ஒரு பள்ளி... ஒரே மாணவி... இரண்டு ஆசிரியர்கள்... அரசுப் பள்ளி விநோதம்! | An unique school that has two teachers for its only student!

வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (29/06/2017)

கடைசி தொடர்பு:16:47 (29/06/2017)

ஒரு பள்ளி... ஒரே மாணவி... இரண்டு ஆசிரியர்கள்... அரசுப் பள்ளி விநோதம்!

ஒரு பள்ளி ஒரு மாணவி

ல அரசுப் பள்ளிகள் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் தவிக்கும் நிலையில், ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் ஒரே ஒரு மாணவிக்காக, இரண்டு ஆசிரியர்கள் பணிபுரியும் விநோதம் இதே தமிழகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே இருக்கும் ஊர், வடகரை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக மஞ்சள் ஆற்றங்கரை ஓரத்தில் முட்புதர்காட்டுக்கு நடுவே அமைந்திருக்கிறது, அந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. அங்கே இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, மகாஸ்ரீ. நாம் சென்றபோது, பள்ளியின் தலைமை ஆசிரியை மகாலெட்சுமி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மற்றொரு ஆசிரியரான அன்பரசன் மருத்துவ விடுப்பில் இருக்கிறாராம். தலைமை ஆசிரியை, தனது பாதுகாப்புக்காகத் தன் மகனை அழைத்துவந்திருக்கிறார். மகன் வராத நேரத்தில், பகுதி நேர ஆசிரியை ஒருவரைத் துணைக்கு வைத்துக்கொள்வாராம். 

மாணவி

மாணவியான மகாஸ்ரீ, “எங்க ஊர் வாடகுடி. என் அப்பா ரவிச்சந்திரன், செத்துட்டாங்க, அம்மா பேரு மகாலெட்சுமி. என் அக்காவும் இங்கேதான் படிச்சாங்க. அவுங்க அஞ்சாங் கிளாஸ் பாஸ் பண்ணிட்டதால வேற பள்ளிக்கூடம் போயிட்டாங்க. இங்கே என்னோடு விளையாட யாருமே இல்ல” என்றாள் சோகமாக. 

சத்துணவு

“இந்த ஒரு புள்ளைக்காக சமைக்க வேண்டாம்னு பக்கத்துல இருக்கிற அரங்கங்குடி பள்ளிக்கூடத்திலிருந்து தினமும் சத்துணவைக் கொண்டுவந்து கொடுப்பேன். கலகலன்னு நிறைய புள்ளைகளோடு இருந்த இந்தப் பள்ளிக்கூடம் வெறிச்சோடி போச்சேன்னு வருத்தமா இருக்கு” என்கிறார், சமையல் உதவியாளர் சாவித்திரி. 

இந்தப் பள்ளிக்கு ஏன் இப்படி ஒரு நிலை வந்தது? மாணவர்கள் என்ன ஆனார்கள் என அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூகச் சேவகரான ஹஜாநஜிமுதீனிடம் கேட்டோம். 

ஹாஜா

“சுதந்திரத்துக்கு முன்பு திண்ணைப் பள்ளியாக இருந்த இடம் இது. 1949-ம் ஆண்டு குருகுல பள்ளியாகவும் 1962-ம் ஆண்டு முதல் அரசு தொடக்கப் பள்ளியாகவும் மாறிச்சு. இப்போ, ஊருக்குள்ளே தனியார் நர்சரி பள்ளியில் ஆரம்பிச்சு, இஸ்லாமியர் நடத்தும் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வரை வந்துடுச்சு. இங்கே முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கிறதால், அவங்க குழந்தைங்க அங்கேயே படிக்கிறாங்க. இங்கே பக்கத்துல இருக்கிற அரங்கங்குடியில் தொடக்கப்பள்ளியோடு அரசு உயர்நிலைப் பள்ளியும் இருக்கு. அங்கே ஆங்கில வழி கல்வி, கம்ப்யூட்டர் கிளாஸ் எல்லாம் இருக்கிறதால ஜனங்க பிள்ளைங்களைச் சேர்க்க அங்கேதான் போறாங்க. இந்த ஸ்கூல் இருக்கிற இடமும் புதர் மண்டிக் கிடக்கு. அதனால், இந்த ஸ்கூலில் யாரையும் சேர்க்கறதில்லை. ஒரே ஒரு மாணவிக்காக இரண்டு ஆசிரியர்கள் வேலை செய்யறாங்க. அவங்களுக்கு கவர்மென்ட் சம்பளம். அந்த மாணவியை அரங்கங்குடி பள்ளியில் சேர்த்துவிட்டு, ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் பள்ளிக்கு இந்த ஆசிரியர்களை மாத்தினால், அரசுக்கும் நல்லது; அங்கே படிக்கவரும் குழந்தைகளுக்கும் உபயோகமா இருக்கும். செய்வாங்களா?'' என்கிறார் ஆதங்கத்துடன். 

ஃபவுஜி

கிராமப் பிரமுகரான பவுஜி, “இந்த ஸ்கூலுக்கு புலிகண்டமுத்தூர், மில்லாத்தூர் ஆகிய ஊர்களிலிருந்துதான் பிள்ளைங்க வந்துட்டிருந்தாங்க. ஆனால், ஒரு கிலோமீட்டருக்கும் மேலே நடந்து இங்கே வர்றது சிரமமா இருக்கு. அதனால், எங்க ஜமாத் சார்பில் பேசி, புலிகண்டமுத்தூரிலேயே பள்ளிக்கூடம் கட்டிக்கொடுக்க ரெடியா இருக்கோம். இது விஷயமா பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் அவர்களிடமும் மனு கொடுத்திருக்கோம்'' என்றார். 

ஒரு பள்ளி

பெயர்குறிப்பிட விரும்பாத பிரமுகர் ஒருவர், “இந்தப் பள்ளியைச் சுற்றி விஷ ஜந்துகள் அதிகம் இருக்கு. பள்ளி நேரம் போக மத்த நேரங்களில் சமூக விரோதிங்க குடிக்கிற பார் மாதிரி பள்ளியை உபயோகப்படுத்துறாங்க. அதைவிடக் கொடுமை, அந்த ஸ்கூல் ஆசிரியரே வேலை நேரத்திலேயே குடிச்சுட்டு பள்ளிக்கு வர்றார். அவருக்கும், தலைமை ஆசிரியைக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். அதனால், தனது பாதுகாப்புக்கு ஒருத்தரைக் கூடவே வெச்சுட்டிருக்கிற அளவுக்கு இருக்கு நிலைமை. இந்த லட்சணத்துல எந்த பெத்தவங்கதான் அவங்க குழந்தையைக் கொண்டுபோய் சேர்ப்பாங்க. இது இங்கே மட்டுமில்லீங்க; தேவனூர், அப்பராசன்புத்தூர் என சுற்றுவட்டாரத்தில் இன்னும் ஆஷா சில பள்ளிகளில் நான்கு, ஐந்து மாணவர்களுக்காகப் பள்ளிக்கூடம் நடக்குது. அங்கேயெல்லாம் ரெண்டு ரெண்டு ஆசிரியர்கள் இருக்காங்க. அரசுப் பணம்தான் விரயமாகுது. கவர்மென்ட் இதையெல்லாம் ஆய்வுசெஞ்சு சரிசெய்யணும்” என்றார். 

இந்தப் பள்ளியின் நிலைகுறித்து நாகை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆஷா கிறிஸ்டி எமரால்டு கவனத்துக்குக் கொண்டுசென்றோம். “பள்ளியை மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுமாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை எப்படி அதிகப்படுத்தலாம்னுதான் பார்க்கணும். தேவனூர், அப்பராசன்புத்தூர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்துட்டு இருக்காங்க” என்றவர், உடனடியாகச் செயலில் இறங்கினார். தனக்குக் கீழே உள்ள அலுவலர்களை அழைத்துக்கொண்டு வடகரைக்குக் கிளம்பியவர், வீடு வீடாகச் சென்று அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்தினார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரிடம் பேசியபோது, “நான் தற்போதுதான் வந்திருக்கிறேன். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்து பேசிவிட்டு விரைந்து முடிவு எடுக்கிறேன்” என்றார்.  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘இந்த ஆண்டு புதிதாக 30 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். அதற்கு முன்பு, இருக்கும் பள்ளிகளைச் சீரமைத்து, போதிய மாணவர்களைச் சேர்ப்பதில் கவனம் செலுத்தினால் நல்லது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்