Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரிசல் தமிழின் தொன்மத்தைச் சுமந்த கழனியூரன்

பாலியல் வேட்கையும் தேவையும் இல்லாத உயிரினங்களே இல்லை. ஆனால், எல்லா உயிரினங்களுமே தங்கள் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப சில வரம்புகளை வைத்திருக்கின்றன. பெரும்பாலும் எந்த உயிரினமும் அந்த வரம்புகளைத் தாண்டுவதே இல்லை. ஆனால், மனிதன் அப்படியல்ல... வரம்பு தாண்டுவதில்தான் அவன் வேட்கை நிறைவடைகிறது.

மனிதனின் பாலியல் வேட்கையை வரைமுறைப்படுத்த ஒவ்வோர் இனக்குழுவும் சில வழிமுறைகளைக்கொண்டிருக்கிறது. நீதிக்கதைகள், இலக்கியங்கள், கலைகள் எனப் பாலியல் அறத்தைப் பயிற்றுவிக்கும் வழிமுறைகளில் பல வடிவங்கள் உண்டு. தமிழ்ச் சூழலிலும் அப்படியான பல ஏற்பாடுகள் இருக்கின்றன.

இன்று `x'  என்று அடித்தால், கைப்பிடித்து லட்சக்கணக்கான பக்கங்களுக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது இணையம். பெரும்பாலான சாத்தியங்களைத் தகவல் தொழில்நுட்பம் உருவாக்கித் தந்துவிட்டதால், பாலியல் கல்வியை மொபைல்போனே போதித்துவிடுகிறது. 

கடந்த தலைமுறைக்கெல்லாம் அது சாத்தியமில்லை. வீட்டில் பெரியவர்கள் இருக்கும்போது, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் நிமிர்ந்து பார்க்கவே சங்கடப்படுவார்கள். திருமணம் வரைக்கும் பாலியல் பற்றிய புரிதலின்றி, வெறும் கற்பனைகளுடனே காலம் கடத்துவார்கள். பாலியல் பற்றி மற்றவர்களிடம் பேசுவதோ, சந்தேகங்கள் கேட்பதோகூட அவமானம், குற்றம் எனக் கருதப்பட்ட காலம் அது. 

கழனியூரன்

ஆனால், அந்தக் காலத்திலும் பாலியல் விழிப்புஉணர்வை உருவாக்க நம் மூதாதையர்கள் சில ஏற்பாடுகளை வைத்திருந்தார்கள். ஆண்களுக்கு மட்டுமல்ல... பெண்களுக்கும் அப்படியான ஏற்பாடுகள் உண்டு. `ஔவை நோன்பு' என்பார்கள். ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பூப்பெய்திய இளம் பெண்களும் மூத்த பெண்களும் இணைந்து இந்த வழிபாட்டை நடத்துவார்கள். இதில் ஆண்களுக்கு அனுமதியில்லை. வழிபாட்டில் பயன்படுத்தும் பொருள்கள், பிரசாதங்களைக்கூட ஆண்கள் கண்ணில் காட்ட மாட்டார்கள். ஒதுக்குப்புறமான ஓர் அறையில் வழிபாடு நடக்கும். நடுவில் பிள்ளையார் வீற்றிருப்பார். (அங்கு பிள்ளையார் ஏன் வந்தார்  எனத் தெரியவில்லை). முதலில் உப்பில்லாத அரிசிமாவில் கொழுக்கட்டைகள் செய்து படைப்பார்கள். பிறகு, அனைத்துப் பெண்களையும் அருகில் அமர்த்தி, மூத்த பெண் ஒருவர் கிசுகிசுத்த குரலில் ஒரு கதை சொல்வார். (ராஜா-ராணி கதைதான்) சிருங்காரமும் சிலேடைகளும் கலந்திருக்கும். உறவுகள், உளவியல் என எல்லாம் இருக்கும். 

ஆண்களுக்கும் அப்படியான ஏற்பாடு இருந்தது. 

இன்று `கரகாட்டம்' என்ற பெயரில் நடக்கிறதே குறவன் குறத்தி ஆட்டம், அதுதான் அந்தக் காலத்திய இளைஞர்களுக்குப் பாலியல் பாடம். எல்லையில் இருக்கும் காவல் தெய்வத்துக்கு ஆண்டுக்கொரு முறை திருவிழா நடக்கும். அதில் பெரியோர் முன்னிலையில் குறவன் குறத்தி ஆட்டம் நடக்கும். பாலியல் வார்த்தைகள், கதைகள், சீண்டல்கள் என அந்தக் கலை விரியும். பிற்காலத்தில் திரைப்படங்கள் பாலியல் பாடங்களைப் போதிக்கத் தொடங்கின. தெய்வீகக் கலையாக இருந்த கரகாட்டமே `குறவன் குறத்தி' ஆட்டமாக மாறியது. இன்று ரிக்கார்டு டான்ஸ்களே செயல்முறைப் பயிற்சியை அளித்துவிடுகின்றன.

இப்படியான நவீன காலகட்டத்தில், நம் மூதாதையர்கள் பயன்படுத்திய பல அறங்கள் காணாமல்போய்விட்டன. அவற்றை மீட்பதில் நாம் நம் அடையாளங்களை மீட்பதும் அடங்கியிருக்கிறது. பெருவாரியான இலக்கியவாதிகள் புனைவுக்குத் தரும் முக்கியத்துவத்தை நாட்டுப்புற வழக்காறுகளை ஆவணப்படுத்தவோ, அவற்றை மையப்படுத்தவோ தருவதில்லை. கி.ரா. அப்படியான எழுத்துக்கு முன்னோடி. அவருக்குப் பிறகு கழனியூரனைச் சொல்லலாம். 

வரலாறு என்பது மக்களிடமிருந்துதான் தொடங்குகிறது. ஆனால், தமிழில் மக்கள் வரலாறு பெரியளவில் எழுதப்படவில்லை. ஒவ்வோர் ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றில்தான் ஒரு சமூகத்தின் பண்பாடு, கலாசாரம் எல்லாம் அடங்கியிருக்கின்றன. ஆனால், தமிழில் வட்டார வரலாறு எழுதப்படவே இல்லை. அது எழுத்தாளர்களுக்குத் தீண்டத்தகாத வேலையாக அல்லது தகுதியற்ற வேலையாக இருக்கிறது. கி.ரா. அதை வெகு சிறப்பாக முதல்நிலை எழுத்தாக்கினார். அவரின் வழித்தோன்றலான கழனியூரன், அதை முன்னெடுத்துச் சென்றார். 

ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கழனியூரன், `தாய் வேர்', `கதை சொல்லியின் கதை', `நெல்லை நாடோடிக் கதைகள்', `மண் மணக்கும் மனுஷங்க', `நாட்டுப்புற நீதிக் கதைகள்', `மண்ணின் கதைகள்', `மக்களின் கதைகள்' என 44 நூல்களை எழுதினார். `கதை சொல்லி' இதழுக்குப் பொறுப்பாசிரியராகவும் இருந்தார். கழனியூரனின் இயற்பெயர் அப்துல்காதர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் அவரது சொந்த ஊர். 

மக்கள் மத்தியில் தீவிரமாகக் களப்பணியாற்றி உயிர்ப்பாக மிஞ்சியிருக்கும் கதைகளைச் சேகரித்துத் தொகுப்பதையே தம் பணியாகக்கொண்டிருந்தார் கழனியூரன். கி.ரா-வோடு இணைந்து தொகுத்த `மறைவாய்ச் சொன்ன கதைகள்' அவரின் ஆகச்சிறந்த பணி.  

கிராமங்களில் சாதாரண பேச்சிலேயே பழமொழிகளையும் சொலவடைகளையும் பொழிவார்கள். பாதிக்குப் பாதி பாலியல் விஷயமாகத்தான் இருக்கும். கேலி, கிண்டல், கோபம், மகிழ்ச்சி, வசை எல்லாவற்றிலும் பாலியல் ஒட்டியிருக்கும். அதையெல்லாம் கவனமெடுத்துச் சேகரித்து, தன்மை குலையாமல் செம்மைப்படுத்தி ஆவணப்படுத்திய கழனியூரன், தம் இறுதிகாலம் வரை மக்களோடு மக்களாக நின்றே இலக்கியம் செய்தார். 

கழனியூரன்  27.6.2017 அன்று காலமாகிவிட்டார். கி.ரா-வுக்கு ஒரு பெரும்விழா எடுக்கும் முனைப்பில் இருந்தவரை, காலம் பறித்துக்கொண்டது. கழனியூரன் மறைந்தாலும் அவர் சேகரித்து ஆவணப்படுத்தி வைத்திருக்கும் கரிசல் தமிழின் தொன்மங்கள் காலத்துக்கும் நிற்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close