வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (28/06/2017)

கடைசி தொடர்பு:12:54 (03/07/2017)

‘ஸ்டாலின் காட்டும் அன்புக்கு மிக்க நன்றி!’ - நெகிழும் தனியரசு எம்.எல்.ஏ.

தனியரசு எம்.எல்.ஏ

.தி.மு.க அம்மா அணியின் எம்.எல்.ஏக்களான தனியரசு, கருணாஸ், தமிமூன் அன்சாரி ஆகியோர், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினிடம் காட்டும் நட்பைப் பார்த்து அதிர்ந்து போய் இருக்கிறார்கள் ஆளும்கட்சியின் அமைச்சர்கள். ‘பேரறிவாளனுக்கு பரோல் விடுப்பு வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கைக்கு ஆதரவு கேட்டு ஸ்டாலினை சந்தித்தது இந்த மூவர் அணி. இதனையடுத்து, ‘முரசொலி பவள விழா நிகழ்வுக்கு வர வேண்டும்' என மூவர் அணிக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். 

தனியரசு எம்.எல்.ஏவிடம் பேசினோம்.

நீங்கள் ஸ்டாலினை சந்திக்கிறீர்கள். அவர் உங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கிறார். என்னதான் நடக்கிறது? 

“முரசொலி பவள விழாவில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டார். என் மீது நீங்கள் காட்டும் அன்புக்கு மிக்க நன்றி என ஸ்டாலினிடம் கூறினேன். விழாவுக்குச் செல்வது குறித்து கட்சி நிர்வாகிகளுடனும் தோழமைக் கட்சித் தலைவர்களிடமும் பேசி முடிவு செய்வோம். எங்கள் அணியிலும் உத்தரவு வாங்க வேண்டும். இந்த அரசிடம் இருந்து நாங்கள் விலகி இருக்கவில்லை. அனைவரையும் நட்புடன்தான் பார்க்கிறோம். வேலூர் சிறையில்26 ஆண்டுகளாக பேரறிவாளன் இருப்பது கொடுமையானது. 'இந்த விவகாரத்தில் நீங்களும் அழுத்தம் கொடுக்க வேண்டும்' என ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம். சட்டமன்றத்திலும் இதைப் பதிவு செய்தோம். இந்த விவகாரம் ஆய்வில் இருப்பதாக பேரவைத் தலைவர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளும் எங்களுடைய கோரிக்கையை ஆதரிப்பது என்பது, அரசு விரைவாக முடிவெடுக்க உதவும் என எண்ணினோம். இதனால் அரசுக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்புதான் ஏற்படும். யாருமே எதிர்க்காமல் ஒரு விஷயத்தை செயல்படுத்துவது மகிழ்ச்சியானதுதான். அதேபோல், மாடு விற்பனைக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். சட்டசபையில் இருந்தும் வெளிநடப்பு செய்தோம். ஒத்த கருத்துடைய விஷயம் என்பதால், தி.மு.கவும் வெளிநடப்பு செய்தது". 

கடந்த காலங்களில் பொதுப் பிரச்னைக்காக எதிர்க்கட்சிகளை நீங்கள் சந்தித்ததில்லையே?

ஸ்டாலின்“முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு, கட்சிக்குள் சில குழப்பங்கள் ஏற்பட்டன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போதுதான் சட்டமன்றக் கூட்டத் தொடர் தெளிவாக நடந்து கொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி, உதய் திட்டம் என ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசின் பல திட்டங்களில், தமிழக அரசு சமரசம் செய்துவிட்டதாக செய்திகள் வெளியானது. மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவது நல்லதுதான். அதேநேரம், மாடு விற்பனை உள்பட மக்களை வதைக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மிகச் சிறப்பாகவே ஆட்சியை நடத்தி வருகிறார். அனைவருடன் அன்புடன் பழகுகிறார். எம்.எல்.ஏக்களை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். கடுமையாக உழைக்கிறார். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அரசியல்ரீதியாக முடிவுகளை எடுப்பதில், அவருக்கு சில தயக்கங்கள் இருக்கின்றன. அவற்றில் இருந்து அவர் வெளியே வர வேண்டும் என விரும்புகிறோம். அம்மாவின் கொள்கைக்கு வலு சேர்க்கும் வகையில், நாங்கள் சில விஷயங்களை முன் வைக்கிறோம். இதை எடப்பாடி பழனிசாமி தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார். மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றித்தான் அவரிடம் வலியுறுத்தி வருகிறோம்". 

இப்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சிதான் என அமைச்சர்கள் பேசுகிறார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? 

“அரசு நிர்வாகத்தில் எடப்பாடி பழனிசாமி திறமையாக செயல்படுகிறார். அரசியல்ரீதியாக முடிவெடுக்க அவரால் முடியவில்லை. மத்திய அரசு நிர்பந்தம் கொடுக்கிறது. மத்திய அரசின் மிரட்டலால், சுயமாக முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிறார். கட்சி அமைப்புக்குள்ளும் இரண்டு, மூன்று பிரிவுகளாக சிதறிக் கிடப்பதும் தலைமை இல்லாததும்தான் இந்த தயக்கங்களுக்குக் காரணம் என நினைக்கிறேன். மத்திய அரசு இந்த பலவீனங்களைப் பயன்படுத்தி, அவர்களுக்கு சாதகமான வேலைகளைச் செய்து கொள்கிறது. ஆட்சியாளர்களோடு அனைத்து விஷயங்களிலும் நாங்கள் பயணிப்பதை மக்கள் விரும்பவில்லை. குறிப்பாக, பலரும் அதை விரும்பவில்லை. விவசாயிகளின் ஆடு, மாடு கால்நடைகளை வாங்குவதற்கு ஆளில்லை. ஆயிரம் ஆண்டுகளாக எங்களுக்கு என்று இருந்த உரிமைகளைப் பறிக்கிறார்கள். இதைப் பற்றி நான் இப்போதுகூடப் பேசவில்லையென்றால், மக்கள் பிரதிநிதியாக இருப்பதில் என்ன பயன் இருக்கிறது? ஏழை எளிய மக்களின் உணவு உண்ணும் உரிமையைப் பறிப்பதை எப்படி ஏற்க முடியும்? அதேபோல், இந்தியாவிலேயே இல்லாத நடைமுறையாக பேரறிவாளன் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவரது பரோல் விடுப்பு குறித்து அரசு விரைவாகப் பரிசீலிக்க வேண்டும் என விரும்புகிறோம். அதற்காக, காங்கிரஸ் உறுப்பினர்களின் கைகளைப் பிடித்து கெஞ்சிக் கேட்டோம். சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரும்போது, யாரும் எதிர்க்கக் கூடாது என்ற எண்ணம்தான் காரணம்" . 

தி.மு.க பக்கம் நீங்கள் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா? 

“மக்களின் எண்ண ஓட்டம், அரசுக்கு எதிராக மாறும்போது அதற்கு எதிராகப் பேசுகின்றவர்களை அவர்கள் கவனிக்கத் தொடங்குகின்றனர். இது ஜனநாயகத்தில் இயல்பானது. எதிர்க்கட்சிகள் மீது மக்களுக்குப் புரிதல் வரத்தான் செய்யும். இதை வைத்துக் கொண்டு நாங்கள் தி.மு.க பக்கம் செல்லப் போகிறோம் என்பது தவறான தகவல். அப்படியெல்லாம் இல்லை. ஓர் அணியைத் தீர்மானிப்பது தேர்தல் நேரத்து சூழல்கள்தான். அவற்றைப் பொறுத்துத்தான் வெற்றி அமையும். இன்றைக்குப் போலவே, பொதுவான கோரிக்கைகளை முன்வைத்து தி.மு.கவுடன் இணைந்து போராடுவது என்பது தேர்தலை மையமாக வைத்து அல்ல. பூனை குட்டியைக் கவ்வுவது போலத்தான் இந்த ஆட்சிக்கும் எங்களுக்குமான உறவு இருக்கிறது. அனைத்துக் கட்சிகளுடனும் இணக்கமான உறவை கடைபிடித்து வருகிறோம். பல்வேறு சமூகங்களின் கோரிக்கைகளை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம். எதிர்க்கட்சி என்ற முறையில் செயல் தலைவர் ஸ்டாலினுடன் கலந்து பேசுவதால், பொதுவெளியில் அதுபோன்ற தோற்றத்தைக் காட்டுகிறது. அவ்வளவுதான்". 

'ஸ்டாலினை நீங்கள் சந்தித்தது ஜெயலலிதாவுக்கு செய்த துரோகம்' என்கிறாரே தீபா? 

" ஜெயலலிதா பெயரைச் சொல்லி, 'உறவுக்காரர்' என அவர் வலம் வருவதே, அம்மாவுக்குச் செய்யும் துரோகம்தான். போயஸ் கார்டனில் அவர் நடந்து கொண்ட விதத்தை அனைவரும் பார்த்தார்கள். அவர் வெளியிட்ட அறிக்கையை, அவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை. அவருடைய அரசியல் பணியில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அவர் மீது எனக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. அப்படியே அந்த அறிக்கை அவர் வெளியிட்டிருந்தாலும், எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்காதவர், எங்களை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை. அவரை நாங்கள் மன்னித்துவிட்டோம்".


டிரெண்டிங் @ விகடன்