Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“பள்ளிக்கூடம் போறதுக்கு பஸ் விடுங்க சார்!” மதுரை கலெக்டரிடம் மாணவர்கள் வேண்டுகோள்

அரசுப் பள்ளி 

ஏழைகளின் ஒரே நம்பிக்கை, கல்வி. தனக்குக் கிடைக்காத கல்வி, தங்கள் குழந்தைகளுக்குக் கிடைத்து, அவர்களின் எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டும்' என்பதுதான் கிராமத்துப் பெற்றோர்களின் அதிகபட்ச கனவு. ஆனால், கண்களுக்கு எட்டிய கல்வி, ஒரு சிலரின் அலட்சியத்தால், கைக்கு வராமல் போய்விடுமோ என்ற வேதனை உண்டாகிறது. 

மதுரை, கொட்டாம்பட்டி அருகே இருக்கிறது புதுப்பட்டி மற்றும் சிலம்பகோன்பட்டி. இங்கிருந்து கொட்டாம்பட்டிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கச் செல்கிறார்கள். இந்தக் கிராமங்கள் இருப்பது மலைப்பாங்கான பகுதி என்பதால், சரியான போக்குவரத்து வசதியில்லை. அரசுப் போக்குவரத்து பேருந்து இரண்டு முறை மட்டுமே வந்துச்செல்கிறது. அதுவும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் நேரத்துக்கு ஏதுவாக இல்லை. காலையில் 10 மணிக்குப் புதுப்பட்டியிலிருந்து பேருந்து கிளம்புவதால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல 11 மணி ஆகிவிடுகிறது. மாலை கொட்டாம்பட்டியிலிருந்து புதுப்பட்டிக்கு மூன்று மணிக்கே கிளம்பிவிடுகிறது. இதனால், பள்ளி முழுமையாக முடியும் முன்பே வீட்டுக்குச் செல்லும் நிலை. இதனால், போக நான்கு கிலோமீட்டர், வீடு திரும்ப நான்கு கிலோமீட்டர் என தினமும் எட்டு கிலோமீட்டருக்குப் பல மாணவர்கள் நடக்கும் சூழ்நிலை. எனவே, பேருந்துகளின் நேரத்தை மாற்ற வேண்டும் எனப் பள்ளி மாணவர்களே களத்தில் குதித்துள்ளனர். 

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்த மாணவர்களிடம் பேசினோம். ''எங்கள் ஊரில் கல்வி அறிவு மிகவும் குறைவு. எங்கள் ஜெனரேஷன்தான் தொடக்கக் கல்வியைத் தாண்டி வந்திருக்கிறோம். நன்றாகப் படித்து நல்ல வேலைகளுக்குப் போகும் கனவோடு ஏழ்மையைத் தாங்கிக்கொண்டு படிக்க வர்றோம். ஆனால், இது மாதிரியான பிரச்னையால் பலரும் படிப்பைப் பாதியிலேயே விடவேண்டியதா இருக்கு. ஒரு பக்கம் பொருளாதாரம் வாட்டினால், இன்னொரு பக்கம் இதுமாதிரி விஷயங்கள் கொடுமைப்படுத்துது. நாங்கள் பள்ளிக்குப் போகும் நேரத்துக்கு பஸ் கிடைக்க ஏற்பாடு செய்யணும். காலையில் எட்டு முப்பதுக்குப் புதுப்பட்டியிலிருந்தும், சாயந்திரம் ஐந்து மணிக்குக் கொட்டாம்பட்டியிலிருந்தும் பஸ் கிளம்பினால் போதும். எங்களின் கல்விக்குச் செய்யும் மிகப் பெரிய உதவியா இருக்கும்'' என்கிறார் ஒரு மாணவர். 

அரசுப் பள்ளி

மாணவிகளின் நிலையோ இன்னும் சவாலானது. ''எங்களில் பலரும் பத்தாம் வகுப்புப் படிக்கிறோம். பள்ளிக்குச் சரியான நேரத்தில் போக முடியாததால் பாடங்களை மிஸ் பண்றோம். நடந்தே போறதால், சிலர் பாதி வழியிலேயே மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க. மாதவிலக்கு நேரத்தில் நடந்து வர்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. வழியில் கேலி, கிண்டல்களையும் சமாளிச்சாகணும். இதனால், படிப்பில் கவனம் செலுத்தவே முடியலை. இதுக்கெல்லாம் பயந்து சில பெற்றோர், 'பொட்டப்புள்ள பாதுகாப்புதான் முக்கியம்; படிச்சது போதும்'னு சொல்றாங்க. எங்களுக்கு ரொம்ப வேதனையா இருக்கு. எங்கள் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் மனசுலவெச்சு அதுக்கு ஏற்ற மாதிரி பேருந்துகளை விடணும்னு கேட்டுக்கறோம்'' என்கிறார்கள். 

மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்துவந்திருந்த டவ் (DOW) அறக்கட்டளையைச் சேர்ந்த தாமரை, ''நான் வெளியூரில் வொர்க் பண்றேன். இந்தக் கிராமத்துக்கு மாணவர்களை எனக்கு முன்னாடியே தெரியும். அதனால், இவங்க பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கணும்னு நினைச்சேன். பெற்றோர்களின் அனுமதியோடு பசங்களைக் கூட்டிக்கிட்டு கலெக்டர் ஆபீஸுக்கு மனு கொடுக்க வந்திருக்கேன். இதுக்கு முன்னாடியே மேலூர் போக்குவரத்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவகங்களில் மனு கொடுத்திருந்தோம். எந்தப் பயனும் இல்லைன்னுதான் இங்கே வந்தோம். ரொம்ப நேரம் காத்திருந்து கலெக்டரைச் சந்திச்சோம். சில மாணவர்களைக் கூப்பிட்டு பிரச்னையைக் கேட்டுக்கிட்டார். விரைவில் நடவடிக்கை எடுக்கிறதா சொல்லியிருக்கார். நம்பிக்கையோடு காத்திருக்கோம். இதில் பல மாணவர்களின் எதிர்காலம் இருக்கிறதை அதிகாரிகள் உணரணும்'' என்றார் எதிர்பார்ப்பு நிறைந்த குரலில். 

அரசுப் பள்ளி மாணவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்றட்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close