Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“பூப்படையாமலே மூப்படைந்து விட்ட ராஜேந்திரபாலாஜி” தடதட வைகைச் செல்வன்

ராஜேந்திர பாலாஜி

மிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனுக்கும் இடையே உருவாகியுள்ள மோதல், அனைவரையும் முகம் சுளிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

முன்னாள் கல்வி அமைச்சரும் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வன் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதே மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜி, பால்வளத்துறை அமைச்சராகவும் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துவருகிறார். 

பால் கலப்படம் குறித்தப் பிரச்னையின்போது, வைகைச் செல்வன் தெரிவித்தக் கருத்துக்குப் பதிலடியாக, “வைகை செல்வன் கூலிக்குப் பேசுகிறவர்” என்று ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்தார். அதைக் கண்டித்துப் பேசிய வைகைச் செல்வன், “சினிமா போஸ்டர் ஒட்ட பசை வாளி தூக்கியவர் ராஜேந்திரபாலாஜி'' என்று வார்த்தைகளால் தாக்கியிருந்தார். இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ''சீக்குப் பிடித்த பிராய்லர் கோழி; அழுகிய தக்காளி'' என்று ரைமிங்காக வைகைச் செல்வனை வசை பாடினார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வைகைச் செல்வன், “ராஜேந்திர பாலாஜி தொடக்கக் காலத்தில், ஏராளமான சட்டவிரோதச் செயல்களைச் செய்தார். அமைச்சராவதற்கு முன்பு புரோக்கர் வேலை செய்ததை எல்லாம் அவர் மறந்து விட்டுப் பேசுகிறார். ஆனால், நாடு மறக்காது. கவுன்சிலர் மீனாட்சிசுந்தரம் கொலை உள்ளிட்ட பிரச்னைகளில், சட்டத்தின் பிடியில் சிக்காமல் அவர் தப்பித்து இருக்கலாம். ஆனால், தர்மத்தின் பிடியிலிருந்து, நியாயத்தின் பிடியிலிருந்து ஒரு நாளும் தப்ப முடியாது.

மது குடித்தக் குரங்கு, மயக்கத்தில் மரத்துக்கு மரம் தாவுவதைப் போல, செய்தியாளர்கள் முன்பு பொறுப்பற்றவராக குரங்குச் சேட்டை செய்கிறார். மக்கள் அவரை எப்படி மதிப்பார்கள்... அவர் வாயிலிருந்து வரும் சொற்கள் வெறும் தனி மனிதனின் சொற்கள் அல்ல. அது அமைச்சரின் சொல். அரசின் சொல், சட்டத்தின் சொல். ஆனால், அவர் பேட்டியைப் பார்க்கும்போது அப்படியில்லை. தான்தோன்றியாக ஒரு நாலாந்தர மனிதனாக வார்த்தைகளை உபயோகிக்கும் அவரை மக்கள் வெறுக்கிறார்கள். இந்த அமைச்சர் பதவி என்பது, நீங்கள் அடுத்தவர் நிலங்களை அபகரித்து பட்டா போடுவது போன்று நிரந்தரமானது அல்ல; பரம்பரைச் சொத்தும் கிடையாது. 'ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும், அரசியல் காற்றில் ஆலமரமும் சாயும்' என்பது கடந்த கால வரலாறு. 

அன்னைத் தமிழையும், அம்மா-வையும் நம்பி பொதுவெளிக்கு வந்த எளியவன் நான். அமைச்சர் பதவி இல்லை என்றால், அடுத்த நாள் அவருக்கு முகவரி கிடையாது. ஆனால், எனக்குத் தமிழ் முகவரி தந்திருக்கிறது.

தனியார் பாலில் கலப்படம் என்று ‘மைக்’ முன்பாக மட்டும் பேசுவதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். தான் வகிக்கும் துறையில், கடந்த ஓராண்டாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார்.... ஏன் இதுவரை வெளியில் சொல்லவில்லை? அவர் வீட்டில் இருவர் இறந்து போனதற்கு பாலால் ஏற்பட்ட புற்றுநோய்தான் காரணமா... என்றெல்லாம் மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதைப் போக்க வேண்டியது அவரின் கடமை. 

‘மணிக்கொருதரம் நீங்கள் மங்குனி அமைச்சர் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?' என்ற சினிமா வசனத்தைத்தான் பால்வளத்துறை அமைச்சரைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. 

‘ஓர் அமைச்சர் தனக்கு மிரட்டல் வருகிறது என்று பகிரங்கமாக சொல்வதே, தான் அங்கம் வகிக்கும் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்ற ஒப்புதல் வாக்குமூலம்தானே? இதைக்கூடப் புரிந்து கொள்ளாதவராக இருக்கிறாரே' என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அழுகிப்போன தக்காளி, சீக்கு வந்த கோழி, பெண்களை மதிக்கத் தெரியாதவன், லூசு, அறிவில்லாதவன், கூலிப் பேச்சாளர், அரசியல் விபச்சாரி என்று ஊடகத்தில் உளறிக் கொட்டுவதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இவரெல்லாம் எப்படி அமைச்சரானார்? என்று கேள்வி கேட்கிறார்கள்.

தனியார் பாலில் ரசாயனம் இருந்தால் நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு ‘வாய்ச்சொல் வீரராக' பேசுவதால் யாருக்கு என்ன பயன்? என்று கேட்கிறார்கள். தக்காளி அழுகிப் போனால் தப்பில்லை, வேறு தக்காளி வாங்கிக் கொள்ளலாம். மனிதன்தான் அழுகிப் போகக் கூடாது. அழுகல் சிந்தனை கூடாது. சொந்த வாழ்க்கையில் எதற்கும் பயனில்லாமல், அழுகிப் போன அவர், என்னைப் பார்த்து அழுகிப் போன தக்காளி என்று கூறுவது நகைச்சுவையாக உள்ளது. முட்டை போடாத பெட்டைக் கோழியான அவர்தான், சீக்குக் கோழியாக இருக்க முடியுமே தவிர... நான் அல்ல. 

வைகைச் செல்வன்

எனது தாயோடும் மனைவியோடும் இரண்டு பெண் குழந்தைகளோடும் எப்படி எளிய வாழ்வு வாழவேண்டும் என்றும், அடுத்த பெண்களிடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் எனக்கு என் குடும்பம் பாடம் நடத்தியிருக்கின்றது. இதுபற்றி குடும்பமே இல்லாது, பூப்படையாமலே மூப்படைந்து விட்ட ராஜேந்திரபாலாஜி கருத்துச் சொல்ல தேவையில்லை.

2011-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை இருபதுக்கும் மேற்பட்ட அமைச்சர்களை முதலமைச்சர் அம்மா மாற்றி அமைத்தார்கள். அவர்களெல்லாம் பெண்களை மதிக்கத் தெரியாதவர்களா? என்பதை ராஜேந்திரபாலாஜிதான் விளக்க வேண்டும். எனவே அருமை நண்பர், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கடந்த கால கீழ்மைத்தனங்களை விட்டுவிட்டு, தனது துறையில் கவனம் செலுத்தி, தனியார் பாலில் கலப்படத்தைக் கண்டறிந்து, குற்றவாளிகளைச் சட்டத்தின் பிடியில் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தர வேண்டும். எவையெல்லாம் கலப்படப்பாலோ அவற்றையெல்லாம் தடை செய்து, நாட்டு மக்களுக்கு நல்லது செய்து, அதன்மூலம் ஆட்சிக்கும், கட்சிக்கும் பெருமையைத் தேடித் தரவேண்டும்.

நாளை காலை எழுந்தவுடன் பாலை வாங்கலாமா? வேண்டாமா? என்ற அச்சத்தோடும், பீதியோடும் மக்களை வைத்திருக்கும் அவர், எந்தப் பாலை வாங்க வேண்டும்? எந்தப் பாலை வாங்கக்கூடாது? என்று ஏன் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை? 

அதைச் செய்யாமல், ஒரே கட்சியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளரோடு வார்த்தைப் போர் நடத்துவதால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? ஒரே கட்சியில் அமைச்சராக இருக்கும் அவரது கருத்தும், இந்த அரசின் கருத்தும், செய்தித் தொடர்பாளராக இருக்கும் எனது கருத்தும், ஒன்றாக இருக்கும்போது ஏன் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன் வைக்கிறார்'' என்று கொந்தளித்து முடித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement