை வைரல் வீடியோவாக்கி.. அரசை உலுக்கிய இளைஞர்! | young man's viral video about solasiramani bridge knocked the door of government

வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (28/06/2017)

கடைசி தொடர்பு:21:29 (28/06/2017)

சோழசிராமணி மேம்பாலத்தை வைரல் வீடியோவாக்கி.. அரசை உலுக்கிய இளைஞர்!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த சோழசிராமணி காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்ட தடுப்பணைப் பாலத்தின் தூண்கள், மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் வீடியோ, கடந்த நான்கு நாள்களாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வீடியோ பதிவு எடுத்து வெளியிட்ட சோழசிராமணி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரனைச் சந்தித்துப் பேசினோம்.

சோழசிராமணி

 

“என் சொந்த ஊர் சோழசிராமணி. நான்  சினிமாட்டோகிராஃபி  முடித்துவிட்டு, திரைப்படத் துறையில் வாய்ப்பு தேடி வருகிறேன். சோழசிராமணி கிராமத்தையும் பாசூர் கிராமத்தையும் இணைக்கும் விதமாகத்தான் சோழசிராமணி பாலம் அமைந்திருக்கிறது. இந்த பாலம் மற்றும் இதன் அருகில் உள்ள பவர் ஹவுஸ் 490.79 கோடியில்16 கதவணைகளோடு அமைக்கப்பட்டுள்ளன. பாலம் அமைந்துள்ள இடத்தில் தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டு, 30 மெகாவாட் மின்சாரம் எடுக்கப்படுகிறது. சின்ன வயதிலிருந்தே இந்தப் பகுதியை எனக்கு நன்றாகத் தெரியும். நாமக்கல் ஜேடர்பாளையம் சோழசிராமணியில் உள்ளவர்கள், இந்தப் பாலம் வழியாக விரைவாக ஈரோட்டுக்கும் கோவைக்கும் சென்றுவிடலாம். பாலம் கட்ட தொடங்கியபோது நாங்கள் அளவு கடந்த மகிழ்ச்சியடைந்தோம். 2013-ம் ஆண்டிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிட்டார்கள்.

அன்றிலிருந்து இந்தப் பாலத்தின் வழியே பஸ், லாரி, ஆட்டோ, டூ விலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் என நிமிடத்துக்கு ஒரு வாகனம் சென்றுகொண்டிருக்கும். ஆற்றில் தண்ணீர் இல்லாததால், வறண்டு கிடந்த அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்க்கச் சென்றேன். பாலத்தின் அடியில் சென்று பார்த்தபோது திடுக்கிட்டேன். பாலம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிட்டு  நான்கு ஆண்டுகளிலேயே மண் அரிப்பு ஏற்பட்டு தூண்கள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. அதுவும் மூன்றாவது தூணைப் பார்க்கும்போது குலை நடுங்கியது.

இந்தப் பாலத்தால், பொதுமக்களுக்கு ஒவ்வொரு நொடியும் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். இதை மின்சாரத் துறை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாம் என நினைத்தேன். பக்கத்தில் இருந்த மீனவர்களிடம், அபாயகரமான கட்டத்தில் பாலம் இருப்பதாகத் தெரிவித்தேன். `தம்பி, இது எல்லோருக்கும் தெரியும். பாலத்தையொட்டியே உள்ள மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு இது தெரியாமலா இருக்கும்? அவர்களிடம் சொல்ல உள்ளே போனால், கேட்டுக்குள்கூட உன்னை விட மாட்டாங்க' என்று சொன்னார்கள்.

சோழசிராமணி பாலம்


இந்தத் தகவலை எப்படியாவது பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என நினைத்தேன். என்னிடம் இருந்த செல்போனில்  தூண்களின் அபாய நிலையையும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் குரல்வழியே தெளிவாகப் பதிவுசெய்தும், தூண்களையும் பாலத்தின் மீது செல்லும் வாகனத்தையும் வீடியோவில் பதிவுசெய்தும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பதிவிட்டேன். அது காட்டுத் தீபோல் பரவியது. பல ஊடகங்கள், இந்தப் பாலத்தை நேரடியாகவே பார்வையிட்டுச் செய்தியாக்கின. மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் வந்த வல்லுநர்கள் குழு, ஆய்வு செய்துவிட்டுச் சென்றனர். தற்போது பாலத்தின் மீது வாகனங்கள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

பாலம்


நான் ஒரு சாதாரண இளைஞன். என்னைப் பொறுத்தவரை யாரையும் குறை சொல்ல வேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல. அதே சமயம், எந்த உயிரிழப்பும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இதைச் செய்தேன். அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது'' என்றார்.

 

 

தனி ஒருவனால்கூட சமூகத்தில் தன்னளவிலான மாற்றங்களைக் கொண்டுவரமுடியும் என்பது உண்மைதான்!


டிரெண்டிங் @ விகடன்