முக்கிய கோப்புகளுடன் டெல்லிக்குப் பறந்த தமிழக தலைமைச் செயலாளர்! என்ன பின்னணி? | This Is Why TN chief secretary went to Delhi

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (29/06/2017)

கடைசி தொடர்பு:18:05 (29/06/2017)

முக்கிய கோப்புகளுடன் டெல்லிக்குப் பறந்த தமிழக தலைமைச் செயலாளர்! என்ன பின்னணி?

                                             போலீஸ் டி.ஜி.பி.கள் டி.கே.ராஜேந்திரன், எஸ்.ஜார்ஜ்

மிழகத்தின் அடுத்த போலீஸ் டி.ஜி.பி யார் என்ற கேள்விக்கு விரைந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இந்த நிமிடக் கணக்குப்படி, பொறுப்பு டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரன் பணி ஓய்வுக்கு மிச்சமிருப்பது 48 மணிநேரம் மட்டுமே. தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி யார் என்ற கேள்விக்கே இதுவரையில் விடை கிடைக்காத நிலையில், டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் என்று பலர்மீது எதிர்க் கட்சியினர் 'லஞ்சப் புகார்' சொல்ல ஆரம்பித்துள்ளனர்.தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவரும், தி.மு.க-வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின்தான், அப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்திருப்பவர். அவரைத் தொடர்ந்து காங்கிரஸும் இதே குற்றச்சாட்டை முன்வைத்து சட்டசபையைவிட்டு வெளிநடப்புவரையில் அழுத்தம் கொடுத்துள்ளது. சட்டசபையில் ஸ்டாலின் பேசமுற்பட்ட 'பான்குட்கா' விவகாரம், அவையில் விவாதிக்கச் சபாநாயகரால் மறுக்கப்பட... சட்டசபைக்கு வெளியே வந்த ஸ்டாலின், "பான்குட்கா விவகாரத்தில் உதவி கமிஷனர்முதல், போலீஸ் கமிஷனர், டி.ஜி.பி வரை கோடிக்கணக்கில் 'மாமூல்' பெற்றனர்" என்று மீடியாக்களில் வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பேட்டியளித்தார். பான்குட்கா விவகாரத்தில், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் அவருடைய மகனுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் கடந்த ஆறுமாதங்களாகவே தொடர்ந்து ஸ்டாலின் பேசிவந்திருக்கிறார். சட்டசபையில்வைத்து இதை விவாதிக்க வாய்ப்புத் தரப்படவில்லை என்ற நிலையில், "விவகாரத்தைக் கோர்ட்டுக்குக் கொண்டுபோவேன், அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனைக்குத் துணைபோகும் சுகாதாரத் துறை மந்திரி விஜயபாஸ்கர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்" என்கிறார் ஸ்டாலின்.

                          ஐ.பி.எஸ்.கள், மந்திரிகள் மீது நடவடிக்கை கோரும் ஸ்டாலின்

இப்படிப்பட்ட அசாதாரணச் சூழ்நிலையில்தான் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன், இன்று காலை 8 மணியளவில் டெல்லிக்குச் சென்றிருக்கிறார். ''தமிழக எதிர்க் கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் கொளுத்திப்போட்ட, 'பான்குட்காவில் லஞ்சம் வாங்கிய கமிஷனர், டி.ஜி.பி., ஐ.ஏ.எஸ்' என்ற குற்றச்சாட்டு, ஐ.பி.எஸ் பேனல் ஆய்வுக் கூட்டத்தில் முக்கிய விவாதப் பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும்' என்கிறது கோட்டை வட்டாரங்கள். தமிழகச் சட்டம் - ஒழுங்கு புது டி.ஜி.பி., குறித்த தகவலுடன் இன்றே தலைமைச் செயலாளர் தமிழகம் திரும்புகிறார். பொறுப்பு டி.ஜி.பி-யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன், அடுத்த டி.ஜி.பி-யின் பெயர் அறிவிக்கப்படும்வரை மேலும் மூன்று மாதங்களுக்குப் பணியில் தொடரலாம் அல்லது அவரையே நிரந்தர டி.ஜி.பி-யாக்கி மேலும், இரண்டாண்டுகளுக்குப் பணியில் தொடரவைக்கலாம். இந்த முறை பின்பற்றப்பட்டால், டி.கே.ராஜேந்திரனின் சீனியாரிட்டியுடன் காத்திருக்கும் ஜார்ஜ் உள்ளிட்ட நான்கு ஐ.பி.எஸ்-கள் இதன்பின் டி.ஜி.பி ஆக முடியாது. அவர்களைவிட முதன்மை சீனியர்களான கே.பி.மகேந்திரன், அர்ச்சனா ராமசுந்தரம் ஆகியோர் டி.ஜி.பி ஆக முடியாது. அனைத்துக்கும் மேலாக, "டி.ஜி.பி நியமனத்தில் அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது" என்று முந்தைய டி.ஜி.பி ஆர்.நட்ராஜ் தொடர்ந்த வழக்கில் கோர்ட் சொன்ன பதிலையும் இங்கே பார்க்க வேண்டும்.பொறுப்பு டி.ஜி.பி மற்றும் உளவுத் துறையின் டி.ஜி.பி ஆகிய பொறுப்புகளை ஒரே தோளில் சுமந்துகொண்டிருக்கிறார் டி.கே.ராஜேந்திரன். அர்ச்சனா ராமசுந்தரம் உள்பட ஐந்து பேர் டி.ஜி.பி தகுதி அடிப்படையில் இருந்தும் 'காபந்து' முதல்வர் நியமனம்போல, நாட்டின் டி.ஜி.பி பொறுப்புக்கும் 'பொறுப்பு' டி.ஜி.பி என்ற நியமனத்தில் தமிழக அரசு காலத்தை ஓட்டிவிட்டது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா செப்டம்பர் 2016-ல் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்றுவரையில் பொறுப்பு டி.ஜி.பி-யாகவே இருந்துவருகிறார், டி.கே.ராஜேந்திரன். டி.ஜி.பி-யாகப் பணியாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், பணி ஓய்வு பெறுவதற்கு முன்னதாகப் 'பணி நீட்டிப்பு' பெற்றுவிட்டால், அவர் இரண்டாண்டுகள் வரையில் டி.ஜி.பி-யாகப் பதவியில் தொடரமுடியும். அப்படி நடந்தால், சீனியாரிட்டி அடிப்படையில்... வரிசையில் காத்திருக்கும் ஐ.பி.எஸ்-கள், டி.ஜி.பி ஆகாமலே பணி ஓய்வுபெற்று வீட்டுக்குப் போய்விடுவார்கள். இன்னொரு வழிமுறையும் சில நேரங்களில் கையாளப்பட்டு வருகிறது. அதாவது, புது போலீஸ் டி.ஜி.பி-யைத் தேர்வுசெய்ய கால அவகாசம் தேவை. ஆகவே, மூன்றுமாத காலத்துக்கு இவரே டி.ஜி.பி-யாகப் பணியில் தொடர்வார் என்பதுதான் அந்த முறை. டி.கே.ராஜேந்திரன் விவகாரத்தில் மூன்றுமாத டி.ஜி.பி அல்லது பணி நீட்டிப்பில் இரண்டாண்டு டி.ஜி.பி ஆகிய இரண்டில் ஒன்றுதான் கையாளப்படும். இப்போதுள்ள சூழலில், டி.ஜி.பி யார் என்கிற 'பேனல்' அனுப்பப்படாமல் புது டி.ஜி.பி-யை அவசரமாகத் தேர்வு செய்யவும் வழி இல்லை.ஜெயலலிதா, கருணாநிதி என்று இரண்டு முதல்வர்களுமே அவரவர் விருப்பத்தின்பால் 'அரசின் கொள்கை முடிவு' என்ற அஸ்திரத்தைப் பயன்படுத்தி பணி ஓய்வுபெறவிருந்த காலகட்டத்தில் பலருக்குப் பணி நீட்டிப்புக் கொடுத்தனர். அதன் விளைவாக சேகர், நரேந்திரபால் சிங், முத்துக்கருப்பன் என்று பத்துக்கும் மேற்பட்ட சீனியர் ஐ.பி.எஸ்-கள் டி.ஜி.பி நாற்காலியைத் தொட்டுப் பார்க்காமலேயே பணி ஓய்வுபெற்றார்கள். திரிபாதி, காந்திராஜன், ஜாங்கிட் போன்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பதவி உயர்வில் தமிழக அரசு 'பருவத்தே பயிர்' செய்யாததால், ஓராண்டுக்கு முன்னரே டி.ஜி.பி ஆக வேண்டிய இவர்கள் கூடுதல் டி.ஜி.பி-யாகவே இன்னமும் பல்வேறு பிரிவுகளில் சர்வீஸில் இருக்கிறார்கள். பான்பராக் விவகாரத்தில் ஏற்பட்ட தலைசுற்றலைவிட, மாநில போலீஸ் டி.ஜி.பி பணி நியமன விவகாரத்தில் தலைசுற்றல் அதிகமாகவே இருக்கிறது!


டிரெண்டிங் @ விகடன்