சிபிஐ விசாரணை கோரிய மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி..!

எம்எல்ஏ-க்கள் பணம் வாங்கியதாக வெளியான வீடியோ விவகாரம் தொடர்பாக, சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு விசாரணை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடுத்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது. 


எடப்பாடி பழனிசாமி அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அவர் வெற்றிபெற்றார். இந்த வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எம்எல்ஏ-க்கள் பணம் வாங்கியதாக வீடியோ ஆதாரம் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக, சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு விசாரணை வேண்டும் என்று நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கின்மீது கூடுதலாகப் புதிய மனு ஒன்றை மு.க.ஸ்டாலின் தாக்கல்செய்தார்.

இதுதொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே, இந்த வழக்கு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டப்பேரவை செயலாளர் பூபதி ஆகியோர் பதில் மனு தாக்கல்செய்திருந்தனர். இந்த வழக்கில், வருவாய் புலனாய்வு அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கடத்தல் தங்கம் தொடர்பான வழக்குகளை மட்டுமே வருவாய் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்ய முடியும்' என்று கூறினார். இந்த விளக்கத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனுவைத் தள்ளுபடிசெய்தனர். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின், சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்தனர். வழக்கை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!