வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (29/06/2017)

கடைசி தொடர்பு:19:29 (29/06/2017)

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளே... டி.டி.வி.தினகரன் வெளியே... சென்னை நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடந்த களேபரம் #VikatanExclusive

சென்னையில் நடந்த தளவாய்சுந்தரத்தின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் வருவதையறிந்த டி.டி.வி.தினகரன், அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். இது, கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் தினகரன் 

தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியும் முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. அதில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு தளவாய்சுந்தரம் அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள், கட்சியினர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் பங்கேற்றார். முதல்வர், அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு வரும் தகவல் தெரிந்ததும் டி.டி.வி.தினகரன் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் தினகரன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர், "டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர், தளவாய் சுந்தரம். அவரது மகள் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிறகு, முன்வரிசையில் அமர்ந்திருந்தார் டி.டி.வி.தினகரன். இரவு 8.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வரும் தகவல் டி.டி.வி.தினகரனுக்கு தெரியவந்ததும் உடனடியாக அங்கிருந்து கிளம்பிச்சென்றுவிட்டார். அவருடைய ஆதரவாளர்களும் புறப்பட்டனர்.

அதன்பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் அங்கு வந்து மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றனர். ஏற்கெனவே, அ.தி.மு.க. நடத்திய இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றதால், அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தார் டி.டி.வி.தினகரன். தளவாய்சுந்தரத்தின் வீட்டு நிகழ்ச்சி என்பதாலேயே முதல்வர், அமைச்சர்கள் வருவதற்கு முன்பாகவே அங்கு வந்த டி.டி.வி.தினகரன், அவர்கள் வருவதற்கு முன்பே சென்றுவிட்டார்"என்றனர்.

திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் தினகரன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேசியவர்கள், "தளவாய் சுந்தரம் அழைத்ததன்பேரில் அங்கு சென்றோம். நாங்கள் வருவதற்குள் டி.டி.வி.தினகரன் சென்றதில் எந்தவித அரசியலும் இல்லை. ஆனால், இதைச் சிலர் அரசியலாக்கிவருகின்றனர்" என்றனர். 

முன் இருக்கையில் அமருங்க...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தளவாய் சுந்தரத்தின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்குச் செல்லும்போது, அமைச்சர் செங்கோட்டையனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதாவது, தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வரின் கான்வாய் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது பக்கத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அமர்ந்தார். அப்போது, அமைச்சர் செங்கோட்டையன் அங்கு வந்துள்ளார். அதைப் பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய காரின் முன் இருக்கையில் அமைச்சர் செங்கோட்டையனை அமருமாறு தெரிவித்தார். அதற்கு சிரித்துக்கொண்டே, அமைச்சர் செங்கோட்டையன் முன் இருக்கையில் அமராமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அருகில் அமர்ந்தார். அதன்பிறகே முதல்வரின் கார், தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்டது. 


டிரெண்டிங் @ விகடன்