“எஸ்.வி.சேகரின் வீடியோ பொய்யுரைகள் நிலைக்காது!” : ஜோதிமணி | S. Ve. Sekar is a Liar : Jothimani

வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (29/06/2017)

கடைசி தொடர்பு:11:59 (03/07/2017)

“எஸ்.வி.சேகரின் வீடியோ பொய்யுரைகள் நிலைக்காது!” : ஜோதிமணி

டிகர் எஸ்.வி.சேகர் பேசி வெளியிட்டிருக்கும் 11 நிமிட வீடியோ ஒன்று தமிழக அரசியல் மட்டத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, நியூஸ் 7 தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தை மையமாக வைத்து, அந்த வீடியோவைப் பேசி வெளியிட்டிருக்கிறார் அவர். அதில், 'சாதியும்,மதமும் நமக்குத் தாய் தந்தை போல', 'எந்தப் பார்ப்பனர் மீதும் வழக்குகள் இல்லை' என்றும், '99.99 சதவிகிதம் மதிப்பெண்கள் வாங்கினால்கூட, பார்ப்பன மாணவர்களுக்குப் படிப்பதற்கு இடம் கிடைப்பதில்லை', 'நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட நண்பர் மதிமாறன் குறுக்குப் புத்திக்காரர்' என்றெல்லாம் பல அதிரடிக் கருத்துகளை வாரிக் கொட்டியிருக்கிறார்.

ஜோதிமணி

எஸ்.வி சேகரின் இந்தக் கருத்துகளுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், மற்றுமொரு டி.வி விவாத நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணியும் எஸ்.வி.சேகரின் வீடியோப் பதிவுக்கு எதிராகக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், "அந்த டி.வி விவாத நிகழ்ச்சியில், மதிமாறனும், பி.ஜே.பி-யைச்சேர்ந்த நாராயணனும் கலந்துகொண்டு விவாதம் பண்ணினர். அதை மையமா வச்சுத்தான் எஸ்.வி.சேகர் இப்படியொரு வீடியோ விஷத்தை வெளியிட்டிருக்கிறார். அதோடு, சமீப காலமாக டி.வி விவாத நிகழ்ச்சிகளில் என்ன தலைப்பு வைப்பது, அதில் விவாதம் பண்ண யார் யாரை அழைப்பது என்பது வரை பி.ஜே.பி-யினர்தான் முடிவு செய்கிறார்கள். அப்படி எதற்கு அந்த விவாத நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்? இதனால், மாற்றுக் கட்சி விவாத பங்கேற்பாளர்கள் ஒன்றுசேர்ந்து இதுசம்பந்தமாக ஒரு கூட்டம் போட்டார்கள். அதையும் வீடியோவில் குறிப்பிட்டுள்ள எஸ்.வி.சேகர், 'இந்தக் கூட்டம் பார்ப்பனர்களுக்கு எதிரானக் கூட்டம்'னு கூப்பாடு போட்டிருக்கிறார்.

உண்மையில், பி.ஜே.பி-யின் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் முகச்சுளிப்பை பொது வெளியில் சமன் பண்ணுவதாக நினைத்துக் கொண்டு பி.ஜே.பி-யினர் தொடர்ந்து இதுபோல் செயல்பட்டு வருகிறார்கள். மோடி அரசின் மூன்றாண்டு கால படுதோல்வி, அந்த அரசின் தமிழர் விரோதப் போக்கு இவற்றை தோலுரிக்கும் டி.வி விவாதங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல், இப்படி குறுக்கு வழியில் விஷமத்தனத்துடன் அதனை எதிர்கொள்ளத் தொடங்கி இருக்கிறது பி.ஜே.பி. அதனால்தான், விவாத நிகழ்ச்சிகளில் பாயின்ட்டாகப் பேசாமல், உரக்கப் பேசுவது, சம்பந்தமில்லாமல் பேசுவது, சக பேச்சாளர்களை அநாகரிகமாகத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது, ஆணவத்தோடு, அகம்பாவத்தோடு நடந்துகொள்வதுன்னு டி.வி விவாத நிகழ்ச்சிகளைச் சந்தைக்கடையாக மாற்றி வருகிறார்கள். 'ஏன்,சொன்னபடி இரண்டு கோடி வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை, பொருளாதாரம் ஏன் சரிந்து வருகிறது' என்று கேட்டால்கூட, 'இந்துக்களுக்கு எதிராக பேசுகிறீர்கள்' என்று கூச்சல் போடுகிறார்கள். இவை எல்லாம் எல்லா டி.வி விவாதங்களிலும் நாம் பார்ப்பதுதான்.
 பி.ஜே.பி-யினர் இப்படி அநாகரிகமாகச் செயல்படுவதன் மூலம் தங்களைத் தாங்களே எக்ஸ்போஸ் செய்துகொள்கிறார்கள். டி.வி விவாத நிகழ்ச்சிகளைக்கூட தங்களது ஆளுமையின் கீழ்  நடத்த நினைக்கும் பி.ஜே.பி-யின் இந்தப்போக்கு மோசமானது. 'நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்; நாங்கள் நினைப்பதைத்தான் பேச வேண்டும்' என்று எல்லா மட்டத்தையும் பி.ஜே.பி - ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் அடிமையாக்கப் பார்க்கிறார்கள்.

ஜோதிமணிகாங்கிரஸ், ஆட்சியில் இருந்தபோது எங்கள் மீது மாற்றுக் கட்சியினர் வைக்காத விமர்சனமா? அதற்காக, காங்கிரஸ் கட்சி எல்லோரையும் அடிமைகளாக்க முயலவில்லை. மாறாக, விமர்சனங்களைக் கருத்துகள் மூலமே எதிர்கொண்டனர். பி.ஜே.பி-யின் இந்தப் போக்கை இப்படியே நீடிக்க விட்டால், நாளை பி.ஜே.பி விரும்புகிற ஒன்றைத்தான் நாம் பார்க்கவும், கேட்கவும் முடியும். இப்போதே ஏறக்குறைய அந்த கொடுமைதான் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் புரியும்படி சொல்வதானால்,பி.ஜே.பி-யின் இந்தப் போக்கை இப்படியே விட்டால், நாளை நமது முன்னோர்களான குலதெய்வங்களின் இடத்தில், ஆர்.எஸ்.எஸ் பெயரால் ஒரு கடவுள் உட்கார்ந்திருப்பார். அதைத்தான் நாம் தொழ வேண்டும். அதோடு, கர்ப்பக்கிரகத்துக்குள் நாம் போக முடியாது. இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு,வெளியில் நின்று திருநீறு மட்டுமே வாங்க முடியும் நிலை வரும். நமது பண்பாட்டை அடித்து நொறுக்கிவிடுவார்கள். நாம் வரலாறும்வேரும் அற்றவர்களாக மாற்றப்படுவோம். இதை நோக்கித்தான் பி.ஜே.பி காய் நகர்த்தி வருகிறது. அந்த முயற்சியை மேற்கொள்ளும் தமிழகத்தின் சிறு துரும்புதான் எஸ்.வி.சேகர் போன்றவர்கள்.

இந்தச் சாதி, மத வெறியைப் பார்ப்பனிய போர்வையில் செய்யப் பார்க்கிறது பி.ஜே.பி. இதை எல்லா பார்ப்பனர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விடுதலை நெருப்பை ஊதி வளர்த்த பாரதியும் தேசப்பிதாவைக் கொன்ற கோட்சேவும் பார்ப்பனர்கள்தான். இதில் யார் பக்கம் இருப்பது என்பதை அந்த மக்களே முடிவு செய்யட்டும். 'எங்கள் இனத்தவர் மீது எஃப்.ஐ.ஆர் இல்லை'ன்னு எஸ்.வி.சேகர் சொல்லி இருக்கிறார். கோட்சே தொடங்கி பல கொலையாளிகளை, குற்றவாளிகளை எங்களால் வரிசைகட்டிச் சொல்ல முடியும். அவர்களையும் நாங்கள் பார்ப்பனர் சாதியைச் சார்ந்த கொலையாளிகளாகப் பார்க்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்த கொலையாளிகளாகவேப் பார்க்கிறோம். 'பார்ப்பனர்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் பின் வைக்கப்படுகிறார்கள்'னு உண்மைக்குப் புறம்பாக சொல்லி இருக்கிறார். நான் அவரைக் கேட்கிறேன், 'ஆர்.எஸ்.எஸ்-ஸின் தலைமைப் பதவிக்கு இதுவரை எத்தனை பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்கள் வந்திருக்கிறார்கள்? மோடி அரசில் எத்தனை பேர் தலித்கள்? 

மத்திய இணை அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணனைத் தரையில் அமர வைத்த சங்கரமடம், மத்திய அரசில் ஒரு பதவியிலும் இல்லாத சுப்பிரமணியன் சுவாமிக்கு ஏன் இருக்கை கொடுத்தார்கள்? சேரி தொடங்கி கிராமங்கள் வரை கிரிக்கெட் விளையாடித் திரியும் எங்கள் பிள்ளைகள் தமிழ்நாடு அணியில்கூட 50 சதவிகிதம் இடம் பிடிக்க முடியவில்லையே? இந்த இடஒதுக்கீடு மோசடியை எந்த வகையில் சேர்ப்பதுன்னு எஸ்.வி.சேகர்தான் விளக்கணும். எஸ்.வி.சேகர் போன்றவர்களை வைத்துக் கொண்டு பிரிவினைவாத, ரத்தம் குடிக்கும் வெறுப்பு அரசியலைத்தான் பி.ஜே.பி செய்துவருகிறது. இதை அந்தச் சமூகத்தில் உள்ள பெரும்பான்மை மக்களே உணர்ந்திருக்கிறார்கள்.

டி.வி விவாத நிகழ்ச்சிகளில், பி.ஜே.பி-யின் விஷ முகமூடி எங்களை மாதிரியான ஆட்களால் தோலுரிக்கப்படுகிறது. எனவே பயத்தில், கண்டதையும் செய்கிறது பி.ஜே.பி.

எஸ்.வி.சேகரும் அவருடைய பயத்தை வீடியோ மூலம் உளறி இருக்கிறார். அவர் ஒன்றை உணர வேண்டும்... பொய்களுக்கு ஆயுள் கம்மி. அவரது வீடியோ பொய்யுரைகள் எட்டு நாளைக்குகூட நிலைக்காது. அதேநேரத்தில், அவர்களின் பொய்யுரைகளை, தமிழர் விரோதப் போக்கை பொதுவெளியில் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்" என்றார் ஆவேசமாக.


டிரெண்டிங் @ விகடன்