வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (30/06/2017)

கடைசி தொடர்பு:13:12 (30/06/2017)

மருத்துவத்துறை உயிரைப் பறிக்கும் துறையாகச் செயல்படுகிறது..! விஜயபாஸ்கரை விளாசும் மு.க.ஸ்டாலின்

'அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் செயல்படும் மருத்துவத்துறை, உயிரைப் பறிக்கக்கூடிய துறையாகச் செயல்படுகிறது' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 


சென்னை கொளத்தூர் தொகுதியில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'எனது சொந்தச் செலவில் பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்திவருகிறேன். கொளத்தூர் தொகுதியில் இருக்கும் அரசுப் பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்குத் தேவையான மடிக்கணினி, ஜியோமெட்ரி பாக்ஸ், வாட்டர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டன.

மேலும், பள்ளிகளில் மாணவர்கள் உட்காருவதற்கான மேஜை-சேர் உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெறும் ஆட்சி, குதிரைப் பேரத்தால் நடைபெறும் ஆட்சி. இந்த ஆட்சியில், எந்தத் துறை தொடர்பாக எழும் புகார்கள்குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. அமைச்சர் விஜயபாஸ்கர், குட்கா பொருள்களுக்கு பணம் வாங்கியது தொடர்பாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம்குறித்து அவர் மீதும் காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தலைமையில் செயல்படும் மருத்துவத்துறை உயிரைப் பறிக்கக்கூடிய துறையாகச் செயல்படுகிறது' என்று தெரிவித்தார்.