வெளியிடப்பட்ட நேரம்: 12:23 (30/06/2017)

கடைசி தொடர்பு:12:32 (30/06/2017)

‘உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்!‘ - சசிகலாவை நெருக்கும் குடும்ப உறவுகள் #VikatanExclusive

சசிகலா

அ.தி.மு.கவில் பெருகும் அணிகளால் கலவரத்தில் ஆழ்ந்துள்ளனர் அக்கட்சியின் தொண்டர்கள். 'குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க கட்டுப்பாட்டுக்குள் அரசு சென்றுவிடும். அமைச்சர்கள் அனைவரும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இன்னும் 20 நாள்களில் நிலைமை மாறும்' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். 

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்துவிட்டு வந்ததில் இருந்தே, அ.தி.மு.கவின் மூன்று அணிகளுக்குள்ளும் முட்டல் மோதல்கள் அதிகரித்துவிட்டன. 'சசிகலா உத்தரவின் பேரில், பா.ஜ.க வேட்பாளரை ஆதரிக்கிறோம் என என தம்பிதுரை ஏன் பேச வேண்டும்?' என எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏ-க்கள் கொந்தளிக்கத் தொடங்கினர். இதற்குப் பதில் அளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ-வான வெற்றிவேல், ‘அ.தி.மு.கவின் சட்டவிதிகள் தெரியாத ஜென்மங்கள் எல்லாம், கட்சியில் உலவிக் கொண்டிருக்கின்றன' எனக் காட்டமாக விமர்சித்தார். கட்சியிலும் ஆட்சியிலும் தனக்கான பிடியைத் தளர்த்திக் கொள்ள எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. கூடவே, கொங்கு விவசாயிகள் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு தென்னையில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்துக்கு அனுமதியும் பெற்றுத் தந்துவிட்டார்.

தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாட இருக்கிறார்" என விவரித்த கொங்கு மண்டல அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், "டெல்லியில் பிரதமரை சந்தித்துவிட்டு வந்ததில் இருந்தே, மிகுந்த உற்சாகத்துடன் வலம் வருகிறார் முதல்வர். அண்மையில் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தபோது, 'நல்லமுறையில் எங்கள் ஆட்சி தொடர உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்' என அவர் கூறியதை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டார். 'சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருந்து கட்சியை மீட்டால்தான், தொண்டர்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்கள்' என்பதை அவர் உணர்ந்து வைத்திருக்கிறார். 'உள்கட்சி குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தம்பிதுரை ஆதாயம் அடைய நினைக்கிறார். அவரையும் நாம் எதிர்த்தாக வேண்டும்' என கொங்கு அமைச்சர்கள் பேசி வருகின்றனர். ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் வராது என்பதில் தெளிவாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்றார். 

எடப்பாடி பழனிசாமிஆனால், “இந்த விவகாரத்தில் டெல்லியின் மனநிலை வேறு மாதிரியாக இருக்கிறது" என்கிறார்கள் பா.ஜ.க ஆதரவு அரசியல் பிரமுகர் ஒருவர். “தமிழகத்தின் அரசியல் சூழ்நிலைகளை தங்களுக்குச் சாதகமானதாக மாற்றிக் கொள்ளும் வேலையில் பா.ஜ.க தலைமை ஈடுபட்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் வரையில் பொறுமையாக இருக்கவும் முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு தமிழகத்தில் சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளனர். குறிப்பாக, அமைச்சர்களின் ஊழல் போக்குவரத்துகள், சட்டம்- ஒழுங்கு உள்பட பல விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். தமிழகத்தில் நடப்பதை தலைமைச் செயலகத்தில் உள்ள சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலம் ஆளுநர் அலுவலகம் குறிப்பெடுத்து வருகிறது. இதுகுறித்து, டெல்லியின் கவனத்துக்கு உடனுக்குடன் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. துணைவேந்தர் நியமனம், அரசு ஒப்பந்தம், அமைச்சர்களின் தன்னிச்சையான நடவடிக்கைகள் என அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. அமைச்சர்களின் தொலைபேசி எண்கள், உதவியாளர்களின் எண்கள் என அனைத்தையும் ட்ரேஸ் செய்கின்றனர்.

தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு சாதகமான வானிலை அமையும்போது, தமிழக அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் முடிவில் உள்ளனர். அ.தி.மு.கவுக்கு இரட்டை இலைச் சின்னம் பெற்றுத் தருவதன் மூலம், பா.ஜ.கவுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. மாறாக, 'தாமரை மலர வேண்டும்' என்றுதான் தொண்டர்கள் விரும்புகின்றனர். முன்பு சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வத்தை கூர் தீட்டினார்கள். தற்போது எடப்பாடி பழனிசாமியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சசிகலாவை வீழ்த்த எடப்பாடி பழனிசாமியால் முடியும் என உறுதியாக நம்புகிறது பா.ஜ.க தலைமை. சசிகலா குடும்பம் ஓரம்கட்டப்பட்ட பிறகு, அமைச்சர்களின் ஊழல் விவகாரங்களைக் கிளற உள்ளனர். இவை அனைத்தும் படிப்படியாக நடக்க உள்ளது. ஜூலை 17 குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் வேறு கோணத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும்" என்றார் விரிவாக. 

“சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள திவாகரன் வீட்டில் வைத்துத்தான், அ.தி.மு.கவின் உள்கட்சி விவகாரங்கள் பேசப்பட்டு வந்தன. பத்து நாள்களுக்கு முன்பு வரையில் மன்னார்குடி தரப்பினரோடு நட்பு பாராட்டி வந்த எடப்பாடி பழனிசாமி, ஒரே நாளில் மனம் மாறியதை மன்னார்குடி உறவுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன்பின்னணியில், 'பா.ஜ.கவின் கைங்கர்யம் உள்ளது' என்பதை உணர்ந்து, அமைதியாக உள்ளனர். 'அரசுக்கு எதிராக எதாவது பேசப் போய், கைது நடவடிக்கையில் இறங்கிவிட்டால் என்ன செய்வது?' என்ற யோசனையில் உள்ளனர். 'ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்குவேன்' என உறுதியாகக் கூறிவிட்டார் தினகரன்

அண்மையில், சசிகலாவிடம் பேசிய குடும்ப உறுப்பினர் ஒருவர், ‘பொதுக்குழுவால் சட்டப்படி தேர்வு செய்யப்பட்ட பொதுச் செயலாளர் நீங்கள். அனைத்து அதிகாரங்களும் உங்களிடம்தான் உள்ளன. நம்மை எதிர்த்துப் பேசும் நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி வையுங்கள். நாம் ஏற்கெனவே உறுதியளித்த எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி கொடுங்கள். உங்களிடம் இருந்து அறிக்கை வந்தால்தான் நிலைமை மாறும்’ என வலியுறுத்தியுள்ளனர். சசிகலாவின் பதிலுக்காக காத்திருக்கின்றனர் குடும்ப உறுப்பினர்கள்" என்கிறார் மன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர்.


டிரெண்டிங் @ விகடன்