Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"ஐ.பி.எஸ். வீடுகளில் கான்ஸ்டபிள்கள் ஏன்?" எம்.ஜி.ஆர். கேள்வியை முன்வைக்கும் போலீசார் !

'தமிழ்நாட்டின் மொத்தப் போலீஸாரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து மனுகொடுக்க வருகிறார்கள்' என்ற தகவல் பல இடங்களிலும் போய் முட்டிக்கொண்டு நிற்கிறது. ஜூலை 6-ஆம் தேதி காலை 10 மணிக்கு மனுவுடன் வரும் போலீஸாரைச் சந்திக்க முதல்வர் 'அப்பாய்ன்ட்மென்ட்' கொடுத்துவிட்டார் என உறுதிப்படுத்தப்படாத தகவலையும் யாரோ கொளுத்திப் போட்டுள்ளனர். இந்தியாவில் பல மாநிலங்களில் போலீஸாருக்கு சங்கம் இருக்கிறது. மேற்குவங்கம், திரிபுரா மற்றும் பக்கத்து மாநிலமான கேரளாவில் செயல்படும் சங்கங்களால் போலீஸார் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாகத் தகவல் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் போலீஸ் சங்கம் என்றவுடன் பதற்றம் பற்றிக்கொள்கிறது. 'போலீஸாரின் கோரிக்கைகள் இதுதான்' என்ற அடையாளத்துடன் சென்னை 'மவுண்ட்' அருகே ஒட்டப்பட்டிருந்த ஒரு  போஸ்டர்தான் இப்போது மலையளவு பெரிதாகி நிற்கிறது. இப்படி சர்ச்சைக்குரிய  போஸ்டரை ஒட்டியவர்களைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

கலவரப் பகுதியில் பணியாற்றும் போலீஸ்

'முதலமைச்சரைப் போலீஸார் சந்திப்பது பிரச்னையா? போலீஸாருக்கான சங்கம் வைப்பதுதான் பிரச்னையா?' போலீஸாரின் நலனில் தீவிரமாக இருக்கும் சிலரிடம் பேசினோம்.  நம்மிடம் பேசிய அவர்கள், "இந்தியாவிலேயே போலீஸ் கிரிவென்ஸ் முகாம் (துயர்துடைப்பு) நடத்துவது தமிழ்நாட்டில் மட்டும்தான். குறிப்பிட்ட பணிநேரம், வார விடுமுறை, மருத்துவ விடுப்பு போன்ற கோரிக்கைகளை மற்ற மாநிலங்களில் முதல்வர் அலுவலகத்துக்கே நேரடியாகப் புகார் மனு போல அனுப்பலாம். ஆட்சியில் இருப்பவர்கள், காவல்துறையினரின் கோரிக்கைகளுக்கானத் தீர்வை சட்டசபையில் அறிவிப்பார்கள். அல்லது தனி அறிக்கையாக வெளியிட்டு பதில் சொல்வார்கள். தமிழ்நாட்டில் மட்டும் அதுபோன்று முதல்வர் அலுவலகத்திதற்கு போலீஸார் நேரடியாக அனுப்ப முடியாது. அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான், 'போலீஸ் கிரிவென்ஸ் முகாம்' நடத்தி, அந்த முகாமில் அதிகாரிகளே அவர்கள் வசதிக்கு உட்பட்டு தீர்வு அளிப்பதாக சொல்கிறார்கள். போலீஸ் கிரிவென்ஸ் முகாம் மூலம் போலீஸாருக்குத் தீர்வு கிடைப்பதைவிட, அந்த 'கிரிவென்ஸ்' பக்கம் அவர்கள் போகாமலே இருந்துவிடலாம். இதுவரையில் மெடிக்கல், குடியிருப்பு மாற்றம், நீண்டதூர பணியிட மாற்றம் என்கிற அடிப்படை கோரிக்கைகளே இங்கு தீர்வு காணப்படாமல்தான் இருக்கிறது.

முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வரும் (சி.எம் செல்) துயர்துடைப்புப் புகார்களை அங்கிருக்கும் போலீஸாரை வைத்தே வடிகட்டி விடும் வேலையும் கடந்த சில நாள்களாக நடக்கிறது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. போலீசார் தங்கள் குறைகளைத் தெரிவிக்க மாநில முதல்வரை நேரில் சந்திக்காமல், போலீஸ் டி.ஜி.பி.யை சந்திப்பதால் தீர்வு கிடைத்து விடுமா என்ன? போலீஸாரைச் சந்திக்க டி.ஜி.பி-தான் முதலில் முன்வருவாரா? யாராவது ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியை 'அப்சர்வராக' நியமித்து அவர் மூலம்தான் போலீசாரின் மனுக்களை டி.ஜி.பி. வாங்குவார்.ஐ.பி.எஸ் அதிகாரிகளான காவல் உயரதிகாரிகளின் வீடுகளில், அவர்களுக்கு  மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினருக்கும் சேர்த்து சலாம் போட்டு போலீஸார் சேவை செய்ய வேண்டும் என்பது காலங்காலமாக உள்ள எழுதப்படாத விதி. 'போலீஸாருக்குச் சங்கம்' என ஒன்று வந்துவிட்டால். இதுபோன்ற சலாம் போடும் 'ஆர்டர்லி' முறை அடியோடு காலியாகி விடும். 'யாரும் யாருக்கும் அடிமையல்ல; போலீஸார்  'ஆர்டர்லி' பணியைச் செய்யக் கூடாது' என்று 1977-ம் ஆண்டிலேயே அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார். எனினும் ஆர்டர்லி முறையை ரத்துசெய்துவிட்டதாகக் கூறிக்கொண்டு, இன்னமும் காப்பாற்றிக் கொண்டுள்ளனர் போலீஸ் உயர் அதிகாரிகள். ஆர்டர்லி ஒழிப்பு போன்றவை பற்றியெல்லாம் சாதாரண காவலர்களும், ஐ.பி.எஸ். ரேங்கில் உள்ள அதிகாரிகளும் ஒன்றாக உட்கார்ந்து பேச முடியுமா? குறைந்த பட்சம் ஆயிரம் போலீசார் தங்கி ஓய்வெடுக்கும் இடத்திலுள்ள எங்களுக்கான கழிப்பறை வசதி குறித்தாவது உயரதிகாரிகள் அறிவார்களா ? " என்றனர் சற்று விரிவாகவே...

இந்நிலையில்தான், "சுயநல ஆணவ அதிகார வர்க்கமே இனி கட்டுப்பாட்டைப் பற்றியும் கண்ணியத்தைப் பற்றியும் பேச உமக்கு தகுதியில்லை. ஜூலை 6-ம் தேதி நாங்கள் ஒன்று கூடுகிறோம். மண்டியிடாத மானம். வீழ்ந்து விடாத வீரம். முடிந்தால் தடுத்துக் கொள்ளவும். சில அதிகாரிகளைப் பற்றிய விவரங்கள், அவர்கள் பெற்ற லஞ்சங்கள், சோ்த்த பினாமி சொத்துகளைப் புள்ளி விவரத்துடன் தயார் செய்து வருகிறோம். விரைவில் பம்பா் பரிசாக அறிவிக்கப்படும். நீங்களா, நாங்களா என்று பார்க்கும் காலம் வந்து விட்டது" என்ற ரீதியில் ஐந்து பக்கத்துக்கு முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் செய்தியைப் பரவ விட்டுள்ளனர்.  

பான்பராக் முதலாளிகளிடம் ஐ.பி.எஸ். அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு தொடங்கி, ஜல்லிக்கட்டில் தமிழர்களைப் பிரித்தாண்ட அதிகாரிகளே என்பது வரையில் செய்தி போகிறது. இவற்றை பரப்பியது போலீசார் அல்ல, சமூக விரோத சக்திகளே என்று போலீஸ் உயரதிகாரிகள் சாதாரணமாகக் கடந்து செல்லலாம்... அதற்கான அதிகாரமும், உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது... அதேபோல் அதை  சொல்ல வேண்டிய கடமை நமக்கும் இருக்கிறது ! ஜூலை 6-ஆம் தேதி என்ன நடக்கவிருக்கிறதோ தெரியாது... ஆனால் போலீஸாரின் உள்ளங்களில் பல்வேறு பிரச்னைகளில் 'ஆறாதவடு' இருப்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement