Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ஊர்கூடி என்னைப் படிக்க வைக்கிறீங்க... நான் ஜெயிப்பேன்!” - உக்ரைன் சென்ற தமிழச்சியின் நெகிழ்ச்சி #AramSeyaVirumbu

பொம்பளபிள்ளைங்க சைக்கிள் ஓட்டினாலே சத்தம்போடும் கிராமத்துப் பின்புலம் உடைய உதயகீர்த்திகா, இப்போ ராக்கெட் ஓட்டத் தயாராகிட்டிருக்கார்னா ஆச்சர்யம்தானே! லட்சியத்தில் பாதிக் கிணற்றைத் தாண்டிவிட்ட அவர், மீதியைத் தாண்ட போராடிக்கொண்டிருக்கிறார். 

விண்வெளி வீராங்கனைக்கு படிக்கும் தமிழச்சி

இளையராஜா, பாரதிராஜா போன்ற பிரபலங்களை அள்ளித் தந்த அல்லிநகரம்தான் உதயகீர்த்திகாவின் சொந்த ஊர். நிலவைப் பார்த்து சோறு உண்ட வயதிலிருந்து விண்வெளிதான் உதயகீர்த்திகாவின் விளையாட்டு மைதானம். எங்கேயாவது `வானத்தை ஆராய்வோம்'னு ஒரு போர்டு பார்த்தால்கூட உள்ளே சென்று அட்டெண்டன்ஸ் போட்டுவிடும் விண்வெளிப் பைத்தியம். 

மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடந்த கட்டுரைப் போட்டிகளில் உதயா எழுதிய `சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் விண்வெளியின் பங்கு' `வழி நடத்தும் விண்வெளி' ஆகிய கட்டுரைகள் முதல் பரிசைப் பெற்றன. இந்தக் கட்டுரைகள், பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்துக்குள்ளும் உதயகீர்த்திகாவை நுழையவைத்தது; பெரிய பெரிய விஞ்ஞானிகளைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பும்  உருவானது.

ப்ளஸ் டூ-வில் உதயகீர்த்திகா 1,130 மதிப்பெண் பெற்றார். விண்வெளி வீராங்கனை ஆக வேண்டுமென்பது மட்டுமே அவரின் ஒரே லட்சியம். தந்தை தாமோதரனோ சாதாரண எழுத்தாளர். பத்திரிகைகளுக்குச் சிறுகதை எழுதுவார். புரூஃப் படித்துக் கொடுப்பார். அதில், கிடைக்கும் சொற்ப வருவாயில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. `இந்தச் சூழலில் எங்கே போய் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிப்பது?' என்ற கேள்வி தொக்கிநின்றது. உதயாவோ, தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் ரகம். 

விண்வெளி வீராங்கனையாகத் துடிக்கும் உதயகீர்த்திகாஇணையத்தில் தேடியபோது, உக்ரைனின் கர்கீவ் யூனிவர்சிட்டி ஆஃப் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்புக்குக் குறைந்த செலவே ஆவது தெரியவந்தது. தான் எழுதிய கட்டுரைகள்,  கண்டுபிடிப்புகளின் மாதிரிகளை அந்தப் பல்கலைக்கு அனுப்பிவைத்தார். `எங்கள் பல்கலையில் படிக்க, உங்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறோம். எப்போது வந்து சேரப்போகிறீர்கள்?' என ஆச்சர்ய பதில் கிடைத்தது. சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனார் உதயா. 

பொதுவாகவே ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள் மதிப்பெண், நுழைவுத்தேர்வு போன்றவற்றுக்குப் பதிலாக மாணவர்களின் திறமை, ஆர்வத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பவை. உதயகீர்த்திகாவின் கண்டுபிடிப்புகள் கர்கீவ் பல்கலையை அந்த அளவுக்குக் கவர, உக்ரைனுக்கு விமானம் பிடிக்க முடிவுசெய்தார் இந்தத் தேனிப் பெண். 

முதல் தடையைத் தாண்டிய உதயாவுக்கு, பணம் அடுத்த தடையாக இருந்தது. நான்கு ஆண்டுகள் படிப்புக்கு, கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய் வரை செலவாகும். `இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவது?' என்ற கேள்வி தொண்டையில் மீன் முள்ளாகக் குத்தி நின்றது.

நடிகர் ராகவா லாரன்ஸும் ஆனந்த விகடனும் இணைந்து செயல்படுத்தும் `அறம் செய விரும்பு’ திட்டத்தில் விண்ணப்பிக்க, முதல் கட்டமாக 1.80 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. பல்வேறு நல்ல உள்ளங்களும் உதவி புரிய, இப்போது ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிப்பில் இரு ஆண்டுகள் முடித்துவிட்டார். இதுவரை 15 லட்சம் ரூபாய் வரை செலவாகியுள்ளது. இன்னும் இரு ஆண்டுகள் படிக்க வேண்டும். நிதி இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார். 

தற்போது சென்னை வந்திருந்த உதயகீர்த்திகாவிடம் உக்ரைன் நாட்டு அனுபவங்கள் குறித்துப் பேசினோம். “உலகத்திலேயே சோவியத் நாடுகள்தான் விண்வெளிப் படிப்புக்கு ஃபேமஸ். தமிழ்நாடு மாதிரி அந்த நாட்டுலயும் தாய்மொழிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாங்க. நான் தமிழ் மீடியத்துலதான் படிச்சேன். உக்ரேன்லகூட நிறைய பேர் தமிழ் கத்துக்குறாங்க. தமிழ்மொழியைக் கத்துக்குறதுக்கு அங்கே மன்றம் எல்லாம் வெச்சிருக்காங்க. அவங்களுக்கு தமிழ்மொழி மேல அவ்வளவு மரியாதை. அதெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யமா இருந்தது. நான்கூட, அந்த மன்றத்துக்குப் போயிருக்கேன். எங்ககிட்ட தமிழ்லயே பேசுறதுக்கும் பழகுறதுக்கும் அவ்வளவு ஆர்வம் காட்டுவாங்க. நிறைய மொழிகளைக் கத்துக்கணும்கிற ஆர்வமும் இதுக்கு ஒரு காரணம். 

பல்கலை கேம்பஸ், தங்குற இடம்னு... எங்கே போனாலும் மக்கள் அவ்வளவு அன்பா பழகுவாங்க. பேராசிரியர்களும் அவ்வளவு இணக்கமாகப் பழகுவாங்க. சொல்லப்போனா, விவேக் படத்துல வரும் காமெடி மாதிரி, நைட் ஒரு மணிக்கு போன் போட்டாக்கூட புரொஃபசருங்க போனை எடுப்பாங்க. அந்த அளவுக்கு மாணவர்களின் படிப்பு மேல கவனமாக இருப்பாங்க. நான் படிக்கிற கர்கீவ் பல்கலையில் டியூஷன் கட்டணத்தைத் தவிர வேறு எந்தக் கட்டணமும் கூடுதலா கிடையாது. ஆனால், வருஷத்துக்கு எப்படியும் அஞ்சு லட்சம் ரூபாய் வரை செலவாகிடும். உணவுக்காக மட்டுமே மாசம் 15 ஆயிரம் செலவு ஆகுது.

பல நாள்கள் ஒரு வேளை சாப்பாடு அல்லது இரு வேளை சாப்பாடுதான். வருஷத்துக்கு மூன்று வேளை சாப்பிட்ட நாள்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அங்கே குளிரும் -40 டிகிரி வரை இருக்கும். அதனால, சாப்பாடு மேல பெருசா இஷ்டமும் இருக்காது. குளிர்கூட சாப்பாடு விஷயத்துல நமக்கு உதவியா இருக்குதேனு நினைச்சுக்குவேன். அப்பா, அம்மா எவ்வளவோ கஷ்டப்பட்டு என்னைப் படிக்கவெக்கிறாங்க. இப்பெல்லாம் நிறைய பேர் அப்பாகிட்ட, `பாப்பா எப்படிப் படிக்குறா?'னு கேட்டுப் பணம் கொடுத்துட்டுப் போறாங்க. பலர் சேர்ந்து படிக்கவைக்குறாங்க. அவங்க எல்லாரும் பெருமைப்படுற மாதிரி ஒருநாள் விண்வெளியில் பறப்பேன்.

விண்வெளி வீராங்கனைக்கு படிக்கும் தேனி பெண்

வெளிநாட்டுப் பொண்ணுங்ககூட ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிக்க அவ்வளவு ஆர்வம்காட்ட மாட்றாங்க. ஆனா, அல்லிநகரத்துப் பொண்ணு நான் அதைப் படிக்கப் பல ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி வந்திருக்கேன். பூமியைத் தாண்டி போகணும்னு நினைக்கிற எனக்கு, இந்தத் தூரம் பெருசா தெரியலை. விண்வெளி வீரரோட பணிகள்ல ரெண்டு விஷயங்கள் முக்கியமானது. ஒண்ணு, ராக்கெட் ஓட்டுறது; இன்னொண்ணு விண்வெளியில் பறப்பது. ரெண்டில் ஒன்றில் நான் சாதிப்பேன்'' என நம்பிக்கையுடன் கூறுகிறார். 

மகளை விண்வெளி வீராங்கனையாகக் காணத் துடித்துக்கொண்டிருக்கும் தந்தை தாமோதரன் கூறுகையில், “பெருசா வருமானம் கிடையாது. ஆனாலும் ஒரே மகள்... ஆசைப்பட்டுவிட்டாள். அவ்வளவு தொலைவு அனுப்புறதுக்கே நாங்க யோசிச்சோம். அவளது லட்சியமோ பெருசா இருந்தது. அதைத் தடுக்க நான் விரும்பலை. எப்பாடுபட்டாவது படிக்கவெச்சுடுவோம்னு முடிவுபண்ணேன்.  ஏராளமானோர் உதவுறாங்க. சாலமன் பாப்பையா ஐயாகூட என் மகள் இந்தப் படிப்புப் படிக்கிறது தெரிஞ்சுக்கிட்டு என்னோட கஷ்டத்தையும் புரிஞ்சுகிட்டு `என்னால முடிஞ்ச உதவிய பண்றேன்யா'னு சொல்லிட்டுப் போனார். சொன்ன மாதிரி  ரெண்டு வருஷங்களா தலா 15 ஆயிரம் ரூபாய் அனுப்பிவெச்சுட்டார். ஊர் கூடி தேர் இழுக்கிற மாதிரி என் மகளை ஊரே சேர்ந்து படிக்கவைக்குது. அவள் நல்லபடியா படிச்சு முடிச்சுட்டா அதுவே போதும்யா'' என்கிறார்.

கொஞ்சம் கரம் கொடுத்தால் தேனித் தமிழச்சியும் ஒருநாள் விண்வெளியை ஆள்வாள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement