‘‘ஜெயலலிதா அமர்ந்திருந்த மேடையில் ரஜினியின் ஆவேசப் பேச்சு” - இவர் வழி... தனி வழியா.?! ரஜினியின் அரசியல் ரூட்! பகுதி-5

ரஜினியின் அரசியல் ரூட்

‘செவாலியே’ விருது விழாவில், ஜெயலலிதா பங்கேற்பதற்கு முன்பு திரைப்படத் துறைக்காக ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ‘திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டிக்கொள்ள 85 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக அளிக்கும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, ‘செவாலியே’ விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு இரண்டு நாள் முன்பு நடைபெற்றது. ‘செவாலியே’ விருது நிகழ்ச்சியில், பங்கேற்ற ரஜினி ஜெயலலிதாவை விமர்சித்ததோடு இந்த திட்டத்துக்காகப் பாராட்டவும் செய்திருந்தார். ‘‘திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டிக்கொள்ள 85 ஏக்கர் நிலத்தை இலவசமாக தமிழக அரசு அளித்திருக்கிறது. திரைப்படத் துறைக்கு ஏராளமான சலுகைகளை முதல்வர் வழங்கிவிட்டார். அதனால் திரைப்படத் துறையினர் இனியும் கோரிக்கைகளை வைத்து அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம்’’ என்றார். 

ரஜினிகாந்த் மற்றும் சிவாஜி

இந்த இரண்டு விழாக்கள் அடுத்தடுத்து நடைபெற்றன. அதற்கு முன்பு ரஜினி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அங்கிருந்து கிளம்பி வந்தார். 1995-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி திரையுலகத் தொழிலாளர்கள் குடியிருப்பு அடிக்கல் நாட்டும் விழா சென்னைப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. திட்டத்தைத் தொடங்கிவைக்க ஜெயலலிதா வந்திருந்தார். அவருக்கு முன்பாக, தன் மனைவியுடன் வந்தார் ரஜினி. அமைச்சர்கள் ரஜினியின் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அமைச்சர்கள் கே.ஏ.கே., ஆர்.எம்.வீரப்பன் மட்டும்தான் எதற்கும் கவலைப்படாமல் ரஜினியை நலம் விசாரித்தார்கள். முதல்வர் ஜெயலலிதா விழா மேடைக்கு வந்ததும் அருகே போய் கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு வந்தார் ரஜினி. ‘‘நல்லா இருக்கீங்களா..?” என ஜெயலலிதா கேட்டபோது இரண்டு கைகளைத் தூக்கி ஆகாயத்தைக் காட்டிச் சிரித்தார் ரஜினி.

அந்த விழாவில், ரஜினி மேடையில் அமரவில்லை. மேடைக்கு எதிரேதான் அமர்ந்திருந்தார். ஒரு கட்டத்தில், ரஜினியைப் பேச அழைத்தார்கள். பூங்கொத்தை ஜெயலலிதாவுக்கு அளித்துவிட்டு மைக் முன்பு வந்தார் ரஜினி. ‘‘மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அவர்களே...” எனப் பேச ஆரம்பித்தார். ‘செவாலியே’ விழாவுக்கு முந்தைய விழா என்பதால், ரஜினியின் பேச்சில் காரம் இல்லை. ஆனால், அர்த்தம் பொதிந்ததாக இருந்தது அவர் உரை. ‘‘இந்த நாள் நம்ம எல்லோருக்கும் சந்தோஷமான நாள். வேற யாரும் பண்ணாத நல்ல காரியத்தைப் பண்ணியிருக்கீங்க. உங்களை இந்த முதலமைச்சர் நாற்காலியில உட்கார வெச்சது பணக்காரங்க இல்லை கோடீஸ்வரங்க இல்லை... ஏழைகள்! அவங்களுக்கு நீங்க நல்லது பண்ணீங்கன்னா... உங்களுக்கு இருக்கிற எல்லாப் பட்டங்களையும்விட சிறந்தப் பட்டமாக ‘ஏழைகளின் தலைவி’ பட்டம் கிடைக்கும். ஏழைகளுக்கு வீடு, சாப்பாடு எல்லாம் கிடைக்கறதுக்கு ஏற்பாடு பண்ணணும். இந்த விழாவை ஏற்பாடு பண்ணியிருக்கறவங்களுக்குச் சொல்றேன். இந்த குடியிருப்புகளெல்லாம் யாருக்குப் போய்ச் சேரணுமோ அவங்களுக்குப் போய்ச் சேரணும். உண்மையான ஜனங்களுக்கு, இல்லாதவர்களுக்குக் கிடைக்கணும். ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரைக்கும்தான் ஏமாத்தறவங்க இருப்பாங்க... யாரும் ஏமாறக்கூடாது” என்றார்.

ஜெயலலிதா, சிவாஜி

இறுதியாகப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தன் பேச்சில், யாரையும் குறிப்பாக பெயர் சொல்லி அழைக்காமல், ‘முன்னணி நட்சத்திரங்களே’ என்றார். இந்த விழாவில், ஜெயலலிதாவைப் புகழ்ந்து தள்ளினார்கள் திரையுலகினர். ஆனால், இரண்டு நாள் கழித்து நடந்த ‘செவாலியே’ விழா அதற்கு நேரெதிர். ஜெயலலிதாவைப் பற்றிய புகழுரைகளும் குறைவுதான். ‘செவாலியே’ விருது பெறுவதற்கு முன்பு சிவாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்ததால், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். மருத்துவமனையில் இருந்து வந்த ஒரு வாரத்துக்குள் ‘செவாலியே’ விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய ரஜினி, ‘‘நாதங்களில் சிறந்தது ஓம் நாதம். மொழிகளில் சிறந்தது மெளன மொழி. மருந்துகளில் சிறந்தது பிரார்த்தனை. அந்த உன்னதமான கலைஞனின் இதயம் ஓய்வு எடுக்க நினைக்கிறது. அந்த இதயத்தைக் கேட்கிறேன். ஓ இதயமே நீ இருக்கிறது ஒரு மகத்தான கலைஞனின் உடலில். ஓய்வு தேவைதான். ஆனால், எங்கள் இதயங்கள் எல்லாம் ஓய்வு எடுத்தபின், நீ ஓய்வு எடுக்கலாம். அதுவரை இதயமே அமைதியாக இரு’’ என சிவாஜிக்காக உருகினார் ரஜினி.

‘இதயமே அமைதியாக இரு’ என சிவாஜிக்கு உருகிய ரஜினியின் இதயம், அமைதியாக இல்லை. ஜெயலலிதா ஆட்சியின் அடாவடிகளைக் கண்டு இன்னும் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. 3 மாதங்கள்கூட முடியவில்லை. அதற்குள் இன்னொரு மேடையில், ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்தார். அது ‘பாட்ஷா’ வெற்றி விழா. அந்த விழாவில் என்ன நடந்தது?   

-தொடரும்

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க க்ளிக் செய்யவும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!