Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''தூக்கில் தொங்கப்போகிறாரா?'' பால் கலப்பட விவகாரத்தில் வெடிக்கும் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வையாபுரிக்குளம் கழகத்தின் சார்பில் முழுமையாகத் தூர் வாரப்பட்டு இருப்பதை நேரில் பார்வையிட்டார். மேலும், குளத்தின் கரையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மரக்கன்றுகளை ஊன்றினார். மு.க.ஸ்டாலின் அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

ஸ்டாலின்

"குட்கா விற்பனை தொடர்பாக லஞ்சம் வாங்கியுள்ள அமைச்சர், காவல்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீங்கள் தெரிவித்தீர்கள். ஆனால், முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?"

"குட்கா போதைப் பொருள் விவகாரம் என்பது மனிதர்களைக் கொல்வதற்கு ஈடானது. அவற்றை விற்பனைசெய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், திருட்டுத்தனமாக மக்களிடம் அவற்றை விற்பனைசெய்வதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் காவல்துறையின் உயரதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பது, இப்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இதுபற்றி ஊடகங்களில் ஆதாரங்களோடு செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சட்டமன்றத்தில் இதுபற்றிப் பேச வேண்டும் என்று நாங்கள் கேட்டபோது, சபாநாயகர் அனுமதி தர மறுத்துவிட்டார்.

உள்ளபடியே அந்தப் பிரச்னையில் அவர்களுக்கு தொடர்பில்லை என்று சொல்வதென்றால், நியாயமாக எங்களைப் பேச அனுமதியளித்து, அதன் பிறகு, சம்பந்தப்பட்ட அமைச்சரோ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ தைரியமாக எழுந்து, உரிய விளக்கம் கொடுத்து, நாங்கள் சொன்னதை மறுத்திருக்க வேண்டும். ஆனால், அந்த சக்தி, திறமை, தைரியம் அ.தி.மு.க ஆட்சியாளர்களுக்கு இல்லாத காரணத்தால், சபாநாயகர் எங்களைப் பேச விடாமல் தடுத்தார். எனவே, நடந்த உண்மைகளை மக்களிடத்தில் சொல்ல வேண்டும் என்பதற்காக நாங்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம். அவையில் நடந்தவற்றை எல்லாம் பத்திரிகையாளர்களுக்குச் சொன்ன பிறகு, மீண்டும் அவைக்குத் திரும்பிச்சென்று, அவை நடவடிக்கைகளில் பங்கேற்றோம்.

இந்தப் பிரச்னை தொடர்பாக மீண்டும் நாங்கள் சட்டமன்றத்தில் பிரச்னை எழுப்புவோம். அதற்கு அவர்கள் நிச்சயம் அனுமதி தர மாட்டார்கள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, இதுகுறித்து அடுத்தகட்டமாக நீதிமன்றத்தில் முறையிட நாங்கள் முயற்சி செய்வோம்.''

''தி.மு.க சார்பில் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தூர் வாரப்படும் நிலையில், அ.தி.மு.க-வினர் இதுகுறித்து தவறான விமர்சனங்களை முன் வைக்கிறார்களே?''

''நாங்கள் எங்கள் கடமையை, மக்களுக்குத் தேவையான இந்தப் பணிகளை முறையாக ஆற்றி வருகிறோம். எனவே, அவர்கள் இதைப்பற்றி தவறாக விமர்சிப்பதுகுறித்து கவலைப்படவில்லை. நேற்றைய தினம் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அந்தத் துறை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்தத் துறைகுறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், தமிழகத்தில் உள்ள குளங்கள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூர் வாரப்படுவது பற்றி எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பேசிக்கொண்டிருந்தபோது, இடையில் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குறுக்கிட்டு எழுந்து, ”இதை நாங்கள்தான் முதன்முதலில் தொடங்கினோம். சமீபத்தில் மேட்டூர் அணையில் தூர் வாரும் பணியை நானே நேரில்சென்று தொடங்கிவைத்தேன். அதற்காக, 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்து பணிகள் நடைபெறுகின்றன.

அப்போது எங்களுடைய சட்டமன்ற துணைத்தலைவர் துரைமுருகன் அவர்கள், ”300 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகளைத் தொடங்கியதாக முதலமைச்சர் சொல்கிறார், அதிலும் 80% பணிகள் முடிவடைந்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார், எந்தெந்தப் பணிகள், எங்கெங்கு நடைபெறுகிறது என்பதை விளக்கமாகச் சொல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்குரிய பதிலை சொல்ல முடியாத நிலையில்தான் முதலமைச்சர் இருக்கிறார்.

ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகம் இந்தப் பணியில் முழுமையாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது என்று உணர்ந்த காரணத்தால், அதை மூடி மறைப்பதற்காகவும், பத்திரிகை விளம்பரங்களுக்காகவும்தான் அறிவித்து இருக்கிறார்களே தவிர, உள்ளபடியே அந்தப் பணிகள் எல்லாம் நடைபெறவில்லை என்பதுதான் உண்மையான நிலை.''

''பாலில் கலப்படம் செய்யப்படுகிறது என்று சொல்லும் அமைச்சர், தன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றும் சொல்கிறாரே?''

''முதலில், 'பாலில் கலப்படம் செய்வதை நிரூபிக்கவில்லை என்றால் நான் ராஜினாமா செய்வேன் என்றார். அதையும் தாண்டி, 'தூக்குக் கயிற்றில் தொங்குவேன், தற்கொலை செய்துகொள்வேன்' என்றெல்லாம் அமைச்சர் சொன்னார். ஆனால், இன்றைக்கு வருகின்ற செய்திகளை எல்லாம் பார்க்கும்போது, அவர் ராஜினாமா செய்யப்போகிறாரா, அவரே சொன்னபடி தூக்கில் தொங்கப்போகிறாரா, தற்கொலை செய்துகொள்ளப்போகிறாரா? என்று மக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

''பாலில் கலப்படம் நடப்பதாக இப்போது தெரிவிக்கும் அமைச்சர், கடந்த 5 ஆண்டுகாலமாக நடந்த அ.தி.மு.க ஆட்சியில் இதை ஏன் கண்டுகொள்ளாமல் இருந்தார்?''

''அப்போது, அவருக்கு வர வேண்டியதெல்லாம் முறையாக வந்து சேர்ந்திருக்கும். இப்போது அதெல்லாம் வராத காரணத்தால், இந்தப் பிரச்னையை ஒருவேளை கிளப்பியிருக்கலாம்.''

''குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் மீராகுமார் எப்போது சென்னை வருகிறார்?''

''ஜூலை 1 -ம் தேதியன்று மாலை வருவதாகச் சொல்லியிருக்கிறார்.''

''மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிராக இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?''

''எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி, பினாமி ஆட்சியாக மட்டுமல்ல, குதிரை பேரத்தால் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி. இந்த ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டால்தான், காப்பாற்றிக்கொண்டால்தான், ஏற்கெனவே அடித்துக் கொண்டிருக்கும் கொள்ளையைத் தொடர்ந்து செய்யமுடியும் என்ற நிலையில், அதற்கான முயற்சிகளில் மட்டும்தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ, கல்வியைப் பற்றியோ மாணவர்களைப் பற்றியோ இப்படி எதுபற்றியும் அவர்கள் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்பது வேதனைக்குரியது'' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close