ராமதாஸின் புதுப் புத்தகம்... அ.தி.மு.க. விலிருந்து ஆட்களை இழுக்கவா...?

ராமதாஸ் கழகத்தின் கதை

திமுகவில் என்ன நடக்கிறது என அந்தக் கட்சியினருக்கே தெளிவாகத் தெரியாதநிலையில், அதிமுகவின் வரலாற்றை பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். வரும் 3ஆம் தேதி பெரம்பலூரில் அந்தப் புத்தகம் வெளியிடப்படுகிறது.

ஆண்ட கட்சியோ ஆளும் கட்சியோ புத்தகங்கள், சிறுநூல்கள் வெளியிடுவதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு மாறாக வளரும் கட்சிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறுநூல், அறிவிப்புகள் என அவ்வப்போது அரசியல் களத்தில் எதையாவது செய்துவருகின்றன. இதில் ஆண்டுதோறும் நிழல் நிதிநிலை அறிக்கை - வேளாண் நிதிநிலை அறிக்கையை வெளியிடுவதில் பாமகவுக்கு என ஒரு பெயர் உள்ளது. இவை அனைத்தும் பாமகவின் பெயரிலேயே வெளியிடப்பட்டுவருகின்றன. இவை தவிர்த்து, புதிய அரசியல் பதிப்பகம் என்ற பெயரிலும் புத்தகங்களை வெளியிட்டுவருகிறார்கள். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரசாரத்துக்காக முன்பு மத்திய அமைச்சராக அன்புமணி இருந்தபோது செய்த பல பணிகளைப் பற்றி சாதனை நாயகன் என ஒரு படப்புத்தகம் வெளியிடப்பட்டது. முன்னதாக, தருமபுரி திவ்யா- இளவரசன் ஆகியோரின் சாதிமறுப்புக் காதல் திருமணமானது சிக்கலுக்கு உள்ளாகி, ரயில்பாதையில் இளவரசன் மரணம் அடைந்துகிடந்தது பெரும் பிரச்னை ஆனது. அதில் கம்யூனிஸ்ட் கட்சிகள், தலித் அமைப்புகள் ஆகியன ஒருதரப்பாகவும் பாமக இன்னொரு தரப்பாகவும் நின்றன. பாமக மீது பல்வேறு அமைப்புகளும் பலத்த விமர்சனத்தை வைத்தன. திமுக சார்பில் உண்மையறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டு, கட்சித் தலைமைக்கு அறிக்கை கொடுத்ததெல்லாம் நடந்தது. பல்வேறு கட்சிகளின் கேள்விகளுக்குப் பதில்கூற வேண்டிய நிலைக்குப் பாமகவினர் தள்ளப்பட்டார்கள். அதையொட்டி, கடந்த ஜனவரியில், பாமகவின் பதிலாக, புதிய அரசியல் பதிப்பகம் மூலம், ‘தருமபுரி: மறைக்கப்பட்ட உண்மைகள்’ எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. 

கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி, ராமதாசின் அறிக்கைகள் தொகுக்கப்பட்டு, மக்களைக் காக்க மதுவிலக்கு, நதிநீர்ப் பிரச்னைக்கு நான் விரும்பும் தீர்வு, தமிழும் சமூகநீதியும், தமிழீழமே தீர்வு, எழுக தமிழ்நாடே ஆகிய தலைப்புகளில் தனித்தனி நூல்கள் வெளியிடப்பட்டன. இவையும் புதிய அரசியல் பதிப்பகம் எனும் பெயரிலேயே வெளியாகின. 

கடந்த பிப்ரவரியில் முதலமைச்சர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகி, 7ஆம் தேதி ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்ததை அடுத்து, 15ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார்; அக்கட்சியில் கோஷ்டிப்பூசலும் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளுமாக உட்கட்சி மோதல் தொடர்ந்துவருகிறது. பிப்ரவரி 18 முதல் ஏப்ரல் 27 வரை, ராமதாஸின் முகநூல் பக்கத்தில், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களைப் பற்றி 64 நாள்கள் கட்டுரைகள் வெளியாகின. அந்தக் கட்டுரைகளே தொகுக்கப்பட்டு, இப்போது ’கழகத்தின் கதை- அதிமுக: தொடக்கம் முதல் இன்றுவரை’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியாகிறது. 

அதிமுகவின் வரலாறு எனக் கூறப்பட்டாலும், திமுகவின் வரலாற்றுச் சம்பவங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. திமுக தலைவர் கருணாநிதியைப் புத்தகம் நெடுகிலும் கலைஞர் என்றே ராமதாஸ் குறிப்பிடுகிறார். கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் இடையிலான நட்பு, எம்ஜிஆர் கணக்குக் கேட்டது, மதியழகன் கார் மீது செருப்பு வீசப்பட்டது, எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கும் ஒரிசா தலைவர் பிஜூபட்நாயக சமாதானம் செய்துவைக்க முயன்றது, திமுகவின் மீது 28 ஊழல் குற்றச்சாட்டுகள், சர்க்காரியா கமிஷன், 80-களில் வடமாவட்ட சாலைத்தடுப்புப் போராட்டம், பொருளாதார இட ஒதுக்கீடு, வன்னியர் எம்ஜிஆருக்கு அந்நியர், நால்வர் அணியும் உதிர்ந்த ரோமங்களும், ஜெயலலிதாவின் முதல் ஆட்சி, ஊழலுக்காக நீதிமன்றத்தால் முதல்முறையாகத் தண்டனை விதிக்கப்பட்டது, பொடா கைதுகள், 2005-ல் மழை நிவாரணம் வழங்கியபோது சென்னையில் 48 பேர் இறந்தது, தொடர்ந்த திமுக, அதிமுக ஆட்சிகள் என நீளும் இந்தப் புத்தகத்தில், சசிகலா கைது, இரண்டு அணிகள் இணைப்பு சாத்தியமில்லை என்பதுவரை விவரிக்கப்பட்டுள்ளது. 

சுருக்கமாகப் பார்த்தால், பாமக கட்சிக்காரர் ஒருவர் அதிமுகவை எப்படிப் பார்க்கவேண்டும் என்பதாகவே இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 

ஜெயலலிதாவின் மறைவால் அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்புகள் நீடித்துவருகையில், திமுகவை விரும்பாத - தங்கள் சார்புத் தொண்டர்களைத் தன்பக்கம் இழுப்பதில் பாமக இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்தப் புத்தகமும் உருவாக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் மாறிவரும் அதிமுக உட்கட்சி நிலவரத்தில், இந்தப் புத்தகமானது பாமகவின் நோக்கத்தை நிறைவேற்றுமா என்பதற்கு காலம்தான் பதில்சொல்ல முடியும்.  

 

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!