‘ஆர்.டி.ஐ. ஆயுதத்துக்குப் பயம் வேண்டாம்!’ துணைவேந்தர் துரைசாமிக்கு முன்னாள் துணைவேந்தர் ஆலோசனை

சென்னைப் பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தராகப் பதவியேற்றிருக்கிறார் பேராசிரியர் துரைசாமி. இவருக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் பேரவையின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய, அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி "உங்களது செயல்பாட்டை முடக்குவதற்குப் பல பக்கங்களில் இருந்தும் ஆர்டிஐ போடுவார்கள். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். சிறப்பாகச் செயல்படுங்கள்" என்று வாழ்த்துரை வழங்கியதோடு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். 

துணைவேந்தர்

"ஒன்றரை வருடங்களாகத் தேடி உங்களைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். நீங்கள் 44-வது பல்கலைக்கழக துணைவேந்தராகக் கிடைத்து இருக்கிறீர்கள். நான்கு கூட்டல் நான்கு என்றால் கூட்டு எண் 8 என்று வருகிறது. இது சனி பகவானுக்கு உரிய எண். அவருக்கு நல்லது செய்தால் நல்லது கிடைக்கும். தீமை செய்தால் அதைச் செய்தவர்களுக்கே திரும்பும். இது பகவானின் அருள். நல்லதை மட்டுமே எடுத்துக்கொண்டு பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துங்கள்" என்று வாழ்த்தியவர், "நீங்கள் எந்த ஒரு நபரின் எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்திருக்கிறீர்கள். ஆனால், உங்களிடம் அனைவரும் எதிர்பார்ப்பது பல்கலைக்கழகத்தின் நிலையை உயர்த்த வேண்டும் என்பதை மட்டும்தான். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து பல்கலைக்கழகத்தை மூன்று ஆண்டில் உயர்ந்த நிலைக்கு எடுத்து 160 வருடப் பல்கலைக்கழகத்துக்குப் பெருமை சேருங்கள். 

துணைவேந்தர்மூன்று வருடங்களில் உங்களுடைய உடல்நலனும், உங்கள் சொந்த வளங்களையும், உங்களுடைய குடும்பத்துடன் செலவிடும் நேரமும் போன்றவற்றை எல்லாம் இழந்து விடுவீர்கள். ஆனால், உங்களுக்கு வரும் தடைக்கற்களையும் படிக்கட்டுகளாக மாற்றிக் காட்டுங்கள். 

நீங்கள் நிறைய அறிவியல் இதழ்களில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி இருக்கிறீர்கள். உங்களிடம் பொருள், இடம், கருவி, காலம் என்று எல்லாம் சிறப்பாக இருக்கிறது. வினைத் திட்பம் மட்டுமே சிறப்பாகச் செயல்படுத்திட வேண்டும். ஓர்ந்துகண் ணோடாது செயல்பட வேண்டும். உங்களுக்கு எதிர்ப்பு இருந்தால் வளர்ச்சி இருக்கிறது என்று அர்த்தம். எதிர்ப்பவர்களைப் பற்றி கவலைப்படத்தேவையில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு பேராசிரியர்களிடமிருந்து, பணியாளர்களிடமிருந்தும் பூங்கொத்துகளாக வர வேண்டும். 

உங்களுக்குப் பிரச்னை கொடுக்க வேண்டும் என்றால் பலரும் ஆர்டிஐ ஆயுதத்தை எடுத்து விடுவார்கள். ஆர்டிஐ என்பது தகவல் வழங்கல் மட்டுமே. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். ஆனால், ஆர்டிஐ கண்டு பயப்பட வேண்டியதில்லை. உங்களுடைய பல்கலைக்கழகத்தின் அனைத்துச் செயல்பாடுகளையும், விவரங்களையும் இணையதளத்தில் அறிவித்து விடுங்கள். அதன் பின்பு ஆர்டிஐ வந்தால் இணையதளத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று பதிலளித்தால் போதும்" என்று ஆலோசனை வழங்கினார் பேராசிரியர் வணங்காமுடி. 

துணைவேந்தர்சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி "எனக்கு மூன்று ஆண்டுகளே போதுமானது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் சென்னைப் பல்கலைக்கழகத்தை முதல் ஐந்து இடத்திலிருந்து பத்து இடங்களில் இடம்பெற வைக்க வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. இதற்காக பத்து அம்ச கொள்கையைக் கடைப்பிடிக்க உள்ளேன். எனக்கென்று தனிப்பட்ட அஜெண்ட்டாக்கள் எதுவும் கிடையாது" என்றவர், 

பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரி முதல்வர்களுக்கும் சில கோரிக்கை வைத்தார். 

"நான் யேல் பல்கலைக்கழகத்திலும், பாரிஸ் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், அங்குள்ள துறைத் தலைவர்களையும், உயர்பொறுப்பில் இருப்பவர்களையும் வருடத்தில் ஒரு முறைதான் சந்திப்போம். உதவிக் கேட்டும், பிரச்னைகளையும் அவர்களுடைய அறையில் சந்திப்பை நிகழ்த்துவதில்லை. அந்த முறையை இங்கும் கொண்டு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். 

பேராசிரியர்களும், முதல்வர்களும் துணைவேந்தரைச் சந்திக்கும்போது எதிர்பார்ப்புகளோடு வர வேண்டாம். பிரச்னையை கொண்டு வரும்போது அதற்கான தீர்வுகளோடு வாருங்கள். முதல் நாளில் கடிதம் கொடுத்து விட்டு அடுத்த நாளிலேயே துணைவேந்தர் அலுவலகத்தில் வந்து நிற்பதையும் தவிர்க்கவும். உங்களது பிரச்னைக்குத் தீர்வு காண இரண்டு மூன்று வாரக்கால நேரத்தை வழங்குங்கள். அப்போதுதான் உங்களது கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்க முடியும். 

பேராசிரியர்கள் ஒருவரை மற்றவர்கள் குறைசொல்லி துணைவேந்தர் அலுவலகத்துக்கு வர வேண்டாம். இதற்காக ஆற்றலை ஆக்கபூர்வமான செயல்களுக்காகச் செலவிடுங்கள். செயல்படலாம். நீங்கள் என்னுடைய கருத்துகளுக்கு எதிர்கருத்துகளைக்கொண்டிருந்தாலும் அதனை நேரடியாகச் சொல்லலாம். அந்தக் கருத்தையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு உதவியாக இருக்கும். 

தற்போது பேராசிரியர் பணியில் இருப்பவர்கள் 75% கற்பித்தலுக்கும், 25% தானே முன்வந்து பல்கலைக்கழக செயல்பாட்டிலும், மாணவர்களுக்குப் பயனுள்ள செயல்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய திறன் சார்ந்த செயல்களுக்கு அனைத்து வகையிலும் ஊக்கமளிக்கும் வகையில் செயல்பட நான் தயாராக இருக்கிறேன்" என்கிறார் துணைவேந்தர் துரைசாமி.

மூன்று ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தை இந்திய அளவில் உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்வேன் என்று திட்டங்களோடு களம் இறங்கி இருப்பவருக்கு வாழ்த்துச் சொல்லி விடைபெற்றோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!