பிக்பாஸ் ஜூலியானா தெரியும்... கதிராமங்கலம் பவித்ரா, நெடுவாசல் அமுதா தெரியுமா?! | Yes, We Know Julie. Do We Know Pavithra and Amutha?

வெளியிடப்பட்ட நேரம்: 09:52 (30/06/2017)

கடைசி தொடர்பு:16:06 (30/06/2017)

பிக்பாஸ் ஜூலியானா தெரியும்... கதிராமங்கலம் பவித்ரா, நெடுவாசல் அமுதா தெரியுமா?!

பவித்ரா, அமுதா மற்றும் ஜூலியானா

முகநூல் சுவர்கள் எங்கும் ஜூலியானாவுக்கு எதிரான வன்ம வார்த்தைகள் விரவிக்கிடக்கின்றன. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் ஐகானாக எந்த முகநூல் சமூகத்தால் சித்தரிக்கப்பட்டாரோ... அதே முகநூல் சமூகம் அவரை வசவு வார்த்தைகளால் அர்ச்சிக்கிறது. 10 லட்சம் பேர் குழுமியிருந்த ஒரு போராட்டத்தில் தம் வசதிக்காக, புனவியத்துக்காக ஒருவரை முன்னிறுத்தியது. பின் அவர், பொதுப்புத்தியின் விருப்பங்களுக்கேற்ப நடந்து கொள்ளவில்லை என்று அவரை மெய்நிகர் உலகத்தில், தினம் தினம் கொன்றுகொண்டிருக்கிறது. சரி... மெரினாவிலிருந்தும், பிக்பாஸிலிருந்தும் கொஞ்சம் வெளியே வாருங்கள். ஜூலியானாக்களைக் கடந்து களத்தில் நிற்கும் சில பெண்களைச் சந்தியுங்கள்!

பவித்ராவின் புரிதலும்... அமுதாவின் போராட்டமும் :

பவித்ராவை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பூம்புகாரிலிருந்து கல்லணை நோக்கி கண்ணகி சென்றப் பாதையில் இருக்கிறது பச்சையம் பூசிய கதிராமங்கலம் கிராமம்! இங்குதான் ஓ.என்.ஜி.சி எரிவாயு எடுக்கத் துடிக்கிறது. ''எங்கள் ஊரை உங்கள் கொடிய நகங்களைக் கொண்டு கீறாதீர்கள்'' என்றப் போராட்ட முழக்கத்தோடு அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் கதிராமங்கலம் மக்களில் ஒருவர்தான் பவித்ரா; இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவரும் மாணவி. அண்மையில், இந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, பவித்ராவைச் சந்திக்க நேரிட்டது. ஓர் உரையாடலில், எதேச்சையாக அவரிடம், “ஏன் பவித்ரா எரிவாயு திட்டத்தை எதிர்க்கிறீர்கள்..? வளர்ச்சி வேண்டாமா... துபாய் போல உங்கள் ஊர் வளர வேண்டாமா...?” என்று  கேட்டோம். வெடித்துவிட்டார்  பவித்ரா. வார்த்தைகளைக் கோபத்தால் நிரப்பி, எளிய மொழியில் அவர் சொன்னது இதுதான்... 

“ஹூம்... இவர்கள் எண்ணெய் எடுக்க இன்று வரவில்லை.... கடந்த 30 ஆண்டுகளாகவே இங்கே எண்ணெய் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியானால், இந்நேரம் எங்கள் ஊர் வளர்ந்திருக்க வேண்டும்தானே... துபாயாக மாறி இருக்க வேண்டும்தானே... மாறியதா என்ன? நீங்களே ஊரை ஒரு பார்வைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். எங்கள் ஊரில்தான் எரிவாயு எடுக்கிறார்கள், குறைந்தபட்சம் இந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு வேலையாவது கொடுத்து இருக்கிறதா ஓ.என்.ஜி.சி என்றால், அதுவும் இல்லை. 
ஊர் துபாயாக மாறும்... சுபிக்‌ஷமடையும் என்று சொல்வதெல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை. இவர்கள் இந்த ஊரையேப் பாலையாக்கப் போகிறார்கள். அதற்காகத்தான் துபாயாக மாறும் என்று சொல்கிறார்களோ என்னவோ...? கதிராமங்கலம்தான் எங்கள் அடையாளம். எங்கள் அடையாளத்தை அப்படியே விட்டுவிடுங்கள்... துபாயாக மாற்றுகிறோம் என்று ஏமாற்று மொழியில் எங்கள் ஊரை நாசம் செய்யாதீர்கள்.” என்றவர், பொருளாதாரக் கணக்குகளைப் பட்டியலிடத்தொடங்கினார்.

“இந்த ஊரில் இன்றும் பெரும்பாலானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது வேளாண்மைதான். இன்றும் எங்கள் ஊரின் பொருளாதாரம் வேளாண் பொருளாதாரம்தான். அதை சிதைத்துவிட்டு நீங்கள் எங்களைக் காவிரி அகதிகளாக எங்கே அலையவிடத் திட்டமிட்டிருக்கிறீர்கள்...?'' என்கிறார் கோபமாக. 

பவித்ராவுக்கு ஆடம் ஸ்மித், மார்க்ஸ் எல்லாம் தெரியாது. ஆனால், எரிவாயு திட்டத்தினால் தன் ஊர் நாசம் ஆகிறது என்றவுடன் களத்துக்கு வந்தார். மக்களுடன் முன் வரிசையில் நிற்கிறார். 

நெடுவாசல்

அமுதா. பொறியியல் பட்டதாரி. நெடுவாசல் போராட்டத்தில், வீரியமாக நிற்கும் பெண்.  நெடுவாசலில் அவரைச் சந்தித்தபோது, “தேசத்தின் வளர்ச்சிக்காக இந்த சேதத்தைக்கூட பொறுத்துக்கொள்ள மாட்ட்டீர்களா...? இடத்தை ஓ.என்.ஜி.சி-க்கு கொடுத்துவிட்டு நீங்கள் படித்து... நகரங்களுக்குப் புலம்பெயர வேண்டியதுதானே...'' என்ற நம் கேள்விகளுக்கு மிகத் தெளிவாகப் பதில் சொல்கிறார்.

“நீங்கள் வளர்ச்சி என்று எதனைச் சொல்கிறீர்கள். நான் பொறியியல் பட்டதாரி... 2013-ல் ஒரு வேலைக்காகச் சென்னை சென்றேன். எனக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள் தெரியுமா... 6,000 ரூபாய். அதை வைத்துக்கொண்டு அந்த மாநகரத்தில் என்ன செய்ய... எப்படி வாழ...? திரும்பிவந்துவிட்டேன். நான்  இப்போது என் கிராமத்தில் விவசாயம் செய்கிறேன். நிறைவாக பொருள் ஈட்டுகிறேன். எல்லாவற்றையும்விட சொந்த ஊரில் ஆரோக்கியமாக வாழ்கிறேன். ஆனால், நீங்கள் வளர்ச்சி என்ற பெயரில், எங்களை நோய் நொடியுடன், நகரத்தில் அகதியாக திரியவிடத் திட்டம் தீட்டுகிறீர்கள். நாங்கள் நியாயமான கேள்வி எழுப்பினால்... வளர்ச்சி என்கிறீர்கள். உண்மையில் வளர்ச்சியின் பெயரால்... சொந்த நாட்டு மக்கள் மீது நீங்கள் போர்தான் தொடுக்கிறீர்கள்” என்று தன் சொந்த அனுபவத்திலிருந்து தரவு எடுத்துப் பேசினார் அமுதா.

 கற்றக் கல்வி மக்களுக்காகத்தான் என்று களத்தில் வீரியமாக நின்று கொண்டிருக்கிறார்  அமுதா

தாராளமயமும் ஜூலியானாவும் :

ஜூலியானா

தாராளமயத்துக்கு எந்தப் புனிதங்களும் இல்லை. அது எல்லாவற்றையும் உள்வாங்கிச் செரித்து வீங்கும். வளர்ச்சிக்கான வளர்ச்சி என்று முன்னோக்கி அனைத்து மாண்புகளையும் ஏறி மிதித்துச் செல்லும். இன்று அதன் வேகத்துடன் முட்டி மோதி சிராய்ப்புடன் நின்று கொண்டிருக்கிறார் ஜூலியானா. தாராளமயத்தின் பிரதிநிதியான பிக் பாஸுக்கு ஜூலியானாவின் பிரபல்யம் தேவைப்பட்டது. அந்த பிரபல்யம் எதனால் ஏற்பட்டது என்ற அதன் காரணக்கூறுகள் எதுவும் பிக்பாஸுக்குத் தேவையில்லை. அந்த பிரபல்யத்தை வணிகமாக்க நினைத்தது. அதை உள்வாங்கிச் செரித்து முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுதான் தாராளமயத்தின் அரசியல். நாம் இந்த வணிகத்தையும், இந்த பொருளாதாரக் கூறுகளையும் புரிந்துகொண்டு அதனோடு பிக்பாஸைப் பொருத்திப்பார்க்காமல், தட்டையாக விமர்சனம் செய்தோமானால், நம் விமர்சன வரிகளிலிருந்தும் ஏதேனும் வாய்ப்பைத் தேடும் தாராளமயம். 

வெயிலிலும், தடியடி அச்சுறுத்தல் மத்தியிலும் களத்தில் இன்னும் எத்தனையோ பவித்ராக்களும், அமுதாக்களும் நின்றுகொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணை மீட்க, மக்களை மீட்கப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அக்காக்களையும் தங்கைகளையும் அடையாளம் காணாமல், அவர்களுக்குத் துணை நிற்காமல், இன்னும் பிக்பாஸைப் பற்றி மட்டும்தான் விவாதிப்போம் என்றால், ஜூலியானா மட்டும் இல்லை... நாமும்தான் பிக்பாஸின் பலியாடுகள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்