Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மணல் கொள்ளைக்கு எதிராக கரம் கோத்த விவசாயிகள்!

மணல் கொள்ளை எதிர்த்து போராட்டம்

காவிரி ஆற்றில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கியதைக் கண்டித்து, அங்குள்ள விவசாயிகள் கடும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ''எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் போராட்டம் தொடரும்'' என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

''நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர் கிராமம் காவிரி ஆறு ச.எண் 643/1-ல், அரசு மணல் குவாரி செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களாக மணல் எடுப்பதற்கு கனரக இயந்திரங்கள் மூலம் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரசு மணல் குவாரிக்கு அனுமதி வழங்கியுள்ள இடத்துக்கு அருகிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் ஒருவந்தூர் நீரேற்றுப் பாசனக் கூட்டுறவுச் சங்கம், நவலடியான் சிறு விவசாயிகள் நீரேற்றுப் பாசனச் சங்கம், சூரம்பட்டி, முருங்கை, குஞ்சாயூர் ஸ்ரீராமசமுத்திரம் சிறு விவசாயிகள் நீரேற்றுப் பாசனச் சங்கம் ஆகிய பாசனச் சங்கத்தினர் காவிரி ஆற்றிலிருந்து நீர் எடுத்தும் அதன் கரையோரங்களில் கிணறு அமைத்து, ஊற்று நீர் எடுத்தும் விவசாயம் செய்துவருகிறார்கள். நீரேற்றுப் பாசனச் சங்கங்கள் மூலம் 7,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனம் பெற்றுவருகின்றன. மேலும், ஒருவந்தூர் கிராமம் ச.எண் 643/1 அருகே, 2007-ம் ஆண்டுமுதல் 40 கோடி ரூபாய் செலவில் பட்டினம் – சீராப்பள்ளி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 2 பேரூராட்சிகள், 52 ஊராட்சிகளுக்குட்பட்ட 312 கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன. மேலும், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரைச் சேர்ந்த 5,000 ஏக்கர் ஆயக்கட்டு விவசாய நிலங்களும் 10,000 ஏக்கருக்கும் மேற்பட்ட இதர விவசாய நிலங்களும் காவிரி ஆற்றின் நீரை நம்பித்தான் விவசாயம் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் கடுமையான வறட்சி ஏற்பட்டு, காவிரி ஆற்றில் விவசாயத்துக்கும் குடிப்பதற்கும்கூடத் தண்ணீர் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசு, மணல் குவாரிக்கு அனுமதி அளித்துள்ள ச.எண் 643/1-க்கு அருகே உள்ள ஆழ்துளைக் கிணற்றிலிருந்துதான் ஒருவந்தூர் கிராமத்துக்குக் குடிதண்ணீர் எடுத்துப் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், காட்டுப்புத்தூர் வாய்க்காலுக்குக் காவிரி ஆற்றில் சுமார் 1,600 மீட்டர் நீளத்துக்குத் தற்காலிகமாக மணலைக்கொண்டு கொரம்பு வாய்க்கால் அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கொரம்பு வாய்க்கால் மணலால் கரையமைத்து உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து மழைக்காலத்தில் அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடும்போது அடிக்கடி கரை உடைந்து காட்டுப்புத்தூர் வாய்க்காலின் பாசனம் தடைபடுகிறது. ஆக, காட்டுப்புத்தூர் வாய்க்காலுக்கு நிரந்தர கொரம்பு அமைக்க வேண்டி பலமுறை பொதுப்பணித் துறை அதிகாரிக்கு மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்கின்றனர் விவசாயிகள்.  

மணல் கொள்ளை எதிர்த்து போராட்டம்

''கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், மோகனூர் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைப்பதற்கு மோகனூர் மற்றும் காட்டுப்புத்தூர் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். அதன் பிறகு, அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் விவசாயிகளை அழைத்துப் பேசி, காவிரி ஆற்றில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தடுப்பணை கட்டித்தருவதாக உறுதியளித்ததால், மோகனூரில் மணல் குவாரி செயல்பட விவசாயிகள் அனுமதித்தனர். ஆனால், அனுமதிக்கப்பட்ட 1 மீட்டர் ஆழத்துக்கு மேல் 30 அடி வரையிலும் மணல் அள்ளியதால் நீர்வள ஆதாரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, காட்டுப்புத்தூர் கொரம்பு வாய்க்காலைவிடக் காவிரி ஆறு 20 அடி ஆழம்வரை பள்ளமாகிவிட்டதால், மேட்டூரில் இருந்து 5,000 கன அடி தண்ணீர் ஏறிச்செல்ல முடியவில்லை'' என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதிக அளவு மணல் அள்ளியதாலும் விவசாயிகளின் தடுப்பணை கோரிக்கை நிறைவேற்றப்படாததாலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மோகனூரில் நடைபெற்று வந்த மணல் குவாரிக்குத் தடை விதிக்கக்கோரி போராட்டம் நடத்தினர். அதனால், அது செயல்படாமல் நிறுத்தப்பட்டது. ஆனால், தீடீரென்று தற்போது ஒருவந்தூர் கிராமத்தில் அரசு மணல் குவாரி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மணல் கொள்ளை எதிர்த்து போராட்டம்

இதுபற்றிப் பேசிய ஒருவந்தூர் நீரேற்றுப் பாசனச் சங்கத் தலைவர் செல்ல.ராசாமணி, ''அரசு, மணல் குவாரிக்கு அனுமதி வழங்கும் முன்பு... பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற வேண்டும். ஆனால், நடைபெறவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தவுடன் நாளிதழ்களில் விளம்பரப்படுத்தி இருந்தால், மக்கள் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்திருப்பார்கள். அதையும் செய்யவில்லை. ஆளும் கட்சியினர் தலையீட்டால்... அரசு, ஒருவந்தூர் கிராம மணல் குவாரிக்கு அனுமதி வழங்கி காவிரி ஆற்றில் ஏறத்தாழ 4 கி.மீ ஆற்றினுடைய தண்ணீர்ப்போக்கைத் தடைசெய்யும் வகையில் ஆற்றின் நடுவே தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையின் வழியாக இரவு நேரங்களில் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஆற்றில் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்படுகிறது. ஆக, ஒருவந்தூர் கிராமம் காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்கவேண்டியும் காட்டுப்புத்தூர் வாய்க்காலுக்கு நிரந்தர கொரம்பு அமைக்கவேண்டியும், கடந்த இரண்டு ஆண்டுகளாக மோகனூர் ஆற்றில் 30 அடிவரை மணல் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், முறைகேடுகளுக்குப் பாதை அமைத்து கொடுத்தவர் மீதும் பொதுப்பணி அதிகாரிகள் மீதும் அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் வைக்கிறோம். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அரசு மணல் குவாரியைச் செயல்படுத்தலாம் என்று 12.6.2017 அன்று மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தோம். பின், 13.6.2017 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன் பிறகும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 16.6.2017 அன்று மணல் குவாரியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால், பொதுப்பணித் துறை அலுவலர்களும் வருவாய்த் துறை அலுவலர்களும் எங்களை அழைத்துப் பேசாமல் காவல் துறையின் துணையைக்கொண்டு மணல் குவாரியில் பணிபுரிந்த அரசு அலுவலர்களைப் பணிபுரிய விடாமல் தடுத்து நிறுத்தியதாக எங்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். பிறகு, 20.6.2017 அன்று தமிழக முதல்வரையும் மின்சாரத் துறை அமைச்சரையும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினரையும் சந்தித்து எங்களது கோரிக்கை நிறைவேறும்வரை மணல் குவாரியை நிறுத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டோம். அவர்களும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஒருவந்தூர் அரசு மணல் குவாரி செயல்படுவதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என கிராம மக்கள் முன்னிலையில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசு கண்டுகொள்ளாவிட்டால், இனி மனிதச் சங்கிலி போராட்டம், மணல் குவாரிக்குள் இறங்கி உள்ளிருப்புப் போரட்டம் என எங்களது போராட்டம் தொடரும்'' என்றார்.

தமிழக அரசு இவர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement